எல்லாமே கொஞ்சம், கொஞ்சம்
அன்புள்ள சிநேகிதியே,

எனக்குக் கல்யாணமாகி 9 வருடங்கள் ஆகின்றன. எட்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளார். நாங்கள் அமெரிக்காவுக்கு வந்து 4 வருடங்கள் ஆகின்றன. என் கணவருக்கு அம்மா மற்றும் கல்யாணமான 4 சகோதரர்கள். இந்த 9 வருடங்களாக எங்களுக்குள் நிறைய பிரச்சனைகள். அவர் வீட்டார் என்னிடம் நேரிடையாகப் பேசமாட்டார்கள். அவருக்கு மின்னஞ்சல், தொலைபேசி அதுவும் அலுவலக முகவரிக்கு. இவர் போன் வீட்டிலிருந்து பேசமாட்டார். அலுவலகம், ஏதாவது கார் நிறுத்துமிடம் ஆகியவற்றிலிருந்து பேசுவார். மேலும், இவர் ஒரு குடிகாரர். போதையில் என்னை எத்தனை முறை அடித்திருக்கிறார். இதில் எதற்கெடுத்தாலும் பொய். பணவிஷயத்தில் என்னை ஏமாற்றுவது என்பது அவருக்குப் பிடித்த ஒன்று. கல்யாணமான புதிதில் சுமார் 5 இலட்சம் வரை அவர்களுக்குக் கொடுத்துள்ளார். அதில் எனக்குத் தெரிந்து சிலது, தெரியாதது பல. அவரைப் பொறுத்தவரை மனைவி, குழந்தைக்குச் சாப்பாடு, வீடு, உடை ஆகிய மூன்றோடு அவரது கடமை முடிந்து விடுகிறது என்று கருதுபவர். எனக்கு என் மகனுக்குக் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கருதுபவள். அந்த ஆசை ஒன்றும் பேராசை இல்லை என்று நினைக்கிறேன். நான் பலமுறை அவரிடம் எனக்கு இந்தக் குடிப்பழக்கமும், பணவிஷயத்தில் பொய் பேசுவதும் பிடிக்கவில்லை என்று பலமுறை கூறியுள்ளேன். ஆனாலும் அவர் மாறுவதாக இல்லை.

சில மாதங்களுக்கு முன்பு என் கணவர் இந்தியா சென்று வந்தார். அப்போது அவர் எனக்குத் தெரியாமல் அவர்களது சகோதரிகளுக்குப் பரிசுப் பொருட்களை அவரது நண்பனை ஏர்போர்ட்டில் கொண்டு தரும்படி ஏற்பாடு செய்தார். நான் எவ்வளவு முயன்றும் என்னை ஏர்போர்ட்டுக்கு வரவிடாமல் தடுத்துவிட்டார். நான் அவர் சென்ற பிறகு அவரது நண்பர் மூலம் கேட்டு அறிந்தேன். மேலும் என் கணவருக்கு அவரது அக்கா பையனுக்கு 10 லட்சம் அமெரிக்கா வருவதற்குத் தர வேண்டும் என்று ஆசை. இந்த ஆசை இவருக்கே எழுந்ததா, அல்லது அவர்கள் கேட்டார்களா என்பது தெரியாது. நான் இதை மறுத்து விட்டேன். அவர் வீட்டாருக்குக் கொடுத்தால் தப்பா என்ற கருத்து.

நான் அவர் ஊரிலிருந்து திரும்பியவுடன் என்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறவும், அவர் முதல் ஒப்புக்கொள்ள மறுத்தார். பிறகு எனது தொடர்ந்த விசாரிப்பினால் 40 நாட்களுக்குப் பிறகு உண்மையை ஒப்புக் கொண்டார். இதனால் பலத்த வாக்குவாதம். பிறகு அடிதடியில் முடிந்தது. அவர் என் தலைமுடியைப் பிடித்து பின் மண்டையில் தாக்கினார். அப்படி என்னை அடிக்கும் போது என் நெற்றி சமையல் மேடையின் ஓரத்தில் பட்டு இரத்தம் கொட்டியது. சமையலறையில் எங்குப் பார்த்தாலும் இரத்தம். நான் ஆம்புலன்சைக் கூப்பிட நினைத்த போது அவர் என்னைத் தடுத்துவிட்டார். பின்பு டாக்டரிடம் அழைத்துச் சென்றார். அலமாரியின் ஓரத்தில் இடித்துக் கொண்டதாகக் கூறினார். என் நெற்றியில் 5 தையல்கள். இது எனது நெற்றியில் இரண்டாவது தழும்பு. ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்தது மற்றொன்று.

