கலைந்த கனவு
அதிசயங்கள் ஆயிரம் வகைப்படும். அதில் பேரதிசயமாய்த் திகழ்வது தாய்மை. மக்கட்பேறும் மரணப்பேறும் மகேசனும் அறியாதது என்பது பழமொழி. மகேசனே அறியாத ஒன்றை அறிந்து கொள்ளத்தான் மனிதனும் மருத்துவரின் உருவத்தில் முயற்சிக்கிறான். அப்பேர்ப்பட்ட தாய்மையும் சில நேரங்களில் தவறிப் போய்விடுகிறது. ஏன், எதனால் எப்போது என்று பல கேள்விகளை உருவாக்கி மனம், உடல், உறவுகள் ஆகியவற்றைப் பாதிக்க வல்லது 'கருச்சிதைவு'.

தனியே வாழ முழுத்தகுதி பெறுவதற்கு முன்னதாகத் தானாகவே கலைந்து விடும் கருவிற்கு மருத்துவ அகராதியில் கருச்சிதைவு (miscarriage) என்று பெயர். சராசரிப் பெண்களுக்கு ஏற்படும் இந்தக் கொடிய கருச்சிதைவு பற்றி இப்போது காணலாம். அதற்கு முன்னால் பெண்களின் உடல மைப்புப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

கருவறையாக 'Uterus' என்ற கர்ப்பப்பை செயல்படுகிறது. 'Fallopian tube' எனப்படும் குழாய்கள் இந்த கர்ப்பப்பைக்கு இருபுறமும் பாலம் போல் அமைந்து 'Ovaries' என்று சொல்லப்படும் கருமுட்டையை உண்டாக்கும் உறுப்பைக் கர்ப்பப்பையுடன் இணைக்கின்றன. மாதம் ஒரு முறை இடப்படும் முட்டை, இந்தக் குழாய் வழி வந்து ஆணின் விந்துவுடன் கலப்பதால் கரு உருவாகிறது. இந்தக் கருவானது குழாயில் நகர்ந்து கர்ப்பப்பையில் அமர்ந்து கொண்டு குழந்தையாக உருவாகிறது.

எத்தனை பெண்களுக்கு கருச்சிதைவு நிகழ்கிறது?

இது மிகவும் சாதரணமாக நிகழக்கூடியது. 10 முதல் 20 சதவிகித கருக்கள் கரு உருவாகி 20 வாரங்களுக்குள் கலைந்து விடும் அபாயம் உள்ளது. இதில் பெரும்பான்மை (80 சதவிகிதம்) முதல் 12 வாரங்களில் நடக்கக்கூடியன. இந்த எண்ணிக்கையுடன் கரு உருவானதையே அறியாத பெண்களைச் சேர்த்துக் கொண்டால் நடைமுறையில் கூடுதலாகவும் இருக்கலாம். தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியில் மாதவிடாய் தள்ளிப்போவதற்கு முன்னமே கரு உருவாகியிருக்கக்கூடும் என்று கண்டு பிடிக்கப்படுவதால் (pregnancy test) இந்த கருச்சிதைவும் சற்று அதிகமாக நிகழ்வது போல் தெரிகிறது.

ஏன் எதனால் எப்போது?

பல காரணங்களல் கருச்சிதைவு நிகழலாம். மூன்றில் ஒரு பங்கு முதல் 8 வாரங்களுக்குள் நடக்கின்றன. இதில் 'Embryo' என்று சொல்லப்படும் கரு உருவாகாமலே 'Empty sac' அல்லது 'Blighted ovum' என்று சொல்லப்படும் கருச்சிதைவு ஏற்படலாம். மரபணுக்களின் கோளாறினால் (genetic defects) 50 சதவிகித கருக்கலைப்புகள் நிகழ்கின்றன. சில சமயங்களில் தாயின் உடல் அமைப்பில் கர்ப்பப்பையின் கோளாறினால் கருச்சிதைவு நிகழக்கூடும்.

கருச்சிதைவு நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் எப்போது அதிகம்?

வயது: அதிகமான வயதான பின் கருத் தரிப்பதனால் கருச்சிதைவுக்கான சாத்தியக் கூறு அதிகமாகிறது.

கருத்தரிப்பின் எண்ணிக்கை: 2 அல்லது 3 கருத்தரிப்புக்குப் பின் கரு சிதைவது அதிகமாகிறது. அதாவது முதல் கருத்தரிப்பைக் காட்டிலும் மூன்று குழந்தைகளுக்குப் பின்னர் கரு கலைவது அதிகமாகக்கூடும்.

முந்தைய கருச்சிதைவு: முன்னதாகக் கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால் இதன் சாத்தியக்கூறு 20 சதவிகிதம் அதிகமாகிறது. இரண்டு முறை கரு கலைந்துவிட்டால் மேலும் சாத்தியக்கூறுகள் கூடுகின்றன.

புகை பிடித்தல், குடி மற்றும் போதைப் பொருட்கள் கருச்சிதைவுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.

காபி அதிகமாகக் குடித்தல் கருச்சிதைவை அதிகப்படுத்தலாம் என்று ஒரு சில மருத்துவக் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

சில இரசாயனப் பொருட்கள் மற்றும் மருந்துகள் மூலமும் கருச்சிதைவு நிகழலாம்.

அதிகமான உடல் அல்லது மன உளைச்சல் (stress) போன்றவையும் கருச்சிதைவை அதிகமாக்குகின்றன.

