ஏப்ரல் 2019: வாசகர்கடிதம்
மார்ச் தென்றல், சமுதாய சீர்திருத்தங்கள் ஏற்படத் தங்கள் வாழ்க்கை முறையையே நடைபாதைகளாக்கி, பெண்களின் முன்னேற்றத்திற்கு ஒளிவீசும் வழிகாட்டிகளாகத் திகழ்ந்த, திகழும் மகளிரைக் கவனத்திற்கு கொண்டுவந்த அற்புதமான சிறப்பிதழாக இருந்தது. பெண்களும் மெய்ஞானம் பெறத் தகுதியானவர்களே என்பதைக் காண்பிக்கும் மகாதபஸ்வினி ஸ்ரீ சக்கரத்தம்மாளின் தவவாழ்க்கையை அறிய உதவியமைக்கு நன்றி.

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சரியான குறிக்கோள் கொண்ட தனி மனிதர்கள் புகழ்பெறுவர் என்பதை, கலைமாமணி பாம்பே ஞானம், பெண் டாக்ஸி ஓட்டுநர் செல்வி, பெண் போர்விமானி அவனி சதுர்வேதி, அஷ்விதா ஷெட்டி ஆகியோர் நிரூபித்துள்ளனர். வீடு என்பது ஆலயமாவது ஒவ்வொருவரின் எண்ணத்தை வைத்துத்தான் என்பதை வெகு அழகாகச் சிறுகதை 'பாசத்தின் நிறம்' மூலம் சித்திரித்துள்ளார் ராஜேஷ் லாவண்யா. மனது நிறைந்தது.

ஹரிமொழியில் 'சிரிக்காத சிரிப்பு' ஆணித்தரமான சம்பவங்கள், உரையாடல்கள் மூலம் விரிவாக எழுதியதைப் படிக்க மிகுந்த ஆச்சரியமளிக்கின்றது. அதேபோல, குந்தி ,கண்ணனுக்கு அத்தை என்ற உறவுமுறை புரிந்துகொள்ளவே சிறிதுநேரம் ஆனது. ஹரி கிருஷ்ணன் அவர்களின் பெருமுயற்சிக்கு வந்தனம்.

கதிரவன் எழில்மன்னனின் துப்பறியும் கதை விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. விருதுபெற்ற எழுத்தாளர் கே.வி. ஷைலஜாவின் பணிகள் பற்றி அறிந்து மகிழ்ந்தோம். 'சர்மிஷ்ட்டா' மொழிபெயர்ப்பு அருமை. தென்றலின் மற்றப் பகுதிகளும் மணமாக இருந்தன.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

*****


இன்றுதான் தென்றல் ஃபிப்ரவரி இதழ் பார்க்க நேர்ந்தது. அதில் வந்துள்ள 'ஜோடிப்புறா' சிறுகதை மனதை உலுக்கிவிட்டது. இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான பெற்றோர்கள் நிலை கிட்டத்தட்ட இதுதான். நானும் என் மனைவியும், எங்களில் யார் முதலில் போனாலும், வேண்டுவது இதுமாதிரி முடிவுதான். பாராட்டுக்கள்.

ஸ்ரீனிவாசன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com