அழகற்ற பறவை?
"அதோ, பாருங்கள், அந்த அழகற்ற பறவையை!" மன்னிக்கவும், இதை நான் சொல்லவில்லை.

கென்யாவிலுள்ள செரங்கெட்டி தேசியப் பூங்காவிற்குப் போய்ச் சேர்ந்த முதல்நாள். மாலை ஆறு மணி. கதிரவன் மெல்ல மெல்லத் தலை சாய்க்கும் நேரம், மேற்கு வானில் கதிர்த் தூரிகையால் வண்ணங்களை வாரித் தீற்றிக் கொண்டிருந்தான். நாங்கள் தங்கியிருந்த கூடாரத்திற்கு வெளியே கரகர என்ற வினோதமான ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. எங்கிருந்து ஓசை வருகிறதென்று போய்ப் பார்த்தேன். மங்கலான ஒளியில் ஐந்து பறவைகள் நின்று கொண்டிருந்தன. பார்க்கக் கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருந்தன. பார்க்க, வயதான மனிதர்கள், வழுக்கைத் தலையுடன், கந்தலாடை அணிந்து கழுத்தில் பைகளைத் தொங்கவிட்டுக் கொண்டு யாசகம் கேட்பது போல் இருந்தது. வேகமாகக் கூடாரத்திற்குள் சென்று கேமராவை எடுத்து வருவதற்குள் பறந்து போய்விட்டன. கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

மறுநாள் காலை, உணவருந்தி விட்டு, சஃபாரி செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்த போது அதே ஒலி. கேமராவைத் தூக்கிக்கொண்டு ஓடினேன். அதே பறவைகள்! அங்கிருந்த குப்பைத் தொட்டியைக் கீழே தள்ளிவிட்டுச் சிதறிக் கிடந்த உணவை விழுங்கிக் கொண்டிருந்தன. குப்பையைக் கொட்டவந்த சமையல்காரர் அவைகளைத் துரத்தவே நிதானமாக நடந்து சற்றுத் தொலைவில் போய் நின்றுகொண்டன. அவர் தலை மறைந்ததும் மறுபடியும் வந்து உண்ண ஆரம்பித்தன. அவை என்ன பறவை என்று எங்களுடன் வந்த வழிகாட்டியைக் கேட்டேன்.

"ஓ, இவை மாராபு நாரைகள் (Marabou stork - Leptoptilos crumenifer). எங்கள் நாட்டின் அழகற்ற பறவைகள். வாருங்கள், போகலாம், இந்தப் பறவைகளை இங்கு எங்கும் காணலாம்" என்று என் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டார்.

அவர் சொன்னது சரிதான். அந்தப் பறவைகளைச் செரங்கெட்டி பூங்காவில் நிறையப் பார்க்க முடிந்தது. சகதி நிலத்திலும், வறண்ட நிலங்களிலும் பிற பிணந்தின்னிப் பறவைகளுடன் நின்று இரை உண்ணுவதைப் பார்த்தபோது, இவைகளை அழகற்றவை என்று சொல்லுவதில் தவறில்லை என்றுதான் தோன்றியது.உலகத்தில் 19 வகை நாரைகள் உள்ளன. இதில் மாராபு நாரைதான் எல்லாவற்றிலும் பெரியது. பிற நாரைகளைப் போல கழுத்தை நீட்டிக்கொண்டு பறக்காமல் கழுத்தைச் சுருக்கிப் பறக்கிறது. மாராபு நாரை ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது. வறண்ட நிலப்பகுதிளிலும் நீர்நிலைகளின் அருகிலும் வாழ்கிறது. இரைதேடும் நேரங்களில் தனித்தோ, கூட்டமாகவோ காணப்படும். வனவிலங்குகள் வேட்டையாடித் தின்றபின் விட்டுச் சென்ற சடலங்கள் இருக்கும் இடங்களிலும், நகரங்கள், கிராமங்களிலுள்ள குப்பைத் தொட்டிகள், கசாப்புக் கடைகள் அருகிலும், மீன்பிடி கிராமங்களிலும் இவற்றைக் காணலாம். அடையும் நேரத்திலும் இனப்பெருக்கக் காலத்திலும் கூட்டமாக மர உச்சிகளில் பார்க்கலாம்.

சுமார் ஐந்தடி உயரத்தில் தலை, கழுத்துப் பகுதிகள் இறகுகளற்று, கருப்புப் புள்ளிகளுடன் இருக்கும்; அலகு நீண்டு பருத்திருக்கும்; மெலிந்த நீண்ட கால்களோடு அமைதியாக நிற்கும். பார்ப்பவர்களுக்கு.முற்றும் துறந்தவர் போல் காணப்படுவதால் 'மாராபு' என்ற பெயரைப் பெற்றது. மாராபு என்றால் 'தியானிப்பவர்' அல்லது 'முனிவர்' என்று அராபிய மொழியில் பொருள்படும்.

பின்னால் நின்று பார்த்தால், அதன் உடல்வாகும், கருப்புச் சிறகுகளின் தோற்றமும், ஐரோப்பிய நாடுகளில் கருப்புச் சட்டைகள் அணிந்து, இறந்தவரின் சடலத்தைத் எடுத்துச் செல்லும் ஊழியர்களைப் (morticians) போல் தோற்றமளிப்பதால், இதற்கு 'Undertaker' என்ற பெயரும் உண்டு.