ஒரு மாதம் கழித்து மறுபடியும் ஆரம்பித்தது விவாதம். எனது மனதில் ஏமாற்றியது ஒருபுறம். மறுபுறம் நெற்றியின் காயத்தின் வலி. ஒரு மதிய வேளையில் நான் அவரிடம் தாரளமாகப் பொய் சொல்வதைத் தவிர்த்து எவ்வளவு வேண்டுமானாலும் உங்கள் சகோதரிகளுக்குச் செய்யலாம். இது உங்கள் பணம், ஏன் என்னை ஏமாற்ற வேண்டும் என்றேன். மேலும் நான், அவன் என்ன உங்கள் பையனா, அவன்மேல் எதற்கு இவ்வளவு அக்கறை என்று சொல்லி ஒரு கண்ணாடி டம்ளரைத் தரையில் தூக்கி எறிந்தேன். அவருக்கு ஆத்திரம் வந்து வீட்டை விட்டுச் சென்றார்.

இரவு 10.30 மணிக்கு நன்றாகக் குடித்து விட்டு வந்து என்மேல் தன் ஆத்திரத்தைக் காட்ட ஆரம்பித்தார். தன்னுடைய பலத்தை எல்லாம் தன் கைமுட்டியில் திரட்டி என்னை குத்த முயன்றார். பின் குக்கரைக் காட்டி என்னைக் கொலை செய்யவும் தயங்க மாட்டேன் என்றார். பிறகு நான் ஓடிச்சென்று என் மகனுடன் படுத்துக் கொண்டேன். அங்கேயும் வந்து என்னை குத்த முயன்றார். பல்லை நறநற என கடித்துக் கொண்டார்.

எனக்கு ஒரே பயம். என்னை கொலை செய்தார் என்றார் என்றால் என் பெண் அநாதையாக விடுவாள். எனக்கு தற்போது தான் நெற்றியில் ஸ்டிச்சஸ் போட்டுக் கொண்ட வலி. மறுபுறம் நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவர் மீண்டும் குடிக்க காரேஜ் வரை சென்றிருக்கும் போது அமெரிக்கன் போலீசை உதவிக்கு அழைத்தேன். அவர்கள் அவரைக் கைது செய்து அடுத்த நாள் அவரை விடுவித்தனர். பிறகு 15 நாட்கள் கழித்து கோர்ட்டில் நான் என் மனுவைத் திரும்பப் பெற்றேன். அதனால் வழக்கு முடிந்தது.

இதோடு நின்றிருந்தால் நான் இதை எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆனால் தற்போது அவர் தான் குடித்து விட்டு என்னை அடிக்க வந்தது ஆகிய எதுவும் குற்றமில்லை என்றும் நான் போலீசை அழைத்ததுதான் குற்றம் என்றும் கூறுகிறார். அதானல் வீட்டிற்கு வரமுடியாது என்று கூறி நண்பனுடன் தங்கி வருகிறார். அவர் வீட்டிற்கு வருவதற்கு நான் இனிமேல் நடந்து கொள்ளும் விதத்தைப் பொறுத்தே உள்ளது எனவும் கூறுகிறார். மேலும் நான் செய்த தவறை உணரும்வரை அவர் வீட்டிற்கு வரமாட்டாராம்.

சகோதரி இப்போது கூறுங்கள். நான் போலீசை அழைத்தது தப்பா? எனது பயம் நியாமானதா இல்லையா? நான் என் பெண்ணின் மேல்படிப்பிற்கும் கல்யாணத்திற்கும் பணம் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசைக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?

