மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 15)
முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகப்படுத்தினாள். என்ரிக்கே இயற்கையிலும், மனிதர்களின் தேர்ச்சி இனப்பெருக்கத்தாலும் (selective breeding) எப்படி மரபணு மாற்றங்கள் பரவுகின்றன என்றும் விவரித்தார். பிறகு க்ரிஸ்பர் முறை, அத்துடன் பல்திறன் மூல உயிரணு நுட்பத்தைச் சேர்த்துப் பயன்படுத்தி மிருகங்களின் உடலில் மனித அங்கங்களை வளர்க்கமுடியும் என்பவற்றையும், சமீபத்தில் முழுச் செயற்கை மரபணு எழுத்துக்களே உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். பிறகு க்ரிஸ்பர் முறையின் பலவீனங்களை விளக்கி அவற்றைத் தன் ஆராய்ச்சியால் நிவர்த்தித்துள்ளதாகவும், ஆனால் திடீரென நுட்பம் தவறாகச் செயல்படுவதாகவும் தெரிவித்தார். சூர்யா முதலில் சகநிறுவனரான விக்ரம் மேத்தாவைச் சந்தித்து மரபணு நுட்ப நிபுணர்களான அவரும் குழுவும் ஏன் பிரச்சனையின் மூல காரணத்தை அறிய இயலவில்லை என்று விசாரித்தார். அடுத்து நடந்தது என்ன...

*****


பிரச்சனையின் மூலகாரணத்தைக் கண்டறிவதற்கு, மீண்டும் அது ஆரம்பிக்குமுன் இருந்த நிலையை உண்டாக்கி அதிலிருந்து படிபடியாக நுட்பத்தை முன்னேற்றி ஆராய்ந்திருக்கலாமே, அது ஏன் இயலவில்லை என்று சூர்யா கேட்டதும் மிக்க ஆச்சரியத்தை அடைந்த என்ரிக்கேயும் விக்ரமும், தாங்கள் அதையேதான் யோசித்து முயற்சித்ததாகக் கூறினார்கள்.

ஆனால் என்ரிக்கே சோகம் விம்மியதால் பேச முடியாமல் தவிக்கவே, விக்ரம் சூர்யாவின் வினாவுக்குப் பதிலளித்தார். "நீங்க சொன்னபடிதான் நாங்க தொடக்க நிலையிலிருந்து ஒவ்வொரு படியாக மீண்டும் முயன்று பார்த்தோம். ஆனால், முதலில் சரியாக வேலை செய்த படிக்கு வந்ததும், மீண்டும் சுணங்கியது. ஏனென்று நாங்கள் எவ்வளவோ அலசியாச்சு,. ஒண்ணும் புலப்படவில்லை. அதனால்தான் என்ரிக்கே வேற வழி தெரியாம இந்தத் துறைக்கே சம்பந்தமில்லாத உங்களைக் கூப்பிட்டிருக்கார்."

சூர்யா சில நொடிகள் யோசனையில் ஆழ்ந்தார். என்ரிக்கே "சூர்யா, என்ன யோசிக்கறீங்க?" என்று தூண்டினார்.

சூர்யா யோசனையிலிருந்து மீண்டு விக்ரமிடம், "அது போகட்டும். ஆனா, இதுக்கு முன்னாடி க்ரிஸ்பர் நுட்பத்துலயோ உங்க முன்னேற்றத்துலயோ பிசகு இருந்திருக்கும் இல்லையா. அதை எப்படிக் கண்டுபிடிச்சு நிவர்த்திச்சீங்க?"

விக்ரமும் என்ரிக்கேயும் கைகொட்டினர். விக்ரமே பதிலளித்தார். "இது சரியான கேள்வி. இதுக்கு பதிலிருக்கு. உதாரணமா, அடிப்படையான க்ரிஸ்பர் காஸ்-9 இல் இருக்கற ஒரு பிசகையே எடுத்துக்குவோம்?"

ஷாலினி இடைமறித்தாள். "என்ன? சில சமயம் மாத்தவேண்டிய மரபணு எழுத்துக்கள் இருக்கற சரியான இடத்துக்குப் போய் வேலை செய்யறதில்லை, அதுதானே?" என்ரிக்கே கையை வேகமாக ஆட்டி மறுத்தார். "இல்லை ஷாலினி. அது சர்வ சாதாரணம். நான் விக்ரம் வேற பிசகைச் சொல்றார்னு நினைக்கறேன்."

