தெரியுமா?: அருள்தரும் ஆலய தரிசனம்: நூல் வெளியீடு
ஜனவரி 19 அன்று, சாரடோகா PROSPECT அரங்கில், திருமதி சீதா துரைராஜ் அவர்கள் எழுதிய 'அருள் தரும் ஆலய தரிசனம்' என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தென்றல் மாத இதழின் 'சமயம்' பகுதியில், இந்தியாவிலுள்ள கோவில்களைப் பற்றி சீதா துரைராஜ் எழுதிவரும் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.

இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. திருமதி ஜெயஸ்ரீ துரைராஜ் அவையினரை வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து தென்றல் இதழின் முதன்மை ஆசிரியர் திரு. மதுரபாரதியின் தலைமை உரை ஆடியோவாக ஒலிபரப்பப்பட்டது. பின்னர் முனைவர் கிருஷ்ணவேணி அவர்கள் நூலைப்பற்றிச் செய்திருந்த விமர்சனம் வீடியோ காட்சியாக ஒளிபரப்பப்பட்டது. அடுத்து சுந்தர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆங்கிலத்தில் இந்த நூலை 'Temples of India - A Spiritual Journey' என மொழிபெயர்த்ததன் சிறப்பு பற்றிப் பேசினார். தமிழ் மொழியின் பெருமை, கோவில்களின் சிறப்பு ஆகியவைபற்றித் தெரிந்துகொள்ள இந்த நூல் உபயோகமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

அடுத்துப் பேசிய திரு ரமேஷ் வேலம்பாளையம் நூலில் இடம்பெற்ற கோவில்களில் சிலவற்றைப் பற்றி எடுத்துச் சொன்ன விதம் சிறப்பு. திருமதி வசந்தி வெங்கட்ராமன் பேசுகையில் வாசகர்கள் அனைவரும் படிக்கும் விதமாக நூலை எழுதியிருப்பதைப் பாராட்டியதோடு, ஆசிரியரைப் புகழ்ந்து கவிதையும் வாசித்தார். தென்றல் பத்திரிகையின் பதிப்பாளர் திரு. சி.கே. வெங்கட்ராமன், திருமதி சீதாதுரைராஜ் அவர்களின் காலம் தவறாமை, மாதாமாதம் கட்டுரை எழுதி அனுப்பும் விதம், தென்றல் இதழ் 19 வருடங்களாக வளர்ந்து, வாசகர்களின் ஆதரவு பெருகிவருவது குறித்து விரிவாகப் பேசினார்.

சீதா துரைராஜ் தமது ஏற்புரையில், சிறுவயதிலிருந்தே தனது எழுத்தார்வத்தை ஊக்குவித்த தனது பாட்டனார் பற்றியும், விடாமுயற்சி, உழைப்பு, நேர்முகச் சிந்தனைகளுடன் ஈடுபட்டால் எந்த வயதிலும் தனது லட்சியத்தைச் சாதிக்க முடியும் என்று அவர் தந்த ஊக்கத்தைப் பற்றியும் உருக்கமாக எடுத்துரைத்தார். பத்திரிகைகளுக்குக் கட்டுரைகளை அனுப்பவும், கோவில்களுக்கு நேரில் சென்று பின்னர் அதுபற்றி எழுதுவதற்கும் ஊக்கமளித்த தனது கணவரைப் பற்றியும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இறுதியாக திருமதி ஜெயஸ்ரீ துரைராஜ் அவர்கள் நன்றி தெரிவிக்க, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

ஜெயஸ்ரீ துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com