ஆப்பிள் படுத்தும் பாடு (அத்தியாயம்-6)
அருணின் பிரச்சினையை ஒரு வழியாகப் பேசி முடித்து கீதா தன் அறைக்கு வந்து படுத்துக்கொண்டார். படுத்ததுதான் தாமதம் "அம்மா" என்று குரல் மறுபடியும் ஒலித்தது. கீதாவிற்கு அது கனவா நனவா என்று புரியவில்லை. இல்லை, அது நனவுதான் என்று பிறகு புரிந்தது.

"அருண், என்ன இப்படி தொந்தரவு பண்ணற. அப்பாவை எழுப்பட்டுமா?" என்று எரிச்சலோடு கேட்டார். "அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டாங்க" என்று முணுமுணுத்தார். கீதாவிற்கு எங்காவது மாயாவி மாதிரி சக்தி இருந்தால் அந்நேரம் அருண் கண்ணில் படாமல் எங்காவது மறைந்திருப்பார். அருணின் பிடிவாத குணம் அவருக்கு நன்றாகத் தெரியும். அவன் அவரை மாதிரித்தான். தான் நினைத்ததைச் சாதிக்காமல் விடமாட்டான். ரகளை வேண்டாம் என்று படுக்கையிலிருந்து எழுந்தார்.

"சரி வா, போகலாம்" என்று அருணின் முகம் பார்க்காமலேயே அறையை விட்டு வெளியேறினார். படிகளில் இறங்கி லிவிங் ரூம் பக்கமாகச் சென்றார். மாடியில் எல்லா அறையிலும் ஆட்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். பக்கரூகூடக் கண் விழித்துப் பார்த்துவிட்டு மூடிக்கொண்டது.

"அம்மா, என் ரூம் இங்க..." என்று அருண் தன் அறைப்பக்கம் கை காட்டினான்.

"எனக்குத் தெரியும். யாரையும் தொந்தரவு செய்யாமல் கீழே போய்ப் பேசலாம்."

"ஆனா, அங்க எனக்குப் படுத்துக்க முடியாதே?"

"சோஃபாவுல படுத்துக்கோ. இப்ப, அம்மா இங்க இருக்கணுமா, வேண்டாமா?"

"சோஃபா? நீங்க எங்க உட்காருவீங்க?"

அருண் கேட்டது அல்பமாகப் பட்டது. தான் நிதானத்தை இழந்துவிடக் கூடாது என்று பொறுமையாக இருந்தார். அவன் கேள்விகளுக்குக் கோபப்படாமல் இருக்கத் தீர்மானமாக இருந்தார். வீட்டில் யாருக்குமே இப்படி ஒரு உரையாடல் நடப்பது தெரியாது. சோஃபாவில் அருணைப் படுத்துக்கொள்ளச் சொன்னார். மற்றொன்றில் அவன் பார்க்கமுடியாதபடி, அவன் தலைப்புறமாக உட்கார்ந்து கொண்டார். அது ஒரு மனநல ஆலோசனை மாதிரி இருந்தது.

"சரி சொல் அருண், உன் பிரச்சனை என்ன?"

எப்போதும் போலச் சட்டென்று பதில் வரவில்லை. அந்த இருட்டில் அவனது மூச்சுச் சத்தம் மட்டும் கேட்டது.

"சொல்லப்பா, உன் மனசில என்ன படுத்துது?" அருண் வாயிலிருந்தே பதில் வரட்டும் என்று காத்திருந்தார். சற்றுநேரம் கழித்து அருண் பேச ஆரம்பித்தான்.

"பாலா அத்தை ஆப்பிளைப் பத்திச் சொன்னது எனக்கு சங்கடமா இருக்கு."

"அந்த ஆப்பிள் மெழுகு பத்திச் சொன்னதா? அதை அவங்களே ஒரு யூகம் தான்னு சொன்னாங்களே?"

"நாம வாங்கற ஆப்பிளோட பளபளப்பு இயற்கையானது அல்ல, செயற்கையா இருக்குன்னு சொன்னாங்களே?"

"சரி?"

"அம்மா, நானும் கொஞ்சம் கூகுள் பண்ணிப் பார்த்தேன். நம்ம வீட்டில இருக்கிற ஆப்பிள் ரொம்ப அதிகப் பளபளப்பா இருக்கு."

"என்ன சந்தேகப்படற, அருண்? இதிலேயும் கலப்படம் இருக்குமோன்னு நினைக்கறியா? யார்? எப்படி?"

"அம்மா, ஹோர்ஷியானா பொருட்கள் தவிர நம்ம ஊருல எதுவும் கிடைக்கிறதில்லையே."

