பிச்சையப்பா பிள்ளை
நாகர்கோவில். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் இல்லத் திருமண விழா. பிரபல நாதஸ்வர வித்வான் வாசித்துக் கொண்டிருந்தார். நேரம் போனதே தெரியவில்லை. வெகுநேரம் வாசித்துக் களைத்த வித்வான், என்.எஸ்.கிருஷ்ணனைப் பார்த்து, "என்ன முடித்துக் கொள்ளலாமா?" என்று ஜாடையாகக் கேட்டார்.

உடனே எழுந்துகொண்ட என்.எஸ். கிருஷ்ணன் மேடைக்கு வந்து, தன் மேல் அங்கவஸ்திரத்தை விரித்துப் பிடித்து, "பிச்சையப்பா.. இன்னும் கொஞ்சம் இசைப் பிச்சையப்பா.." என்றார். சபை ஆரவாரித்தது. என்.எஸ்.கே.வின் வேண்டுகோளை ஏற்றுக் கச்சேரியைத் தொடர்ந்தார் அந்த வித்வான்.

"அடேயப்பா, வள்ளலையே பிச்சை கேட்க வைத்துவிட்டாரே இந்த இசை மேதை!" என்றார் ரசிகர் ஒருவர்.

வள்ளலை, இசைக்காகக் கையேந்த வைத்த மாமேதை பிச்சையப்பா. குளிக்கரை சேதுப்பிள்ளைக்கு மகனாகப் பிறந்த பிச்சையப்பா, இளம்பருவம் முதலே இசையார்வம் மிகக் கொண்டிருந்தார். சித்தப்பா பெருமாள் பிள்ளையிடம் இசை பயின்றார். பெருமாள் பிள்ளையின் மகனான குளிக்கரை காளிதாஸ் பிள்ளையும் ஓர் இசைமேதை. இருவரும் சேர்ந்து பல கச்சேரிகள் செய்துள்ளனர். பெருமாள் பிள்ளை வீட்டுக்கு திருமருகல் நடேச பிள்ளை, கக்காயி நடராஜ சுந்தரம், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை ஆகியோர் வருவர். கச்சேரி செய்வர். அதைக் கேட்டுக் கேட்டு இசைஞானத்தை வளர்த்துக்கொண்டார் பிச்சையப்பா.

நாளடைவில் காருகுறிச்சி அருணாசலம், டி.என். ராஜரத்தினம் பிள்ளை போன்றோருடனும் வாசித்தார். மிகப் பிரபலமான பின்பும்கூட, சிதம்பரம் ராதாகிருஷ்ண பிள்ளை, எம்.எம். தண்டபாணி தேசிகர், திருப்பாம்பரம் சுவாமிநாத பிள்ளை, டி.எம். தியாகராஜன் போன்றோரிடம் பல உருப்படிகளைக் கற்றுக்கொண்டார். வாய்ப்பாட்டிலும் மேதைதான். தனக்கெனத் தனித்ததொரு பாணியில் 4 1/2 கட்டை சுருதியில் வாசிக்கும் திறமை பெற்றவர். நாதஸ்வரத்தில் 'தானம்' வாசிக்கும் திறமைபெற்ற சில கலைஞர்களில் இவரும் ஒருவர். சுவரங்களை அசைத்து வாசிப்பது இவரது தனிப்பாணி. நாகஸ்வராளி, நாராயணகௌளை, வந்தனதாரிணி, ஜயந்தசேனா, ஜயந்தஸ்ரீ, சாயாதரங்கிணி போன்ற அபூர்வ ராகங்களை அற்புதமாக வாசிப்பார். தமிழிசை இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டவர். சீர்காழி இசை மூவர், பாரதியார், பாரதிதாசன், பாபநாசம் சிவன், பெ. தூரன், கோபாலகிருஷ்ண பாரதி, தண்டபாணி தேசிகர், சிதம்பரம் ஸ்வர்ண வெங்கடேச தீக்ஷிதர் ஆகியோரது பாடல்களை நிறைய வாசித்துள்ளார். தேவாரம், திருவருட்பா, திருப்புகழ் போன்றவையும் இவரது கச்சேரிகளில் தவறாமல் இடம்பெறும். திருக்குறளைக்கூட ராகமாலிகையாய் வாசித்த பெருமை இவருக்குண்டு. மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகத்தை ராகமாலிகையில் இவர் வாசிக்கக் கேட்பது தனிச்சுகம். தோடி, ஷண்முகப்ரியா, கீரவாணி. ஹம்சவத்னி ஆகிய ராகங்களை மணிக்கணக்கில் வாசிப்பார். தோடியில் மட்டும் 30க்கு மேல் கீர்த்தனைகள் இவருக்குப் பாடம். பலமணி நேரம் அசராமல் தொடர்ந்து வாசிக்கும் உரம் பெற்றவர்.