விக்ரம் தலையசைத்து ஆமோதித்தார். "யெஸ்! நான் சொல்றது க்ரிஸ்பர் குறி வைக்கறதுல இல்லை, வேலை செய்யறதுலயே இருக்கற பிசகு. சில சமயங்களில் க்ரிஸ்பர் வெட்ட வேண்டிய மரபணு எழுத்துத் தொடரை மட்டுமல்லாமல் இன்னும் அதிகமான எழுத்துக்களை வெட்டிடுது, அதான்!" கிரண் உடனே ஒரு எந்திரத் துப்பாக்கியால் சுடுவதுபோல் பாவனை செய்து "ட் ர்ர்ர்ர்ர் பட் பட் பட் டமால்! போச்சு மரபணு எழுத்துக்கள்!" என்றான்.

விக்ரம் அவனை அனாவசிய சேட்டை செய்து உறுத்தும் குரங்கைப் பார்க்கும் முகபாவத்தோடு பார்க்கவே, ஷாலினி கிரணைத் தட்டிவிட்டு, "இவனைப் பத்திக் கவலைப் படாதீங்க விக்ரம். சரியான சேட்டைக் குரங்கேதான் இவன்! மேல சொல்லுங்க. அந்த மாதிரி அதிக எழுத்துக்களை வெட்டறதுனால வேண்டாத மரபணு மாற்றமும் அதுனால தீங்களிக்கும் உயிரணு மாற்றமும் நடக்குமே?" விக்ரம் தலையாட்டிவிட்டுத் தொடர்ந்தார். "ஆமாம். அத்தகைய மாற்றங்களால் புற்றுநோய் வரும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும். க்ரிஸ்பரை மனிதர்கள்மேல் பிரயோகிக்காததற்கு அதுவும் ஒரு காரணம்."

சூர்யா தூண்டினார். "சரி, அந்த மாதிரி சரியா வெட்டாம இருக்கறத்துக்கு என்ன காரணம்னு எப்படிக் கண்டு பிடிச்சீங்க, எப்படிச் சரி செஞ்சீங்க?" விக்ரம் மேற்கொண்டு விளக்கலானார். "க்ரிஸ்பரால வெட்டி மாற்றப்பட்ட மரபணுக்களையும், மாற்றப்படாத மூல மரபணுக்களையும் ஒப்பிட்டுப் பார்த்து க்ரிஸ்பரின் வெட்டி ஒட்டுதல் எவ்வளவு சரியாக நடந்துள்ளது என்று கணிப்பிடும் வழிமுறை ஒன்று உள்ளது. அது சர்வ சாதாரணமாக, க்ரிஸ்பரில் வேலை செய்யும் பல ஆராய்ச்சியாளர்களும் பயன்படுத்துவதுதான்..."

கிரண் இடைமறித்தான். "நீங்க என்ன சரி செஞ்சீங்கன்னு கேட்டா எல்லாரும் செய்யறதப் பத்தி சொல்றீங்களே, விஷயத்துக்கு வாங்க!"

ஷாலினி அவனைக் கடிந்தாள். "கிரண், ஷ்ஷ்ஷ்! உனக்குப் புரியாத விஷயத்துல சும்மா மூக்கை நுழைக்காதே. உடைச்சுடுவேன். அவர் நமக்குப் புரியறத்துக்காகத்தான் அடிப்படை நுட்பம் என்னன்னு சொல்றார். மேல விளக்குங்க விக்ரம்." விக்ரம் பாராட்டினார். "ரொம்பச் சரி ஷாலினி. அடிப்படை அதுதான். ஆனா, அந்த வழிமுறை ரொம்ப சரியா வெட்டல் ஒட்டல் விவரங்களை எங்களுக்கு கொடுக்கலை. அதுனால நாங்க அந்த வழிமுறையை முதலில் முன்னேற்றினோம். அதுக்காக ஸாங்கர் வரிசைப் படுத்தல் (sanger sequencing) என்னும் நுட்பத்தைப் பயன்படுத்தினோம். அது வெறும் மரபணு ஒப்பீட்டைவிட இன்னும் துல்லியமான விவரங்களை அளித்தது."