இந்தச் சூழ்நிலையில் இவரிடம் விவாகரத்துப் பெற்று, இந்தியா சென்றுவிடலாம் என்றால் என் பெண்ணால் அங்கு படிக்க இயலுமா? என் மனதைப் பொறுத்தவரை நான் தவறு செய்தால்தானே உணருவதற்கு? தனியாக இங்கேயே வாழலாம் என்றால் அது என் பெண்ணின் மனதை பாதித்து விடுமோ என்ற அச்சம் மறுபுறம். இவருடன் சேர்ந்து வாழ்வது என்பது சாத்தியமா? எனக்கு எதுவும் புரியவில்லை. ஏன் என்னைக் கொலை செய்யும் அளவுக்கு அவருக்கு ஆத்திரம் வருகிறது. இந்த நிலையில் உள்ள எனக்கு எந்த முடிவு எனக்கும், என் பெண்ணிற்கும் நல்லது என்று நீங்கள் தான் கூற வேண்டும்.

இப்படிக்கு உங்கள் பதிலை
ஆவலுடன் எதிர்பார்க்கும் வாசகி
(பெயரை வெளியிட விரும்பவில்லை)

அன்புள்ள சிநேகிதியே

சமீபத்தில் ஒரு பெண்கள் கருத்தரங்கில் மட்டுறுத்துனராக (Moderator) இருந்தேன். ஆண்களிடம் பெண்களால் பொறுத்துக் கொள்ள முடியாத குறைகள் என்ன என்று விவாதித்தனர். நிறையப் பேர் 'குடிப்பழக்கம்' என்று சொல்லி வேதனைப்பட்டனர். அதற்குள் சிலர் "குடிப்பழக்கமே மேல். சின்ன வீடு வைத்திருப்பது இன்னும் மோசம்" என்றனர். ஒவ்வொருவரும் 'கோபக்கார கணவர்', 'சோம்பேறிக் கணவர்', 'மிரட்டும் கணவர்', 'அதிகாரம் செய்யும் கணவர்' என்று சொல்ல, கணவர்கள் தலைகள் உருண்டன. ஆண்கள் அதிகார வர்க்கம், பெண்கள் அடிபணியும் வர்க்கம் என்ற நிலை மாறி இப்போது பெண்கள் தங்கள் விருப்பு, வெறுப்புகளை ஆரம்பிக்கும் போது தொடங்குகிறது 'துவந்த யுத்தம்'.

உங்கள் கடிதத்தின் மூலம் நான் அறிந்து கொள்வது, வாழ்க்கையில் ஒரு முக்கியமான, நெருடலான கட்டத்தில் நீங்கள் இருக்கிறீர் கள். உங்கள் கணவரின் குடிபோதை நிலைமை + உங்கள் வாக்குவாதம் = உங்கள் உடல், மனம் காயம் -> போலிஸ் வருகை -> கணவர் சிறைவாசம். அவர் வெளியில் வந்தாலும் ஆழ்மனக் காயம், social stigma, அதனால் உங்கள் மேல் கசப்பு உணர்ச்சி, வெறுப்பு. தவிர உங்கள் மனதிலும் காயம், செயலிழந்து நிற்கும் நிலை, குழப்பம்...

உங்களை இந்த நிலைக்குச் செலுத்திய, உங்கள் கணவரிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.

குடிப்பழக்கம்
பொய் சொல்லுதல்
தன் குடும்பத்திற்குப் பண உதவி செய்தல்
உங்களிடம் பல விஷயங்களை மறைத்தல்
சண்டை போடுதல்
அடித்து, கொடுமைப்படுத்துதல்
இவ்வளவுதான் என்று நினைக்கிறேன்.

