தென்றல் பேசுகிறது...
யாராவது ஒருவர் ஏதோவொரு சமயத்தில் துணிச்சலாக "அரசர் துணியே அணியவில்லை" என்கிற உண்மையைச் சொல்லவேண்டியதாக இருக்கிறது. மைக்கல் கோஹன் பேசத் துணிந்தது நல்லதுதான். ரத்தினச் சுருக்கமாக அவர் ட்ரம்ப்பை மூன்று சொற்களில் விவரித்தார்: "a racist", "a con man" and "a fraud". அப்படிச் சொன்னதோடு அதற்கான ஆதாரங்களையும் கொடுத்தார். விலைமாதின் வாயடைக்கப் பணம் கொடுத்த செக்கின் நகல், நன்கொடை தரும் சாக்கில் செய்த தில்லுமுல்லு என்று எல்லாவற்றையும் பொதுவில் அவிழ்த்துவிட்டார். கோஹனை விசாரித்த குடியரசுக்கட்சி செனட்டர்கள் உண்மையை அறிவதைவிட, கோஹனை எப்படி மட்டம் தட்டலாம் என்பதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். ஆனால், உண்மையை மூடி மறைக்க முயல்வது, கொழுந்து விட்டெரியும் நெருப்பை பஞ்சுப் படலத்தால் மூடிவைக்க முயல்வது போலத்தான். "வரிவிலக்குகளை விட, வர்த்தகப் போர்களைவிட, தெற்கு எல்லையில் சுவர் எழுப்புவதைவிட, குடியரசுக் கட்சியினர் அதிகத் தீவிரமாக இருப்பது உண்மையை அழிப்பதில்தான் - அதுவும் தமது தலைவர் ட்ரம்ப்பைக் காப்பாற்றுவதற்காக" என்கிறார் பீட்டர் வெஹ்னர். இவர் முன்னாள் குடியரசுக் கட்சிக்காரர். "பத்தாண்டுகள் ட்ரம்ப்புக்குச் சாதகமாகப் பேசினேன். என்னைப் போலவே குருட்டுத்தனமாக அவர் பின்னே சென்றால், எனக்கு ஏற்பட்ட இதே நிலை இன்னும் பலருக்கும் ஏற்படும்" என்று எச்சரிக்கிறார் கோஹன். இப்போதாவது உண்மை வெளிவருகிறதே என்று மக்கள் மகிழ்ந்தால் போதாது, எப்போதும் இப்படிப்பட்ட நபர்கள் மீண்டும் தலைமையைக் கைப்பற்றிவிடக் கூடாதென்பதற்காகச் சிந்தித்துச் செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

*****


"நம்பற்குரியர் அவ்வீரர் தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்" என்று பாரதி பாடினான். சற்றே பழைய போர்விமானத்தைக் கொண்டு, பாகிஸ்தானின் அதிநவீனப் போர்விமானத்தைத் தகர்த்துவிட்டு, அந்த நாட்டின் மண்ணில் வீழ்ந்து பிடிபட்டபோதும், மானத்தையும் வீரத்தையும் கைவிடாத அபிநந்தனைப் பாராட்டுவதில் விம்மிதமுறுகிறோம். "தேசீய கீதம் மறந்து போய்விட்டது, சீனாக்காரனே ஒரு குண்டு போடு" என்று நெடுநாளைக்கு முன் ஒருவர் கவிதை எழுதினார். அவர்கூடப் போர்க்காலத்தில் நம்மிடையே ஏற்படும் ஒற்றுமையைப் பார்த்து, அப்படியாவது ஒற்றுமை வரட்டும் என்கிற நல்லெண்ணத்தில்தான் எழுதினார். ஆனால் இன்றைக்குச் சில ஊடகங்கள் 'இந்தியாவில் வயிறும் எல்லைக்கப்பால் விசுவாசமும்' கொண்டு இயங்குவதைப் பார்த்து மனம் பதைக்கிறது. கொள்கை, கட்சி இன்னும் பிற காழ்ப்புணர்வுகளின் விஷத்தை நமது ராணுவத்தின் மீது கக்காமல் இருந்தால் அதுவே பெரிய உதவியாக இருக்கும். 'அபிநந்தன்' என்ற சொல்லுக்கு வணங்குதல் என்று பொருள். அவரையும், நம்பற்குரிய நம் வீரர்களையும் வியந்து, போற்றி வணங்குகிறோம்.

*****


மேடை நாடகம் நலிந்துவிட்டது என்ற புலம்பலைப் பொய்யாக்கிக் காட்டியவர் பாம்பே ஞானம். முழுக்கப் பெண்களே நடிக்கும் 'மகாலட்சுமி நாடகக் குழு'வை மும்பையில் தொடங்கி, சென்னைக்குக் கொண்டுவந்து, சமூக நாடகங்கள் முதல் ஆன்மீக நாடகங்கள் வரை வழங்குவதில் வெற்றி கண்டவர். இவரது நேர்காணலைத் தென்றலின் பெண்கள் சிறப்பிதழில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். சமுதாய மாற்றங்களும் சீர்திருத்தங்களும் ஏதோ ஓரிருவரே செய்துவிட்டது போன்ற பொய்யான பிம்பத்தைச் சிதைக்கும் மற்றுமோர் சிற்றுளி 'எஸ். அம்புஜம்மாள்' குறித்த முன்னோடிக் கட்டுரை. ஆன்மீகத்தில் பெரிய உயரங்களை எட்டிய ஸ்ரீ சக்கரை அம்மாளும் குறிப்பிடத் தக்கவரே. முதல் பெண் போர் விமானி அவனி சதுர்வேதி தொடங்கி, இன்னும் பலர் மகளிரின் உழைப்பையும் உயர்வையும் சித்திரித்துக் கொணர்கிறது தென்றல். காதலிருவர் கருத்தொருமித்துச் செயல்பட்டால் தமது வாழ்விடத்தை மாற்றிக் காட்டலாம் என்று கருத்தடங்கிய குறுநாவல் ஒன்றும் இடம்பெறுகிறது. வாசியுங்கள், யோசியுங்கள், நேசியுங்கள்.

வாசகர்களுக்குச் சிவராத்திரி புனிதநாள் வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

மார்ச் 2019

© TamilOnline.com