சூர்யா இடைமறித்தார். "ஓ! புரியுது. க்ரிஸ்பர் வெட்டல் ஒட்டல் வழிமுறையை முன்னேற்ற, முதல் படியா க்ரிஸ்பர் எவ்வளவு சரியா வேலை செஞ்சுது அப்படிங்கறதைத் துல்லியமா தெரிஞ்சுக்க ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தினீங்க, அதானே? அப்புறம்..."

விக்ரம் தொடர்ந்தார், "எக்ஸெல்லெண்ட்! அதேதான். பலப்பல வெட்டல் ஒட்டல் பரிசோதனைகள் செய்து, எதனால் அவ்வாறு ஆகிறது என்று புரிந்து கொண்டோம். இரண்டு பிரச்சனைகள் இருந்தன: ஒன்று எந்த இடத்தில் வெட்டவேண்டும் என்பது. இன்னொன்று எத்தனை மரபணு எழுத்துக்களை வெட்டி வேறு எழுத்துக்களை ஒட்டவேண்டும் என்பது."

சூர்யா குறுக்கிட்டார், "புரியுது. ஆனால் இரண்டுக்கும் ஒரே நிவாரணமா அல்லது வெவ்வேறா?"

விக்ரம் கூறினார், "மிகநல்ல கேள்வி! எங்கள் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகளிலிருந்து ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான வெவ்வேறு இரு நிவாரணங்களைக் கண்டுபிடித்தோம். முதலாவதாக வெட்டவேண்டிய இடத்தைச் சரியாகக் குறிவைப்பது. அடிப்படை க்ரிஸ்பர் முறையில் இதற்கு வழிகாட்டி ஆர்.என்.ஏ. (guide RNA) அதாவது gRNA எனப்படும் வேதிப்பொருளைப் (chemical) பயன்படுத்துகிறார்கள். அதன் குறி துல்லியமாக இருக்காது என்பதால் நாங்கள் மிக நுண்ணிய குறி வைக்கும் ஒரு செயற்கை வழிகாட்டியைக் கண்டுபிடித்தோம். அது மிகச் சிறப்பாக வேலைசெய்து வெட்டுமிடத் தவறுகளை பெரும்பாலும் தவிர்த்தது."

"வாவ்! இது மிகப் பிரமாதமான சாதனையல்லவா! சபாஷ்" என்றாள் ஷாலினி. என்ரிக்கேயும் விக்ரமும் பவ்யமாகக் குனிந்து பாராட்டை ஏற்றனர்.

சூர்யா விடவில்லை. "யெஸ், இது நல்ல முன்னேற்றந்தான். ஆனால் அது ஒரு பாதிதான் அல்லவா? எவ்வளவு எழுத்துக்களை வெட்டணும்ங்கறதுல ஒரு பிரச்சனை இருக்குன்னு சொன்னீங்களே? அது என்ன, அதுக்கு என்ன வழி கண்டு பிடிச்சீங்க?" விக்ரம் தலையசைத்து ஆமோதித்தார். "யெஸ், அடிப்படை க்ரிஸ்பர் சரியான எண்ணிக்கை மரபணு எழுத்துக்களைச் சில சமயங்களில் வெட்டுவதில்லை. அப்படி சரியாக வெட்டப்படாத மரபணு எழுத்துக்கள் கொண்ட உயிரணுக்கள் பெருகும்போது சரியான, வேண்டிய உயிரணுக்களாக இருக்காது அல்லவா?"

"அஃப் கோர்ஸ்! மரபணுதானே உயிரணுப் பெருகலுக்கு மூலமானது! அந்த மூலமே சரியாக இல்லாவிட்டால் அந்த உயிரணு இரண்டிரண்டாகப் பிரிந்து பெருகும் போது தவறாகத்தானே போகும்! அது சரி, அப்படி நிகழாம இருக்க என்ன நுட்ப முன்னேற்றம் கண்டுபிடிச்சீங்க?" என்று கேட்டாள் ஷாலினி. விக்ரம் அதற்கு என்ன சொன்னார் என்பதை மேலே பார்க்கலாம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com