ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம், ஸ்ரீசைலம்
தென்னிந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் கர்னூல் ஜில்லாவில் நந்திக்கொட்கூரு தாலுகாவில் கிருஷ்ணா நதியின் வலப்புறத்தில் நல்லமலையில் அமைந்துள்ளது ஸ்ரீசைலம். கடல்மட்டத்திலிருந்து 476 மீட்டர் உயரத்தில் உள்ளது.

புராணப் பெருமை வாய்ந்த தலம் இது. 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. 51 சக்திபீடங்களில் இத்தலம் மூன்றாவது. ஸ்ரீசைல சிகரத்தைத் தரிசித்தால் ஜன்ம பாவங்கள் நீங்கும், புனர்ஜன்மம் இல்லை என வேதம் கூறுகிறது. மருந்து மூலிகைகள், அநேக புஷ்கரிணிகள் கொண்ட தலம்.

ஸ்ரீசைலத்திற்கு ஸ்ரீநகம், ஸ்ரீபர்வதம், ஸ்ரீகிரி, ஸ்ரீநகரம் எனப் பல பெயர்கள் உண்டு. இறைவன் பெயர் ஸ்ரீ மல்லிகார்ஜுனர். இறைவியின் பெயர் : ஸ்ரீபிரமராம்பா தேவி. கோவிலைச் சுற்றி 21 தீர்த்தங்கள் உள்ளன. சைவசமயக் குரவர் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். கிருதயுகத்தில் இரணியகசிபுவும், த்ரேதாயுகத்தில் ராவண வதம் முடிந்தபின் ஸ்ரீராமனும், துவாபரயுகத்தில் வனவாசத்துக்குப் பின் பாண்டவர்களும் இத்தலத்தைத் தரிசித்து ஆலயங்கள் அமைத்ததாக வரலாறு கூறுகிறது. கலியுகத்தில் ஆதிசங்கரர் தனது சிவானந்த லஹரியில் ஸ்ரீ மல்லிகார்ஜுனரை போற்றிப் பாடியுள்ளார். சத்ரபதி சிவாஜி, நாகார்ஜுனாச்சாரியார், கிருஷ்ணதேவராயர் ஆகியோர் இத்தலத்தைத் தரிசித்ததாக வரலாறு கூறுகிறது. கல்வெட்டுகளிலும் கட்டடங்களிலும் இதைப்பற்றிய செய்தி காணப்படுகிறது. சந்திரகுப்தர், ஹொய்சலர்கள், சாதவாகனர்கள், பல்லவர்கள், சோழர்கள், சாளுக்கிய அரசர்கள், சுல்தான்கள் எனப் பலரும் ஸ்ரீசைலநாதரைத் தரிசித்துத் தொண்டு செய்துள்ளனர். பௌத்தர் காலத்திலும் இத்தலம் சிறப்புற்று ஆச்சார்யா என்ற பௌத்த ஆசிரியர் வாழ்ந்ததால் இம்மலைக்கு நாகார்ஜுன மலை என்று பெயர் வந்ததாக வரலாறு. சீன யாத்திரிகர் யுவாங் சுவாங் ஸ்ரீசைல பௌத்த மடங்களை வர்ணித்துள்ளார்.

பகவான் தத்தாத்ரேயர் இத்தலத்தில் தவம் இயற்றினார். கோவிலில் உள்ள மரம் தத்தாத்ரேய மரம் என்று அழைக்கப்படுகிறது. தத்தாத்ரேய விருட்சம் என்பது தலவிருட்சம் ஆகும்.

சிலாத முனிவர், சிவனை நோக்கிக் குழந்தை வரம் வேண்டித் தவமிருந்தார். இரண்டு பிள்ளைகள் நந்தி, பர்வதன் என்று பிறந்தனர். சனகாதி முனிவர்கள் சிலாத முனிவரை கூப்பிட்டு நந்தி சில காலம் மட்டுமே பூமியில் வசிப்பான் என்று சொன்னதைக் கேட்டு சிலாத முனிவர் வருந்தினார். நந்தி தனது தகப்பனாரிடம், “சிவனை நோக்கித் தவம் இருந்து எனது மரணத்தை வெல்லுவேன்” என்று உறுதி கூறினார். அதுமுதல் தீவிர தவம் செய்தார். சிவனும் மனமகிழ்ந்து அதனை ஏற்றுக்கொண்டார். நந்திமுன் தோன்றி அருள் புரிந்து அவரைத் தனது வாகனமாக ஏற்றுக்கொண்டார். அல்லாமல் பக்தர்கள் நந்தி அனுமதித்த பின்னரே தன்னைத் தரிசிக்கலாம் என்றும் விதி அமைத்தார். நந்தி தவம் செய்த இடமே மலையின் அடிவாரத்தில் ‘நந்தியால்’ என்று அழைக்கப்படுகிறது. நந்தியின் சகோதரன் பர்வதன் தவம் செய்ததால் அம்மலை பர்வதமலை என அழைக்கப்படுகிறது.