குடிப்பழக்கம் இருக்கும் கணவருடன் வாழ்வதே ஒரே போராட்டம்தான். (நான் சொல்வது, அளவுக்கு மீறிக் குடித்து தன் நிலை தெரியாமல் நடந்துக் கொள்பவர்களைப் பற்றி). அதைவிடப் பெரிய போராட்டம் அவரைத் திருத்த முயற்சி செய்வது. பெரும்பாலான இந்தியக் கணவன்மார்கள் எந்தக் கவுன்சலிங் அல்லது தெரபிக்கும் உடன்பட மாட்டார்கள். சண்டை போட்டால் அந்தப் பழக்கத்தை வேண்டுமென்றே அதிகரித்துக் கொள்வார்களே தவிரக் குறையாது. அந்தப் பழக்கத்தை மாற்றச் சாதுரியமும், சமாதானமும்தான் நிறையத் தேவை. சண்டை போடும்போது அவருடைய குற்றஉணர்ச்சி தற்காப்பு உணர்ச்சியாக வெளிப்பட்டு ஒன்று அவரைப் பொய் சொல்ல வைக்கும். அல்லது 'நீ யார் என்னை அடக்க?' என்பது போல உங்களை எதிர்த்து, உங்கள் கோபத்தை மேலும் கிளறிவிடச் செய்யும்.

குடிப்பது அவருடைய பழக்கம் என்றாலும், குடும்பத்திற்கு உதவி செய்வது அவருடைய பாசம், அக்கறையைக் காட்டுகிறது. Some people go overboard. உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை இருந்தாலும், நீங்கள் அவருடைய அந்தப் போக்கைச் சிறிதுதான் கட்டுப்படுத்தலாமே தவிர, முழுதாகத் தவிர்க்க முடியாது. தவிர்க்கவும் கூடாது என்பது என்பது தாழ்மையான அபிப்பிராயம்.

இந்தப் போலீஸ் விவகாரம் உங்கள் நடவடிக்கை சரியென்று உங்களுக்குத் தோன்றினாலும் உங்கள் உறவில் ஒரு பெரிய பிளவை ஏற்படுத்திவிட்டது. உங்கள் கணவரின் மனதில் உள்ள ஆழ்ந்த காயம் ஆறுவதும் மிகக் கடினம்.

இந்த நிலையில் நீங்கள் செய்யக்கூடியது ஒன்றுதான். உங்கள் கணவரை நீங்கள் அணுகமுடிந்தால் (அல்லது, அவர் நண்பரின் மூலம்) பரஸ்பர நட்புடன், ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கும் வாய்ப்பு இருக்கிறதா என்று பாருங்கள். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை:

தயவு செய்து எந்தப் பழைய சம்பவங் களையும் திருப்பிக் கொண்டு வந்து, எந்த நேரத்திலும் பேசாதீர்கள்.
அவருடைய நலத்தில் அக்கறையும், அவரிடம் பாசமும் இருந்தாலும் அதைச் சொல்லுவதைவிட, செயலில் காட்டுங்கள்.

உங்கள் போக்கைச் சிறிது மாற்றி, அவருடைய குடும்பத்தினரிடம் பாச உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அவருடைய குடிப்பழக்கம் சிறிது குறையலாம். அவர் தானாகவே திருந் தினால்தான் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடியும். அதற்கு


கொஞ்சம் தட்டிக் கேட்க வேண்டும்.
கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டும்.
கொஞ்சம் பயத்தைக் கிளற வேண்டும்.
கொஞ்சம் ஐயத்தை உண்டு பண்ண வேண்டும்
கொஞ்சம் மிஞ்ச வேண்டும்
கொஞ்சம் தஞ்சமடைய வேண்டும்
கொஞ்சம் கெஞ்ச வேண்டும்
கொஞ்சம் கொஞ்ச வேண்டும்

இதை எப்படிச் செய்வது, எப்போது செய்வது என்பதே ஒரு தனிக்கலை. உங்கள் கணவரை உங்களைவிட யாருக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, இதை நீங்களே, Trial and error அடிப்படையில் செய்து பார்த்து, குடும்பக்கூடு சிதையாமல் வாழ்க்கையை நடத்திச் செல்லப் பாருங்கள்.

வேண்டிய குணங்கள்:
பொறுமை, அணுசரணை, அன்பு, சாதுரியம்

தவிர்க்க வேண்டியவை:
குத்திக் காட்டுதல், ஒத்துழையாமை, ஆத்திரம், அவசர முடிவுகள்

உங்கள் வாழ்க்கை மீண்டும் மலர என்னுடைய வாழ்த்துக்கள். மறக்காதீர்கள். எல்லாமே கொஞ்சம், கொஞ்சம்.

அன்புடன்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com