Click Here Enlargeஎஸ்.எஸ். வாசன் பிச்சையப்பாவின் விசிறி. வாசனின் மகள் திருமணத்தில் ராஜரத்தினம் பிள்ளை, வீருசாமி பிள்ளையுடன் பிச்சையப்பா பிள்ளையின் நாதஸ்வரக் கச்சேரியும் நடந்தது. மயிலாப்பூர் அறுபத்துமூவர் விழாவுக்குக் கூடிய கூட்டத்தைவிட இந்தக் கச்சேரியைக் காண மக்கள் அதிகமாக வந்திருந்தனராம். ஊஞ்சல் பாட்டை எம்.எஸ். சுப்புலக்ஷ்மியும், எம்.எல். வசந்தகுமாரியும் இணைந்து பாட, ராஜரத்தினம் பிள்ளையும், பிச்சையப்பா பிள்ளையும் எதிர் வாசித்துப் புகழ்பெற்றனர். நாச்சியார்கோயில் ராகவ பிள்ளையின் தவிலோடு பிச்சையப்பா செய்த நாதஸ்வரக் கச்சேரி அக்கால ரசிகர்களின் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது. கல்கிக்கும் மிகப் பிடித்தமானவர் பிச்சையப்பா. கல்கி இவரை இலங்கையில் நடைபெற்ற பாரதி விழாவில் வாசிக்க வைத்தார். அந்த வகையில் கடல்கடந்து சென்று கச்சேரி செய்த முதல் நாதஸ்வர வித்வான் என்று இவரைச் சொல்லலாம். ஆவடி காங்கிரஸ் மாநாட்டு ஊர்வலம், உலகத்தமிழ் மாநாட்டு ஊர்வலம் ஆகியவற்றிலும் வாசித்த பெருமை இவருக்கு உண்டு.

ஒரு சமயம் நேரு அவர்களிடம், பிச்சையப்பாவை மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான என்.பி. சேஷாத்ரி அறிமுகப்படுத்தும்போது, "இவர் தமிழகத்தின் பிஸ்மில்லா கான்" என்று கூறினாராம். அதைக் கேட்டு வியந்த நேருவுக்கு அவரது மனங்கவர்ந்த பாடல்களை நாதஸ்வரத்தில் வாசித்துக் காண்பித்தார் பிச்சையப்பா. அதைச் சுவைத்த நேரு, அவரை மிகவும் பாராட்டி, நாதஸ்வரத்தை வாங்கி மடியில் வைத்துக்கொண்டு தடவிக் கொடுத்தாராம். "இதைவிடப் பாராட்டு என்ன இருக்க முடியும்" என்று வியக்கிறார் பிச்சையப்பா.