"அருண், அவங்களுக்குதான் உன்மேல ஒரு பயம் இருக்கே. திருப்பி தப்பு பண்ணினா மாட்டிப்பாங்களே. அருண் எங்கே திரும்பி வம்புல மாட்டிருவானோன்னு பயப்பட வச்சிருக்கியே. எனக்கு என்னமோ ஆப்பிள்ல மோசடி பண்ணி இருக்க மாட்டாங்கன்னு தோணுது."

"அம்மா, நான் படிச்சதுல, இதுல பெட்ரோலியம் மெழுகு ஏதோ உபயோகப்படுத்தி இருப்பாங்களோன்னு தோணுது."

அருண் சொன்னது புதிதல்ல. முன்னமே இப்படிக் கேள்விப்பட்டிருக்கிறார். அருண் தீர விசாரித்துப் பேசுவது கீதாவிற்கு சுவாரஸ்யமாகப் பட்டது. அவன் பட்டென்று எதையும் சொல்லமாட்டான் என்பது தெரியும் அவருக்கு. "புரிகிறது அருண், பாலா அத்தை சாதாரணமாகச் சொன்ன ஒரு விஷயத்தை எவ்வளவு ஆராய்ச்சி செய்திருக்கிறாய் பார்!"

அருண் உற்சாகத்தில் எழ முயல, கீதா அவனை திருப்பித் தள்ளினார். "படுத்துக்கிட்டே பேசு, சரியா?" அருண் தலை ஆட்டிவிட்டுத் திரும்பப் படுத்துக்கொண்டான்.

"என்ன சொல்லிட்டு இருந்தே?"

"அந்த ஆப்பிள் பளபளப்பு" என்று தொடங்கி, அருண் மீண்டும் பாலா அத்தை சொன்னது, தனது ஆராய்ச்சியில் கண்டது எல்லாம் விலாவாரியாகச் சொன்னான்.

அருணுக்குக் களைப்பே தெரியவில்லை. கீதாவும் தான் ஏதோ ஒரு தேன் குடித்த நரி மாதிரி குஷியாக இருப்பதாக உணர்ந்து ஆச்சரியப்பட்டார்.

"அம்மா, நம்ம வீட்டுல வாங்கற ஆப்பிள்ல செயற்கை மெழுகுதான் இருக்கு. நிச்சயம் அது இயற்கையானது இல்ல."

ஆதாரமே இல்லாமல் அருண் சொல்வதை எடுத்துக்கொள்ளக் கஷ்டமாக இருந்தது. மேலும், அருண் ஹோர்ஷியானா நிறுவனம் பத்திப் புகார் செய்து, அதில் உண்மை சிறிதுகூட இல்லாமல் போய்விட்டால், அவ்வளவுதான்! டேவிட் ராப்ளே சும்மா விடமாட்டார். அவர் அருணால் பட்ட அவமதிப்பிற்கு எப்படா திருப்பிக் கொடுக்கச் சந்தர்ப்பம் வரும் என்று காத்திருப்பார். முழுமையான ஆதாரம் இல்லாமல் ஏதும் புகார் சொல்லக்கூடாது.

"அம்மா, உங்க சோதனைக்கூடத்துல ஏதாவது பரிசோதனை பண்ண முடியுமா?" ஒரு பக்கம் அருணின் சமூக உணர்வு கீதாவை உச்சி குளிர வைத்தாலும், மறுபக்கம் மீண்டும் டேவிட் ராப்ளேயுடன் உரசல் வேண்டுமா என்று சிந்தித்தார் "அம்மா, நீ ஒரு விவசாய விஞ்ஞானி. உங்களால் எர்த்தாம்டன் நகரத்துக்கு நல்லது கிடைக்கும். வெளி ஊர் ஆப்பிள் பழங்களைக் கொஞ்சம் வாங்கி, நம்ம ஊர் ஆப்பிளோட ஒப்பிட்டுப் பார்க்கலாமே?" என்று அருண் ஐடியா கொடுத்தான்.

இந்த ஆப்பிள் விவகாரத்திலிருந்து புதிதாக ஒரு கலப்பட விஷயம் வெளியே வரப்போகிறது என்று அவருக்குப் புலப்பட்டது.

"சரி கண்ணா, இதைப்பற்றி அப்பறமா கவலைப்படுவோம். இப்ப தூங்கலாம், வா." இருவரும் மாடிப்படி ஏறித் தத்தம் அறையை நோக்கிச் சென்றார்கள்.

(தொடரும்)

கதை: ராஜேஷ்

© TamilOnline.com