எதையும் பொருட்படுத்தாமல் கடவுளுக்காகவே ஏங்கு
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், நீ பலாப்பழத்தின் பால் கையில் ஒட்டிக்கொள்ளாமல் சுளைகளை எடுக்கவேண்டுமானால், விரல்களில் சிறிது எண்ணெயைப் பூசிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதுபோலவே, "உலகமும் அதன் எதிர்வினைகளும் உன்மீது ஒட்டிக்கொள்ளாமல் இருக்கவேண்டும் என்றால் உன் மனதில் சில துளிகள் உதாசீனத்தைப் (பொருட்படுத்தாமையை) பூசிக்கொள்ள வேண்டும்" என்றார் அவர். இந்தப் பொருட்படுத்தாமையால் உன்னில் கடவுளுக்காக ஆழ்ந்த ஏக்கம் ஏற்படுகிறது.

சைதன்யர் பிருந்தாவனத்துக்குச் சென்றார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீகிருஷ்ணரின் பாதம் அங்கே படிந்த காரணத்தால், அந்த மண்ணின் ஒவ்வொரு தூசியும் சைதன்யருக்குப் புனிதமானதே. பிருந்தாவனத்தில் கிருஷ்ணரல்லாத எதையும் பார்க்க, கேட்க, தொட, நுகர, சுவைக்க அவரால் முடியவில்லை. அவர் தன்னைச் சுற்றிய உலகை எவ்வளவு மறந்திருந்தார் என்றால் பசி, தாகம், சமூக மரபுகளைக்கூட அவர் கவனிக்கவில்லை. கோவிலில் கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதத்துக்கு மட்டுமே அவர் ஏங்கினார்.

ஓரிரவு அவரது கனவில் தோன்றிய கிருஷ்ணர், அவரிடம் இருந்த அந்த ஒரே ஒரு ஆசையைக்கூடக் கடிந்துகொண்டார்! இறுதியாக அந்த ஆசையையும் விட்டுவிட்ட சைதன்யர், கிருஷ்ணனுக்காக, கிருஷ்ணன் ஒருவனுக்காகவே, ஏங்கித் தவித்தார். அப்போது அவர்முன், அவருள்ளிருந்தே தோன்றித் தரிசனம் கொடுத்தான் கிருஷ்ணன். தெய்வ சைதன்யம் தோன்றி, மனித சைதன்யருக்கு ஒளி கொடுத்தது.

கடவுளின் மீது மட்டுமே மனதைப் பதித்து, சற்றும் அதிலிருந்து விலகாமல் இருக்கும் நியமத்தைக் கொண்டுவரக் கற்றுக்கொள்ளுங்கள்.

நன்றி: சனாதன சாரதி, ஃபிப்ரவரி 2018

ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com