கருச்சிதைவின் அறிகுறிகள் என்ன?

பெரும்பான்மையான சமயங்களில் கருச் சிதைவு முன்னறிவிப்பின்றி உதிரப்போக்கு அல்லது spotting மூலமாக வெளிப்படுகின்றது. சில வேளைகளில் 'Ultrasound' செய்யும் போது empty sac என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. பல வேளைகளில் இந்த கருச்சிதைவு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.

கருச்சிதைவின் வகைகள் என்னென்ன?

Missed Miscarriage என்று சொல்லப்படும் வகை கரு கலைந்த பின்னும் உதிரப்போக்கு ஏற்படாமல் கரு உள்ளேயே தங்கி இருப்பது. இந்த வகைச் சிதைவு சரியான முறையில் 'pregnanacy' தொடராமல் இருப்பதின் மூலமும், கருவின் இதயத்துடிப்பு நின்று போனதின் மூலமுமே அறியப்படுகிறது. உள்ளே தங்கிப்போன கரு தானாகவே வெளிவருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இல்லாது போனால் D&C என்று சொல்லப்படும் சிகிச்சை மூலம் வெளிக்கொண்டு வருவது தேவைப்படலாம்.

Threatened Miscarriage என்று சொல்லப்படும் வகை கர்ப்பப்பையின் வாய் அகன்று விடுவதால் ஏற்படக் கூடியது. இந்த ஒரு வகை மட்டுமே படுக்கையிலேயே இருந்து நகராது (Bed Rest) அளிக்கப்படும் சிகிச்சை மூலம் தவிர்க்கலாம். மற்ற வகைக் கருச்சிதைவுகள் தவிர்க்கமுடியாத வகைகளாகும்.

Inevitable Miscarriage என்று சொல்லப்படும் வகை உதிரப்போக்கு ஆரம்பமாகி, ஆனால் கரு முழுதாகக் கலையாமல் தங்கிவிடுவது. இந்த ரகத்தை மருந்துகள் மூலமாகவோ அல்லது D&C மூலமாகவோ குணப்படுத்தலாம்.

கருச்சிதைவினால் ஏற்படும் பாதிப்புகள் யாவை?

கருச்சிதைவு உடலாலும் மனதாலும் வேதனை கொடுக்கும் ஒரு நிகழ்ச்சியாகும். இதில் இருந்து மீள்வது அவரவரின் சக்தியைப் பொறுத்தது. ஒரு சிலர் ஏதோ நடக்கக்கூடாதது, நடந்துவிட்டது என்று தேற்றிக் கொண்டு மீண்டுவிடலாம். மற்றும் சிலர் மீளாத சோகத்தில் நாட்களைக் கழிக்கக்கூடும். இதில் குறிப்பாக அறிய வேண்டியது என்னவென்றால் குறிப்பிட்ட பெண் இதற்குக் காரணம் இல்லை என்பது தான். இவரால் என்று யாரையும் குறை கூற முடியாது. அடுத்து வரும் கருத்தரிப்பில் 20% விகிதமே கரு சிதைவதற்கான அபாயம் அதிகமாகிறது. இது சர்வ சாதரணமான ஒரு விபத்து. இதில் இருந்து மீள, தகுந்த முறையில் கணவரும் உறவினரும் நண்பர்களும் உதவவேண்டும். அவரவர் தம்மாலான உதவி புரிய வேண்டும்.

கருச்சிதைவு ஏற்பட்டால் எப்போது மருத்துவ சோதனைகள் புரிய வேண்டும்?

மருத்துவர்கள் பொதுவாக அடுத்தடுத்து 3 முறை கருச்சிதைவு ஏற்பட்டால் மட்டுமே பலவிதச் சோதனைகளைச் செய்வர். ஒருமுறை கரு கலைந்ததுமே சோதனைகள் செய்யத் தேவையில்லை. தாயின் வயது மிகவும் அதிகமாக இருந்து காலம் குறைவாக இருந்தால் மட்டுமே சோதனைகள் முன்னரே செய்ய வேண்டும்.

கருச்சிதைவினால் தாயின் உடலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

சாதாரணமாக ஏற்படும் கருச்சிதைவில் கொஞ்சம் அதிகமான உதிரப்போக்கு இருக்கலாம். மிகச் சொற்ப நேரங்களில் 'infection' ஏற்பட்டால் மட்டுமே தாயின் உடல் பாதிக்கப்படலாம். மருத்துவரின் ஆலோ சனைப்படி அடுத்த குழந்தைக்கான முயற்சியை மேற்கொள்வது உசிதம். கருச்சிதைவினால் தாயின் உடல்நலத்திற்கு ஏற்படும் பிற்கால விளைவுகள் மிகமிகக் குறைவாகும்.

இதைப்பற்றி அறிய பல வலைத் தளங்களும், ஒத்தாசைக் குழுக்களும் (support group network) இணையத்தில் காணலாம். நாடு விட்டு நாடு தேடிப் பிழைப்பிற்காக வந்த ஊரில் உற்றார் உறவினர் இல்லாத வேளையில் ஏற்படக் கூடிய இந்த நடைமுறை வலிக்கு இளம் பெண்கள் மனம் தளராமல் இருக்க இந்த ஒத்தாசைக் கூட்டங்கள் உதவுகின்றன.

மரு வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com