இவருடன் வாசித்தவர்களில் நாச்சியார்கோவில் ராகவ பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, டி.ஜி. முத்துக்குமாரசாமிப் பிள்ளை, வடபாதிமங்கலம் தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை, குளிக்கரை ராமகிருஷ்ண பிள்ளை போன்ற தவில் மேதைகள் முக்கியமானவர்கள். காருகுறிச்சி அருணாசலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், ஷேக் சின்ன மௌலானா, ஏ.கே.சி. நடராஜன் போன்றோரிடம் நட்பும் மதிப்பும் கொண்டவர் பிச்சையப்பா. இவரது பொறுப்பில் ஏற்பாடு செய்யப்படும் கச்சேரிகளில் இவர்களுக்கு வாசிக்க வாய்ப்பளித்து ரசிப்பார். "நான் தமிழ்நாட்டில் விரைந்து பிரபலமாக உதவியவர் குளிக்கரை பிச்சையப்பாவும், ஆலத்தூர் சுப்பையரும்தான்" என்பார் ஷேக் சின்னமௌலானா.

திருமுருக கிருபானந்த வாரியார், எம்பார் விஜயராகவாச்சாரியார் போன்றவர்கள் பிச்சையப்பாவின் நாதஸ்வரத்துக்கு விசிறிகள். அக்காலச் செல்வந்தர்கள் பலர் பிச்சையப்பாவை ஆதரித்தனர். தங்கள் பகுதிக்கு அவரை வரவழைத்து அவரது இசைக்கடலில் மூழ்கினர். 'குறவஞ்சி' என்ற திரைப்படத்தில் இவர் நாதஸ்வரம் வாசித்திருக்கிறார். திருவாவடுதுறை ஆதீன வித்வான், திருப்பதி தேவஸ்தான வித்வான், திருவையாறு தியாகராஜர் ஆராதனைக் குழுச் செயலாளர், இயல் இசை நாடக மன்ற உறுப்பினர், திருச்சி வானொலி நிலையக் குழு உறுப்பினர் எனப் பல பொறுப்புகளைத் திறம்பட வகித்தவர் இவர். ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், நேரு, லால்பஹதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, காமராஜர், அறிஞர் அண்ணா, மு. கருணாநிதி போன்றவர்களால் பாராட்டும் பரிசுகளும் பட்டங்களும் பெற்றவர் பிச்சையப்பா. அகில பாரதீய நாதஸ்வரச் சக்கரவர்த்தி, அவரையானந்த அருட்பெருஞ்செல்வன், கலைமாமணி, இசைச் செல்வம் என பல்வேறு பட்டங்களும் சிறப்புக்களும் பெற்றிருக்கிறார்.

இவருடைய சம்பந்தியான வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளையுடன் சேர்ந்து இவர் உருவாக்கிய, "பஞ்சரத்ன ராக மல்லாரி" இவரது வாழ்நாள் சாதனை ஆகும். திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவில் பஞ்சரத்ன ராக மல்லாரி வாசிக்கும் வழக்கத்தைக் கொண்டுவந்தவர் இவரே! இவருடைய புதல்வர் விஸ்வலிங்கம் வாய்ப்பாட்டுக் கலைஞர். சென்னை, பாண்டிச்சேரி வானொலி நிலையங்களில் பணியாற்றினார். பெண் வயிற்றுப் பேத்தி இசையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

வானொலிக்கும், தொலைக்காட்சிக்கும் நிறையக் கச்சேரிகள் செய்திருக்கிறார். சில கச்சேரிகள் இசைத்தட்டுக்களாக வெளிவந்துள்ளன. வெளிவராதவை இசைத்தட்டாக வந்தால் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கற்போருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

பிச்சையப்பாவின் சில பாடல்களை கீழ்கண்ட சுட்டியில் கேட்கலாம்:

இசையுலகில் என்றும் நினைவில் நிறுத்த வேண்டிய முன்னோடிக் கலைஞர்களுள் குளிக்கரை பிச்சையப்பா ஒருவர்.

பஞ்சாபகேசன்,
பெங்களூரு

© TamilOnline.com