பிப்ரவரி 2019: வாசகர்கடிதம்
டிசம்பர், ஜனவரி மாதத் தென்றல் இதழ்களில் 'சாயி பிரசாத் வெங்கடாசலம்' அவர்களைப் பற்றிய விவரங்கள் படித்து வியப்படைந்தோம். உலகத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் திறவுகோல் சுயநலமின்மையே என்பதையும், கடவுளின் சாரம் அன்புதான் என்பதையும் தனது பணிகள்மூலம் அவர் நிரூபிக்கிறார்.

ஜனவரி இதழில் கவிஞர் சுந்தர்ஜி ப்ரகாஷ் அவர்களின் அத்தனை கவிதைகளும் எளிமை, அற்புதம். நேர்காணலில், அடையாளம் காணப்படாத எளிமையான வாழ்க்கைதான் வாழ்வின் ஆனந்தம் என்பன போன்ற உயரிய கருத்துக்கள் நிறைந்திருந்தன. 'ஒலிப்பார்வை' என்ற அறிவியல் கற்பனையை உண்மையாக்கிய சாதனையாளர் ராஜலக்ஷ்மி நந்தகுமாருக்குப் பாராட்டுக்கள். தைப்பூசப் பாதயாத்திரை விவரங்கள் எங்கள் பாதயாத்திரைக்கு மிகவும் உதவியாக இருந்தன. 'ஸ்ரீ ஷீரடி சாயிபாபா' சரிதம் ஆரம்பமே அற்புதம். நியாய அநியாயங்களை எடுத்துக்காட்டிய 'சின்னக்கதை' சிறப்பானது.

இலக்கிய உலகின் நம்பிக்கை முகமாகிய எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியைப் பற்றிய விவரங்களும் அவர் எழுதிய சிறுகதையும் மனதை நிரப்பின. வேர்கள்தானே எவ்வளவு பெரிய மரத்தையும், கிளைகளையும் தாங்குகின்றன, எங்களைப்பற்றிக் கவலை வேண்டாம் என்று தம் பிள்ளைகளிடம் சொல்லும் 'வேர்களும் கிளைகளும்' சிறுகதை யோசிக்க வைத்தது. 'Penny For Poor' பிரணவ் ராமச்சந்திரனின் வித்தியாசமான குறிக்கோள் போற்றத்தக்கது.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com