பொருள் புதிது...
காலங்காத்தால எழுந்து வாக் போறதுன்னா கேசவனுக்கு ரொம்பப் பிடிக்கும். லேசான ஈரமும், எதோ இனம்புரியாத வாசமும் கலந்து அது ஒரு மாதிரி சுகமான அனுபவம்.. அது மட்டுமில்ல, கூட்டம், தூசு, சர்சர்ருனு போற வாகன நெரிசல் எதுவும் இல்லாம, நிம்மதியா நடை போடலாம்.

கடிகாரத்துல மணி அஞ்சு தாண்டி 2 நிமிசம். இன்னிக்கும் காலைலயே கெளம்பியாச்சு.

காலைல எழுந்ததும், முகம் கழுவி, கெளம்பிருவான். திரும்ப வரப்ப தெருமுனை டீக்கடைல ஒரு டீ குடிச்சாதான் அவனுக்கு நாள் தொடங்கும்.

"என்னங்க போறப்ப பைய எடுத்துக்க மறந்துராதீங்க, ரெண்டு நாளா கண்ணன் பால் கொண்டு வரல. பாக்கெட் பால் வாங்கிட்டு வந்துருங்க." சாரதாவின் குரல் கேட்டது. போகும்போது சின்னதா ஒரு மஞ்சப்பை எடுத்துகொண்டான்.

திருநெல்வேலி பக்கம் இலஞ்சிதான் கேசவனின் சொந்த ஊர். பதிமூணு வருஷமா சென்னைல உத்யோகம். சாரதாவுக்குச் சொந்த ஊர் தென்காசி. கேசவனக் கல்யாணம் பண்ண பின்னாடிதான் சென்னை அறிமுகம். இப்பதான் மூணரை வருஷம் ஆச்சு.

கேசவனுக்கு முன்னாடி ரெண்டு அண்ணன், ஒரு அக்கா. இவன் கடைக்குட்டி.

அப்பாவுக்கு நிரந்தரமான வேல இல்லாததால, இளமைக்காலத்தில் கொஞ்சம் கஷ்ட ஜீவனம்தான். தினம் வயித்த நெரப்பறதே ஒவ்வொரு நாளும் போராட்டமாத்தான் இருக்கும். கேசவன் அப்பாவுக்குச் செல்லப் பிள்ளைன்றதால எவ்வளோ கஷ்டம்னாலும் இவனுக்கு மட்டும் முடிஞ்சவர கேட்டது கிடைச்சுடும். அம்மா கொஞ்சம் கண்டிப்பான, சிக்கனமான பொம்பள. பிள்ளைங்கள அந்தக் கஷ்டத்துலயும் விடாம பள்ளிக்கூடம் அனுப்பினதை இப்பவரை கேசவன் நன்றியோடு நினைச்சுக்கறது உண்டு.

கஷ்டப்பட்டுப் படிச்சு, ஏதேதோ சின்னச் சின்ன கம்பெனில வேல பாத்து இப்போ ஒரு நல்ல சாஃப்ட்வேர் கம்பெனில ஒரு நல்ல பதவியில உக்காந்தாச்சு. அண்ணா, அக்கா எல்லாரும் ஊர்லயே நல்லபடியா செட்டில் ஆயிட்டாங்க.

சின்ன வயசுல அப்பா கையப் பிடிச்சு நடந்துபோறது வழக்கமான ஒண்ணு. உற்சாகமா நடக்கச் சொல்லிக்குடுத்தது அப்பாதான்.

ஒருநாள் நடந்துகொண்டே அப்பா கேட்டார், "கேசவா, ஔவைப் பாட்டியோட பாட்டுலாம் சொல்லிக் கொடுத்தாங்களாடா பள்ளிக்கூடத்துல?"

"தெரிலப்பா" கேசவன் படிப்புல கெட்டிதான், ஆனாலும் இந்தக் கேள்விக்குப் பொதுவான பதில் தெரியாம சமாளித்தான்.

"கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை. அப்படின்னா என்னான்னு தெரியுமா?"