மாராபு நாரை முழுக்கச் சிறகுகளை விரித்தால் குறுக்கே 12 அடி நீளம் இருக்கும். பால் வேறுபாடு தெரியாது. ஆண் பறவை, பெண் பறவையைவிடச் சற்றுப் பெரியதாக இருக்கும்.மாராபு நாரையின் முன்கழுத்தின் கீழ் சிவப்பு நிறத்தில் நீண்ட தோல்பையும் (gular porch), பின்கழுத்துப் பகுதியில் ஒரு சிறிய தோல்பையும் காணப்படும். முன் கழுத்திலுள்ள தோல்பைக்கும் உணவுக் குழாய்க்கும் தொடர்பு கிடையாது. ஆனால் இந்தப் பை இடது நாசித் துவாரத்தோடு தொடர்பு கொண்டது. இந்தத் தொடர்புமூலம் காற்றை உள்ளே இழுத்தும், வெளிவிட்டும் பையை விரிக்கவும் சுருக்கவும் முடியும்.

வளர்ச்சியடைந்த மாராபு நாரையினால் குரல் எழுப்ப முடியாது. ஆனால் மேல் அலகையும் கீழ் அலகையும் தட்டி ஒருவகை ஓசை எழுப்பும். மேலும் இடதுநாசித் துவாரத்தின் மூலம் முன்கழுத்திலுள்ள பைக்குள் காற்றை இழுத்துக் கரகரப்பான ஒலியை உண்டாக்கும். இந்தத் தோல்பைகள் இனப்பெருக்கக் காலத்தில் துணைப் பறவைகளைக் கவரவும் எதிரிகளை எச்சரிக்கவும் உதவுகின்றன.

குளிர்காலத்தில் உடல் வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள இறக்கைகளை விரித்து வைத்துக்கொள்ளும். கோடைக்காலத்தில் வெப்பத்தைத் தணிக்கக் கால்களின்மீது மலத்தை வெளிப்படுத்தும். இதனால் கால்கள் சுண்ணாம்பு நிறத்தில் காணப்படும்.

மராபு நாரை அனைத்துண்ணியாகும். புழு, பூச்சிகள், பாம்பு, பிற பறவைகளின் முட்டை, குஞ்சு, பிணம் போன்று எல்லாவற்றையும் உண்ணும். இவை பிணந்தின்னும் கழுகுகளைப் பின்பற்றிப் பறந்துபோய்ப் பிணம் காணப்படும் இடத்தைத் தெரிந்துகொள்ளும். கழுகுகள், கழுதைப்புலி, சிங்கம் போன்ற மிருகங்கள் வேட்டையாடி இரையை உண்ணும்போது பொறுமையாக ஒதுங்கி நிற்கும். சந்தர்ப்பம் கிடைத்ததும் இரையைக் கவர்ந்து விழுங்கிவிடும். காடுகள் தீப்பற்றி எரியும் போது, நெருப்புக்கு முன்னால் ஓடி, சுவாலைக்குத் தப்பி ஓடும் சிறு பூச்சிகள், சிறு விலங்கினங்களைக் கவர்ந்து உண்ணும்.

தலை, கழுத்துப் பகுதிகள் இறகுகளற்று இருப்பதால் ரத்தக்கறை, சகதி ஒட்டினால் எளிதில் சுத்தம் செய்துகொள்ள முடிகிறது. மாராபு நாரை, பிணங்கள், அழுகும் பொருள்கள், கழிவுப் பொருட்களை உண்பதன்மூலம் சுற்றுச்சூழலைத் துப்புரவு செய்கிறது. மனிதர்கள் வாழும் இடங்களில் இந்தப் பறவை ஊதியம் வாங்காமல் ஊரைச் சுத்தம் செய்யும் இயற்கைத் துப்புரவுத் தொழிலாளியாகப் பணிபுரிகிறது. வியாதிக் கிருமிகள் பரவுவதைத் தடுக்கிறது.அதனால்தான் உகாண்டாவில் இந்தப் பறவையை அதிகார பூர்வமில்லாத தேசியப் பறவையாக வைத்துள்ளார்களோ?

ஒரு சிறிய கற்பனை: இந்தப் பறவை உலக அழகன், அழகி போட்டியில் சேர முடியாதுதான். ஆனால் இந்த அழகற்ற பறவை, ஒரே ஒருநாள், தன் இனத்தோடு சேர்ந்து கொடி பிடித்து, குப்பைத் தொட்டிகளையும் தெருக்களையும் பிணங்களையும் சுத்தம் செய்ய மறுத்தால்?

அதற்குமேல் கற்பனை ஓடவில்லை. இந்த அழகற்ற பறவை மனிதனுக்குச் செய்யும் சேவையை, எந்த அழகிய பறவையாலும் செய்யமுடியாது! அதை நினைத்தபோது மாராபு நாரை மீது மதிப்புத் தோன்றியது.

அழகோ, அழகற்றதோ, இறைவனின் அல்லது இயற்கையின் ஒவ்வொரு படைப்பும் தனது கடமையைச் செய்கின்றது. சுயநலத்திலும் பொதுநலம் கருதி வாழ்கின்றது. மனிதர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்தான்!

சற்குணா பாக்கியராஜ்

© TamilOnline.com