சமர்ப்பண்: ஜெயதேவ் அனிருத் கச்சேரி
ஜனவரி 20, 2019 அன்று 'சமர்ப்பண்' (Samarpan - Healing with Music) அமைப்பின் ஏற்பாட்டில் செல்வன் ஜெயதேவ் அனிருத் ஷர்மாவின் (அட்லாண்டா) கர்நாடக சங்கீதக் கச்சேரி புரூக்ஃபீல்டு (மில்வாக்கி) திரு கணேசன் இல்லத்தில் நடைபெற்றது. செல்வன் சஞ்சய் சுரேஷ் வயலினும், செல்வன் அர்ஜுன் முரளிகிருஷ்ணன் மிருதங்கமும் வாசித்தனர்.

ஆபோகி வர்ணத்தில் தொடங்கிய கச்சேரி, ஷண்முகப்ரியாவில் "சித்தி விநாயகம்" என கணேசரைத் துதித்தது. "அபராதமுல" என்ற லதாங்கிக் கீர்த்தனைக்குப் பின் பூர்விகல்யாணியில் "ஞானமொசகுராதா" கிருதியை விஸ்தாரமாகப் பாடினார். பந்துவராளியில் "சாரசாக்ஷ', சாவேரியில் "துளசி ஜகஜ்ஜனனி", தர்மாவதியில் "பஜனசேய ராதா", ஜகன் மோஹினியில் "சோபில்லு" ஆகியவை தேனமுதமாகத் தொடர்ந்தன. நாட்டக்குறிஞ்சி ராகத்தில் அழகாக "திருக்கோலம் காண வாரீர்" என்று அழைத்தபின், ஜோக் ராக அபங்கம் செவிக்கு விருந்தானது. "ஜய பாண்டுரங்க ஹரே விட்டலா" என்ற மதுரமான சாயி பஜனை அடுத்து மங்களம் பாடி முடித்தார் ஜெயதேவ்.

புரூக்ஃபீல்டு அகடெமி உயர்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் செல்வி அனன்யா கணேசன் 'சமர்ப்பண்' என்னும் லாபநோக்கற்ற அமைப்பைத் தொடங்கி அதன் தலைவராக இருந்து நடத்தி வருகிறார். கர்நாடக சங்கீத ராகங்களின் நோய்தீர்க்கும் ஆற்றலில் மிகுந்த நம்பிக்கை கொண்ட அனன்யா, "எனது பிரியத்துக்குகந்த சிவரஞ்சனி ராகம் நினைவற்றல் பிரச்சனைகளைத் தீர்ப்பதை நான் கண்டதுண்டு" என்று உறுதிபடக் கூறுகிறார். குழந்தைகளுக்கும் இளையோருக்கும் இசை கற்பித்து, அதன்மூலம் அவர்களது மனநல, உடல்நல மேம்பாட்டுக்கு உதவுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார் அனன்யா.

புகைப்படத்தில்: சமர்ப்பண் அமைப்பின் நிர்வாகிகள்: அனன்யா கணேசஃன் (தலைவர்); சந்திரபூஷன் சௌஹான் (துணைத்தலைவர்); அட்சயா கணேசன் (செயலர்); ஜெயதேவ் அனிருத் ஷர்மா (இயக்குநர்); அர்விந்த் ராமகிருஷ்ணன் (இயக்குநர்); கீதா கணேசன் (பொருளர்).

தொடர்புகொள்ள
மின்னஞ்சல்: Samarpanhealingwithmusic@gmail.com
வலைமனை: samarpanmusic.wixsite.com/home

அனன்யா கணேசன்,
மில்வாக்கி, விஸ்கான்சின்

© TamilOnline.com