"தெரியாதுப்பா" உதட்டைப் பிதுக்கினான் கேசவன்.

"சரி விடு, இப்ப சொன்னாலும் உனக்குப் புரியாது." சின்னதா ஒரு சிரிப்புடன் அமைதியாக நடையைத் தொடர்ந்தார். நிழல்போல இவனும் தொடர்ந்தான்.

சென்னை வாழ்க்கை கொஞ்சம் அலுப்புத் தட்ட ஆரம்பிச்சுடுச்சு கேசவனுக்கு. அடிக்கடி ஊர் ஞாபகம்தான். இப்பகூட வாக்கிங் போறப்ப பழைய நினைவுகளை அசைபோட்டுட்டே போறது நல்லாத்தான் இருக்கு.

போரூர் சிக்னல் தாண்டி கொஞ்சதூரம் போயிட்டுத் திரும்ப ஆரம்பித்தான் கேசவன். சிக்னல் தாண்டி வரிசையா காலைலயே பூக்கடைகள் எடுத்து வைக்கறதைப் பாத்த கேசவன், சாரதாவுக்குப் புடிக்குமேன்னு கொஞ்சம் மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டான்.

வாசல் கதவைத் தாண்டும்போதே, குழந்தை ஷிவானியின் அழுகை வீரியமாகக் கேட்டது. பதறி ஓடினான் கேசவன்..

"வந்துட்டீங்களா, சீக்கிரம் பால் பாக்கெட்டத் தாங்க, பசி தாங்காம அழ ஆரம்பிச்சுட்டா..."

"இவளைக் கொஞ்சம் வச்சுக்கோங்க" குழந்தையைக் கைல கொடுத்துவிட்டு, "இந்தப் பால்காரன் திடீர் திடீர்னு வராம போய்டுறான், வேற ஏற்பாடு பண்ணனும்" புலம்பிக்கொண்டே பால் காய்ச்ச அடுக்களைக்குள் போனாள் சாரதா.

பசி தாங்காமல் ரொம்ப நேரம் அழுதிருக்கும் போல, முகம் சிவந்து போய் இருந்தது, இவனைப் பாத்ததும் ரெண்டு அரிசிப்பல் தெரியச் சிரித்தது.

"ச்ச... நாம கொஞ்சம் சீக்கிரம் வந்துருக்கலாம்" தன்னையே நொந்துகொண்டான் கேசவன்...

தவிர்க்க முடியாத சூழ்நிலைல குழந்தையோட பசியை நம்மால தாங்க முடியலையேன்னு நினைக்கும்போதுதான், சின்னவயசில் அப்பா கேட்ட பாட்டோட அர்த்தம் புரிஞ்சமாதிரி இருந்தது..

இளமையில் வறுமை என்பது குழந்தைகளைவிட, இயலாமையில் தவிக்கும் பெத்தவனுக்குதான் வலி அதிகம் தரும் என்கிற அர்த்தத்தில்தான் அப்பா சொல்லியிருப்பார் என நினைத்துக் கொண்டான். அப்பாவின் போட்டோவைப் பார்த்தான், ஏனோ சிறிது மனசு வலித்தது.

சாரதாவுக்கு வாங்கி வந்திருந்த பூவை அப்பாவின் படத்திற்குப் போட்டுவிட்டுத் திரும்பினான். சாரதா எதோ புரிந்தும் புரியாததுமாகச் சிரித்துக்கொண்டே அவனிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டாள்..

பெரியவர்கள் சொல்லிவைத்ததுக்கு மறைபொருள் ஒன்று இருக்கத்தான் செய்கிறது... கடவுள் போல. அதுதான் காலம் கடந்தும் நமக்கெல்லாம் பாடமாக இருக்கக் காரணமாக இருக்கிறதுபோல.

எதோ ஒரு நிறைவாக உணர்ந்தான். அப்பாவை நினைத்துக்கொண்டே நாளைத் தொடங்கினான் கேசவன்.

நிலா.சுப்பிரமணியன்,
ப்ளெஸன்டன், கலிஃபோர்னியா

© TamilOnline.com