சந்திர குப்த மன்னன் மல்லிகாபுரி பகுதியை ஆண்டு வந்தான். மன்னன் மகள் சந்திரலேகா சிறந்த சிவபக்தை. சிவபெருமானை மல்லிகை மலர்களாலும், அர்ஜுன மலர்களாலும் அர்ச்சித்து வழிபட்டாள். அதனால் சிவனுக்கு மல்லிகார்ஜுனர் என்ற பெயர் வந்தது. பிரதோஷ காலத்தில் நந்தி பகவானை அவர் பிறந்த இத்தலத்தில் வழிபட்டால் அவர் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கோவில் மலைமேல் கிழக்கு நோக்கி நான்குபுறமும் கோபுரங்கள் சூழ அமைந்துள்ளது. பிரதான நுழைவாயில் கிழக்குக் கோபுரத்தில் உள்ளது. கல்லினால் ஆன நந்தி முன்புற மண்டபத்தில் அமைந்துள்ளது. நுழைவாயிலில் ஸ்ரீ சித்திவிநாயகர் அருள் செய்கிறார். பாண்டவர்கள் ஆறு கோவில்கள் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. சலவைக் கல்லினால் இழைக்கப்பட்ட முருகன் கோவில், ராஜராஜேஸ்வரி, அன்னபூரணி, ஸ்ரீசஹஸ்ர லிங்கேஸ்வரர், பஞ்சநதீஸ்வரர் ஆகியவை சக்திவாய்ந்த முக்கியக் கோயில்களாகும். தெற்குக்கோபுரம் எனப்படும் ரங்க மண்டபம், கல்யாண மண்டபம் ஆகியவை கிழக்கு நுழைவாயிலில் உள்ளன. சிவன் சுயம்புமூர்த்தி. நந்தி வாகனத்தில் சிவன் மலைமேல் அமர்ந்து அருள்செய்ய, சிவன் சன்னிதி கீழ்ப்புறமும், அன்னை பிரமராம்பாள் சன்னதி 30 படிகளுக்கு மேலும் அமைந்துள்ளது. அன்னை நின்றநிலையிலுள்ள அலங்காரம், உட்கார்ந்திருப்பது போல் தோற்றம் தருகிறது.

கோவிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவம், மாசி மாதம் 11ம் நாள் கொண்டாடப்படுகிறது. சுவாமிக்கு மஹா ருத்ராபிஷேகம், கல்யாண உத்சவம், ரதோற்சவம் யாவும் முக்கியமான நிகழ்ச்சிகள். சுவாமி அம்பாள் சேஷ வாகனம், மயில் வாகனம், நந்தி வாகனம், அஸ்வ வாகனத்தில் எழுந்தருளுவது யாவும் கண்கொள்ளாக் காட்சி. சிவராத்திரி அன்று நள்ளிரவு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு யுகாதி பண்டிகை ஐந்து நாள் நடத்தப்படுகிறது.

உற்சவ காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் பிற மாநிலங்களில் இருந்து இங்கு வந்து தரிசித்துச் செல்கின்றனர். அன்னை பிரமராம்பா தேவிக்கு கும்போத்சவம், நவாவரண பூஜை, பௌர்ணமியில் லட்சார்ச்சனை, சங்கராந்தி, ஆருத்ரா தரிசனம், சங்கராந்தி விழா உற்சவம் கார்த்திகை, சிராவண உற்சவம் யாவும் சிறப்புற இங்கு நடைபெறுகிறது.

பக்தர்கள், தங்கள் கோரிக்கை நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு கல்யாண உத்சவம் செய்கின்றனர். திங்கள், வெள்ளி ஆகிய நாட்களில் பக்தர்கள் பெரும் கூட்டமாக வந்து வணங்குகின்றனர். அற்புதமான சிவத்தலம் இது.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com