ஜாலியாகக் குனியுங்கள்
அன்புள்ள சிநேகிதியே

கடந்த இதழில் ஒருவர் தான் principled ஆக இருந்த காரணத்தால் பல வேதனைகளை அனுபவித்ததாகப் படித்தேன். அவர் தன் பிரச்சினைகள் நீங்கி மீண்டும் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க நான் வேண்டுகிறேன்.

என்னுடைய பிரச்சனை முற்றிலும் வேறானது. நான் மிகவும் ஜாலி டைப். எனக்கு மனிதர்கள் வேண்டும். நான் எந்தச் சட்டதிட்டங்களும் வைத்துக் கொள்வதில்லை. இருந்தாலும் என் வாழ்க்கை கொடுமையானது. ஆரம்ப நாள் முதலே எனக்கும் என் மனைவிக்கும் புரிதல் கிடையாது. பெற்றோர் பார்த்துச் செய்த திருமணம். ஜாதகம், அந்தஸ்து என்று பார்த்து, தலையை அசைத்து விட்டேன். குணத்திலோ எனக்கு நேரெதிர். மனிதர்கள் வந்து போவது பிடிக்காது. 'நறுக்'கென்று பேசும் இயல்பு. யாராவது ஏதாவது சொன்னால் அதை மறந்து மன்னிக்கும் பக்குவம் கிடையாது. கறுவிக்கொண்டே இருப்பாள் உறவினர்கள் ஏதாவது கமெண்ட் அடித்துக்கொண்டு தான் இருப்பார்கள், அதையெல்லாம் பொருட்படுத்தினால் யார்தான் நம் பக்கம்? எனக்கு யாரும் வேண்டாம் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டாள். முதலில் விட்டுக் கொடுத்துப் போன நான் அப்புறம் மிகவும் சீரியஸாக மாறிவிட்டேன். வேலை முடிந்தால் வீட்டுக்குப் போவதில்லை. அதிகம் பேசுவதில்லை. என் உலகமே வெளியில்தான். மனைவியிடம் இருந்து ஒதுங்கி ஏதோ குடும்பத்தை ஓட்ட வேண்டும் விவாகரத்து, பிரிந்து வாழ்தல் என்று இடம் கொடுக்கக்கூடாது என்று நினைத்து, மொத்தக் குடும்பத்தையே தொலைத்துவிட்டது போல ஒரு நிலைமை. என் குழந்தைகள் - இப்போது பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். என்னுடன் ஒட்டவில்லை. ஒரு பையன், ஒரு பெண். எல்லாம் அம்மாதான் என்று ஆகிவிட்டது. பையன் எந்த எந்தக் காலேஜில் விண்ணப்பித்து இருக்கிறான் என்று என்னிடம் சொல்வதில்லை. ஆனால், நான் கேட்டால் எல்லாம் கொண்டு வந்து காட்டிச் சொல்கிறான். அம்மா இல்லாதபோது என்னுடன் நன்றாகப் பழகுகிறான். ஆனால், பெண் எதைப்பற்றியும் என்னிடம் டிஸ்கஸ் செய்வதில்லை. அவள்தான் பெரியவள். வேலைக்கு ஏதோ ஆஃபர் வந்தது தெரிந்து, நானே கேட்டேன். ரொம்பத் துச்சமாகப் பதில் சொன்னாள். குணத்தில் அம்மா; அழகில் அப்பா. நானே பெருமைப்பட்டுக் கொள்ளுகிறேன்.

சமீபத்தில், அம்மா, பெண் இரண்டு பேருமே இப்படி தூக்கியெறிந்து பேசியதால் நான் மிகவும் அப்செட் ஆகி இருந்தேன். வீட்டில்தான் இருந்தேன். மனைவி வெளியில் சென்றிருந்தாள். என் பெண் நண்பர்களுடன் எங்கேயோ வெகேஷன் என்று போயிருந்தாள். எங்கே போகிறாய், பாய் ஃப்ரண்டா, நண்பர்களா என்று கேள்வி கேட்டேனாம். அது ரொம்பத் தப்பாகப் போய்விட்டது. அவர்கள் என்னைப் பிய்த்து உதறி விட்டார்கள். நான் ஒரு மாதிரி ஜோக்தான் அடித்தேன் "எனக்கு செக்கை எழுதத்தான் உரிமை இருக்கிறது; செக் செய்ய உரிமை இல்லையா?" என்று கேட்டுவிட்டேன். கோபம் அவர்களுக்கு. அதில் விவாதம். ஆக மொத்தம் இவள் இப்படிக் கிளம்பி ஏர்போர்ட்டுக்குப் போனாள். அவள் எங்கோ ஷாப்பிங்/பார்ட்டி என்று போய்விட்டாள். நான் பித்தனாய் வீட்டில் இருக்கவேண்டிய நிலை. திடீரென்று ஒரு ஃபோன் கால். மனைவியின் கார் எஞ்சின் பழுது. நான் அவளை பிக்கப் செய்து கொள்ள வேண்டும். எனக்கு இருந்த வெறுப்பில், "எப்படிப் போனாயோ அப்படியே வந்து சேர். AAA-ஐக் கூப்பிடு. உன் நண்பர்கள் யாரையாவது உதவிக்குக் கூப்பிடு" என்று சொல்லி வைத்துவிட்டேன்.

