ஆப்பிள் படுத்தும் பாடு (அத்தியாயம்-4)
கோடை விடுமுறைக்காக வந்த இடத்தில் தன் மகள் இவ்வாறு நடந்துகொண்டது அஷோக்கிற்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. அவருக்கு அனுவின்மேல் ரொம்பக் கோபம் வந்தது. "ரமேஷ், அருணுக்கு ஒன்றுமில்லை, அனுவிடம் இப்படிக் கடுமையாக இருக்கவேண்டாம்" என்று அஷோக்கைச் சமாதானப்படுத்தினார். நடந்தது ஒரு விளையாட்டுதானே என்று சாதரணமாக இருந்தார் ரமேஷ்.

அருணும் கொஞ்சம்கூட அலட்டாமல் அமைதியாக இருந்தான். சிறுவர் மூவரும் அருணின் காயத்தைக் கேலி செய்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"இது ப்ளம்ஸ் பழம்போல இருக்கு" என்றான் அரவிந்த்.

"இல்லை, இது தக்காளி" என்றாள் அனு.

மூன்று குழந்தைகளும் சிரிக்க, அந்தச் சிரிப்பில் பெரியவர்களும் கலந்து கொண்டார்கள். கீதாவும் பாலாவும் மௌனமாக இருந்து குழந்தைகளின் பக்குவத்தை ரசித்தார்கள். குழந்தைகள் நடந்ததைச் சகஜமாக எடுத்துக்கொண்டு சில நொடிகளில் மாறியது மகிழ்ச்சியாகவே இருந்தது.

"கீதா அத்தை, அருணின் கழுத்தில் Adam's apple, ஆனா, அருணின் நெஞ்சில் Arun's apple" என்று அனு கிண்டல் செய்தாள்.

"அப்படியானால், ஈவ் யார்? கீதா அத்தை அருணுக்கு கேர்ள் ஃப்ரண்ட்ஸ் உண்டா?'" என்று சீண்டினான் அரவிந்த். பாலா தயக்கத்துடன் "கீதா, உங்க வீட்டுல நீங்க வாங்கறது ஆர்கானிக் ஆப்பிளா?" என்று கேட்டாள்.

அருண் முந்திக்கொண்டு "பின்னே, அம்மா எப்போதும் ஆர்கானிக் பழங்கள்தான் வாங்குவாங்க" என்றான். "அதில் என்ன சந்தேகம் பாலா அத்தை?"

பாலா தயக்கத்துடன் கையில் இருந்த ஆப்பிளைக்காட்டி, "கீதா, இது உண்மையிலேயே ஆர்கானிக் தானா?" என்று கேட்டார்.

பாலா சந்தேகமாகக் கேட்டதும், அருணின் மூளையில் ஒரு ஷாக் அடித்தது. எர்த்தாம்டன் நகரில் சில காலமாக நடந்த சம்பவங்களில் அருண் ஈடுபட்டதால், அவனின் குழந்தைத்தனம் போய் அவன் ஒரு போர்வீரன் போலச் சிந்தித்தான். அதுவும், ஹோர்ஷியானா நிறுவனம் என்றால் புலிபோலப் பாயத் தயாராக இருந்தான். கொஞ்ச நாளாகவே அவனுள் இருந்த ஆப்பிள் பற்றிய சந்தேகம் திடீரென்று ராட்சச உருவம் கொண்டது. அனு, அரவிந்துடன் அவன் அடித்துக் கொண்டிருந்த லூட்டி சட்டென்று நின்றது. பாலா அத்தை மேலும் என்ன சொல்லப் போகிறார் என்று கேட்பதில் மிகவும் உன்னிப்பானான்.

அருணின் முகத்தில் மாற்றத்தைக் கண்டவுடன், கீதா மெதுவாக ரமேஷ் அருகில் சென்று கிசுகிசுத்தார். ரமேஷ் மெதுவாக பாலாவிடம் கிசுகிசுத்தார். கீதாவிற்குத் தெரியும் பின்விளைவுகள் பற்றி. பாலாவின் பேச்சால் அருண் ஏதாவது விவகாரம் பண்ணி விடுவானோ என்று கீதா பயந்தார்.

"அம்மா, பாலா அத்தை சொல்வதுபோல நம்மிடம் இருக்கும் ஆப்பிள்களில் ஏதோ தவறு இருக்கிறதுபோல. நாம கவனிக்காத ஏதோ ஒன்று பாலா அத்தை கண்ணில் பட்டிருக்கு." அருண் அந்த உரையாடலைத் தொடர்வதில் உறுதியாக இருந்தான். பாலா அவன் பேச்சைத் திசைதிருப்பப் பார்த்தாள்.

"இல்லை அருண். நான் ஏதோ தப்பா பார்த்திருக்கேன். எல்லாம் ஒழுங்காத்தான் இருக்கு" என்றார் பாலா. அருண் மசியவில்லை.

"இல்லை அத்தை, நீங்கள் ஏதோ சொல்ல வந்தீர்கள். மறைக்காமல் சொல்லுங்க" என்று வற்புறுத்தினான். அருணின் குரல் ஒரு ஆர்மி கமாண்டர் கட்டளையிடுவது போன்று இருந்தது. பாலா கொஞ்சம் நடுங்கிப் போனார்.

