காப்பீடு
அமெரிக்கா என்றாலும் அதிகாலை நேரம் அலுவலகப் பரபரப்புதான். அன்று என் கணவர் ஞானோதயம் வந்தவர்போல எல்லா உதவிகளையும் செய்தார், காய்கறி நறுக்கி, குழந்தைக்கு பூஸ்ட் கொடுத்து எழுப்பி, டிஃபன் பாக்ஸ் கட்டிவைத்து எல்லாம் செய்தவர், மைனஸ் 3 டிகிரி குளிர் என்று ஐந்து நிமிடம் முன்பாகவே காரை ஆன் செய்து, ஹீட்டரைப் போட்டுவைத்தார். ஆனந்தமாகப் பள்ளிக்குப் புறப்பட்டோம் நானும் மகனும்.

பள்ளியில் செய்யவேண்டிய வேலைகளை யோசித்தபடி காரை ஓட்டினேன். சமாமிஷ் சாலையில் இன்றும், என்றும் அதே நெரிசல்தான். டேஷ்போர்டில் புதிய பூ ஒன்று கண் சிமிட்டியது, "அண்டாக்குள்ள பிரச்சனைங்கோ!" என்பதுபோல ஒரு ஐக்கன். அடுத்த சிக்னலில் பயனர் கையேட்டை எடுத்துப் பின்னால் இருந்த பிள்ளையின் கையில் கொடுத்துப் பார்க்கச் சொன்னால், "வண்டிச்சக்கரத்தில் காற்றுக் குறைவுன்னு அர்த்தம்மா" எனத் தெளிவாகச் சொன்னான் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் என் மகன். இது என்னடா புதுத் தலைவலி எனப் போகிற போக்கில் 'வீட்டைக் கூப்பிடு' என ஆணை இட்டேன். கார் கணவரை ஆஜர் செய்தது. அவரோ குளிர்காலத்தில் இப்படித்தான் கார் 'காற்று குறைவு' எனக் குறை சொல்லும், கண்டுகொள்ளாமல் போ என்றார்.

வேகமெடுத்து விரைவுச் சாலையில் செல்ல, பக்கம் வந்தவர் ஹார்ன் அடித்து வண்டிச்சக்கரத்தில் காற்று இல்லையம்மா எனக் கையை ஆட்டி ஆட்டிச் சொல்லிச் சென்றார். காரை ஓரங்கட்டிக் கணவரைக் கூப்பிட்டால், அவர் "கவலைப்படாதே நம்மிடம் முழுமையான வாகனக் காப்பீடு இருக்கிறது சாலையோர உதவியைக் கூப்பிடுகிறேன்" என்றார். சாலையில் அனைவரும் அவசரமாக ஓட, நானும் என் மகனும் அத்தனை பேரையும் மின்சாரக் கம்பியில் அமர்ந்திருக்கும் பறவைகள்போலச் செய்வதேதும் இன்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். இதோ வருகிறார் அதோ வருகிறார் எனக் கணவரும், இன்சூரன்ஸ் கம்பெனி ஆட்களும் சொல்ல, காலம்தான் நகர்ந்தது, எவரும் வந்தபாடில்லை.

கடைசியாக சிரித்த முகத்துடன் வந்தார் ஒருவர், மின்னல் வேகத்தில் ஸ்டெப்னி டயரை மாட்டிவிட்டார். "மிக்க நன்றி" என இருவரும் புன்னகைத்தோம். "நல்லது, ஹேவ் எ நைஸ் ஜர்னி!" என வாழ்த்தி நகர்ந்தார். எல்லாம் சுபம் என ஒரு end card போடுவதற்காகக் கணவருக்குப் பேசினால் அவர் இன்சூரன்ஸ்காரன் இன்னும் ஐந்து நிமிடத்தில் வருவான் என்றார்!

அப்போதுதான் தெரிந்தது ஸ்டெப்னியை மாற்றியது யாரோ ஓர் ஆபத்பாந்தவன் என்று. எத்தனை உயரிய காப்பீடுகளை விடவும் மனிதநேயம் எத்தனை மகத்தான காப்பீடு. வாழ்க்கையில் இப்படி எத்தனை எத்தனை ஆபத்பாந்தவர்கள் உதவுகிறார்கள். அந்தப் புன்னகை நிறைந்த முகத்திற்கு மீண்டும் மீண்டும் நன்றி சொல்லிக்கொண்டேன்.

சுஷ்மா குருபிரசாத்,
சமாமிஷ், வாஷிங்டன்

© TamilOnline.com