மணக்கால் ரங்கராஜன்
தனித்துவமிக்க குரலாலும், தனது மேம்பட்ட இசைப் பாணியாலும் ரசிகர்களைக் கவர்ந்த மூத்த இசைக்கலைஞர் மணக்கால் ரங்கராஜன் (97) சென்னையில் காலமானார். இவர், திருச்சியை அடுத்த மணக்காலில், செப்டம்பர் 13, 1922 நாளன்று சந்தானகிருஷ்ண பாகவதர் - சீதாலக்ஷ்மி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயது முதலே தந்தையிடம் இசை கற்று வந்தார் ரங்கராஜன். அசுர சாதகம் செய்து இசையில் தேர்ந்தார். 15 வயதில் இவரது கச்சேரி அரங்கேற்றம் நிகழ்ந்தது. பின்னர் குடும்பம் சென்னைக்குக் குடி பெயர்ந்தது. கச்சேரி ஒன்றில் இவர் பாடிய 'நின்னுவினா' இவருக்கு மிகப் பெரிய புகழைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து கச்சேரி வாய்ப்புகள் வரத் துவங்கின.

அது அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், முசிரி சுப்பிரமணிய ஐயர், மதுரை மணி ஐயர், ஜி.என். பாலசுப்பிரமணியம், எம்.எஸ். சுப்புலட்சுமி போன்றோர் இசையுலகில் ஆதிக்கம் செலுத்திய காலம். அக்காலத்திலும் தனக்கென்று தனியாக ரசிகர்கள் கூட்டத்தை வசப்படுத்தி வைத்திருந்தார் ரங்கராஜன். தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, பெங்களூரு எனப் பல இடங்களுக்கும் சென்று கச்சேரிகள் செய்தார். ஒருசமயம் திருவையாற்றில் நடந்த கச்சேரியில் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய பிறகு கூட்டம் கலைந்து சென்றுவிட்டது. அடுத்து மணக்கால் ரங்கராஜன் பாடத் துவங்கினார். சில நிமிடங்களில் சென்றவர்கள் திரும்பிவந்து கேட்கத் துவங்கினர். கச்சேரி முடியும்வரை கலைந்து போகவில்லை. தொடர்ந்து ஆறு மணி நேரம் கச்சேரி செய்யும் அளவுக்கு ஆற்றல் மிக்கவர் ரங்கராஜன். இவரது மேதைமையைக் கண்டு வியந்த செம்பை வைத்தியநாத பாகவதர், இவருக்கு 'சங்கீத சிம்மம்' என்ற பட்டத்தை அளித்தார்.

அரியவகை ராகங்களைப் பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்த ரங்கராஜன், தனித்துவமிக்க தனது பிருகாக்களுக்காகப் பாராட்டப்பெற்றவர். சென்னை அகில இந்திய வானொலியின் துவக்க காலத்திலிருந்தே தொடர்ந்து பாடி வந்தவர். அரிதான பல்லவிகளை அநாயசமாகப் பாடும் திறன் பெற்றவர். விமர்சகர் சுப்புடு, இவரது இசைத் திறமையைப் பாராட்டியதுடன், இவருக்கு ஹார்மோனியமும் வாசித்திருக்கிறார். கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, மைசூர் சௌடையா துவங்கி, சமீபத்திய சூரியப்பிரகாஷ் வரை பல தலைமுறை இசைக் கலைஞர்களுடன் பயணித்தவர். மியூசிக் அகாதமி இவருக்கு மூத்த இசைக் கலைஞர் விருதை அளித்திருக்கிறது.

லண்டன் வாழ் இலக்கியவாதி பத்மநாப ஐயர், அங்கே இவரது கச்சேரி நிகழ்த்த ஏற்பாடு செய்தார். அப்போது மணக்கால் ரங்கராஜனுக்கு வயது 84. க்ளீவ்லாந்து தியாகராஜ ஆராதனை விழாவிலும் பாடியிருக்கிறார். ஹிந்துஸ்தானி, மேற்கத்திய இசைகளிலும் மேதைமை கொண்டவர். சங்கீத கலாசிகாமணி, ஞானகலா ரத்னா, காயக சாம்ராட், ஞானகலா சாகரா, தமிழக அரசின் கலைமாமணி, யுகாதி புரஸ்கார் உள்படப் பல விருதுகளும் பாராட்டுக்களும் பெற்றவர்.

தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடக்கமாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் மணக்கால் ரங்கராஜன். இவரது சீடர்கள் உலகம் முழுக்கப் பரவியிருக்கின்றனர். இவரது மனைவி பத்மா ரங்கராஜன் வாய்ப்பாட்டுக் கலைஞர். மகள் பானுமதி ஹரிஹரன் வயலின் கலைஞர். மகன் மணக்கால் ஸ்ரீராம் புகழ்பெற்ற மிருதங்க வித்வான். மருமகள், விஜி ஸ்ரீராம் தம்புராக் கலைஞர். இவரது இசை வாழ்க்கையை அம்ஷன்குமார் ஆவணப்படமாகத் தயாரித்திருக்கிறார். அந்த அரிய ஆவணப்படத்தைக் காண:


© TamilOnline.com