ரமேஷ் விருந்தாளிகள் முன்பு எதையும் காட்டிக்கொள்ள விரும்பாமல் அமைதியாக இருந்தார். அனுவும், அரவிந்தும், அருணின் முகமாற்றத்தைப் பார்த்து மிரண்டு போனார்கள். அனு, அருணின் மூடை மாற்றுவதற்காக, "வா அருண், நாம கிரிக்கெட் விளையாடப் போகலாம்" என்று சொல்லி அருணை இழுத்தாள்.

"ஆமாம் அருண், வா போகலாம்" என்று அரவிந்தும் சேர்ந்து இழுத்தான்.

பெரியவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அருண் விட்ட பாடில்லை. "பாலா அத்தை, நீங்க ஆப்பிளைப் பற்றிச் சொல்லவந்ததை சொல்லுங்க, ப்ளீஸ்" என்றான்.

பாலா தர்மசங்கடமாக உணர்ந்தாள். அருணுக்கும் ஹோர்ஷியானாவுக்கும் உள்ள பகையைப்பற்றித் தெரிந்திருந்தால் அவர் ஆப்பிளைப் பற்றிக் கேட்டிருக்க மாட்டார். "அருண், ஆப்பிள்ல எந்தக் குறையுமில்லை. நான்தான் ஏதோ உளறிட்டேன்" என்று பாலா சமாளிக்கப் பார்த்தார்.

"அருண், அம்மாதான் சொல்லிட்டாங்களே சும்மான்னு, வா விளையாடப் போகலாம்" என்று அனு, அருணை இழுத்தாள். "எங்கம்மா, தான் தப்புன்னு ஒத்துக்கறது ரொம்ப அரிது" என்று ஜோக் அடித்தாள். அருணுக்கு எந்த ஜோக்கையும் ரசிக்க மனமில்லை. அவன் சிந்தனை எங்கோ இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த ரமேஷுக்கு கோபம் தலைக்குமேல் ஏறியது.

"அனு, பாலா, நீங்க இப்படி கெஞ்சாதீங்க" என்று சொல்லிவிட்டு, அருணைப் பார்த்து சத்தமாக, "இது சரியில்லை அருண். Drop this nonsense" என்று ஒரு கத்துக் கத்தினார்.

ரமேஷ் கத்தின கத்தலில் அனு பயந்துபோய் அருணை இறுகக் கட்டிக்கொண்டாள். ஆனால், அருண் தன் அப்பாவின் கத்தலைக் கொஞ்சம்கூடச் சட்டை செய்யவில்லை.

பாலா பணிவுடன் கீதாவையும் ரமேஷையும் பார்த்து "சாரி. என்னால்தான் இந்த விபரீதம்" என்று கண்ணீர் விடாத குறையாக வருந்தினார். அருண் ஒரு பாறைபோல உம்மென்று இருந்தான். அவன் கண்களில் நீர் வழிந்தாலும், அவன் கொஞ்சம்கூட அசையாமல் நின்றிருந்தான்.

அருண் மூன்றாம் முறையாக, "பாலா அத்தை, அப்படி என்ன வித்தியாசமாக இருக்கு இந்த ஆப்பிள்ல? ஏதோ தப்பு கண்டுபிடிச்சிருங்கீங்க, ஆனா, என்கிட்ட சொல்லத் தயங்குறீங்க" என்ற அவன் குரலில் உறுதி தெரிந்தது. பாலா கீதாவைப் பார்க்க, அவர் சம்மதத்தின் அறிகுறியாக தலையசைத்தார்.

பாலா தயக்கத்துடன் "அருண், இந்த ஆப்பிளோட பளபளப்பு இயற்கையாக இல்லை. தன்னைப் பூச்சிகிட்டயிருந்து காப்பாத்திக்கச் சுரக்கும் மெழுகு இத்தனை பளபளப்பாக இருக்காது. இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கு. இது ஆர்கானிக்தானே?" என்றார் மறுபடியும்.

"ஆம், ஆப்பிள் லேபிளில அப்படித்தான் இருந்தது. இதுக்கு எந்த விதமான பூச்சிக்கொல்லியோ, ரசாயனமோ உபயோகப்படுத்தப் படவில்லை" என்று கீதா விளக்கம் கொடுத்தார்.

"கீதா நான் உங்களைப்போல விவசாய விஞ்ஞானி இல்லை. இது ஏதோ எனது அபிப்பிராயம்தான். ஒரு சின்ன சந்தேகமாக எடுத்துக் கொள்ளலாம், அவ்வளவுதான்" என்றார் பாலா.

அருண் மெதுவாக எழுந்து ஒரு புன்னகையுடன், "அம்மா, அப்பா, மாமா அஷோக், அத்தை பாலா, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது" என்று சொல்லிவிட்டு அதே புன்னகையுடன் மாடிப்படி ஏறித் தன் அறைப்பக்கம் சென்றான்.

(தொடரும்)

கதை: ராஜேஷ்
படம்: ஷான்

© TamilOnline.com