45 நிமிடம். காரேஜ் கதவு திறந்தது. புயலாக வந்தாள். பொரிந்து தள்ளினாள். எவ்வளவு திட்ட முடியுமோ அவ்வளவு திட்டித் தீர்த்தாள். மறுநாள் பெண்ணிடமிருந்து ஃபோன் கால். நான் எப்படி ஒரு பொறுப்பற்ற கணவன், தந்தை என்று சுட்டிக் காட்டினாள். பையன் ஒரு மாதிரிப் பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டான். இரண்டு வாரம் ஆகிறது. கொஞ்சநஞ்சம் இருந்த பேச்சு வார்த்தை கூடக் கிடையாது. அவளுக்கும் ஒரு சப்போர்ட் குரூப் இருக்கிறது. அவர்களுக்கும் தெரிந்து இருக்கிறது உள்நிலைமை மோசமாகி விட்டது என்று. எனக்கு என் குழந்தைகள் மேல் பாசம் நிறைய உண்டு. அவளையும் வெறுக்கவில்லை. மற்ற குடும்பங்களைப் போல சந்தோஷமாக இருக்க முடியவில்லையே என்று மிகவும் வருத்தமாக இருக்கிறது. எங்கே தவறு செய்கிறேன் என்று புரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது, உதவ முடியுமா?

இப்படிக்கு,
...........


அன்புள்ள சிநேகிதரே

நீங்கள் எழுதிய குறிப்பிலிருந்து உங்களுக்குத் திருமணமாகி 22-25 வருடங்கள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்திற்கு முன்னால் எத்தனை முறை இதுபோல் சம்பவங்கள் நடந்துள்ளன என்று எனக்குத் தெரியாது. என்னுடைய கருத்தில் நீங்கள் உங்கள் மனைவி கூப்பிட்டபோது போயிருக்கவேண்டும். முதலில் அது உங்களது கடமை. இரண்டாவது அது மனிதத்தன்மை. மூன்றாவது அவரே உங்களிடம் உதவி கேட்டிருக்கிறார்.

நீங்கள் விவாகரத்துச் செய்திருந்தாலும் அதுபோன்ற உதவி கேட்டால் செய்திருக்க வேண்டும் என்றுதான் நான் சொல்வேன். குடும்ப நிலைப்புக்காக நீங்கள் எப்போது விவாகரத்து செய்துகொள்ளாமல் இருந்தீர்களோ, அதே காரணத்திற்காக நீங்கள் இந்த உதவியைச் செய்திருக்கலாம். இதெல்லாம் குடும்பக் கடமைகள். அவளிடம் அடி வாங்கிய காயம் மனதில் ஆறவில்லை, சூடு தணியவில்லை என்று நீங்கள் சொல்லலாம். But you have to rise above this to reach out to her.

இப்போதும் பரவாயில்லை. விபரீதமாக எதுவும் நேர்ந்துவிடவில்லை. ஒரு சின்ன apology. அதை அவர் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிந்தும் செய்யவேண்டியது உங்கள் கடமை. பிறகும் உங்கள் மனைவி எந்த உதவி கேட்டாலும் சந்தோஷமாகச் செய்து முடித்துவிடுங்கள். குழந்தைகளின் எதிர்காலம் குடும்பத்தின் ஸ்திரத்தன்மை என்று பார்க்கும்போது கொஞ்சம் ஈகோவை விட்டுக் கொடுக்க முடியுமா? முடியும் என்றுதான் உங்கள் ஈகோ சொல்லும். நீங்கள் ஜாலி டைப் இல்லையா, ஜாலியாகச் செய்யுங்கள். ஜாலியாகக் குனியுங்கள். குனியக் குனிய உயர்வீர்கள்

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com

© TamilOnline.com