சர்க்கரைவள்ளி போண்டா
தேவையான பொருட்கள்
வெள்ளை சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி - 1" அளவில் சிறு துண்டு
பச்சைமிளகாய் - 5
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
கொத்துமல்லி - தேவைக்கேற்ப
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 10
கடலை எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கடலை மாவு - 3 டம்ளர்
அரிசி மாவு - 1 டம்ளர்

செய்முறை
சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்துத் தோல் உரித்துக் கையால் மசித்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி சேர்த்து லேசாக வதக்கவும். முந்திரிப்பருப்பைப் பெரிதாக உடைத்துச் சேர்க்கவும். அத்துடன் உருளைக்கிழங்கையும், தேவையான உப்பையும் சேர்த்துக் கலந்துகொண்டு கறிவேப்பிலை, கொத்துமல்லி போட்டுக் கலந்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் நீர் ஊற்றி பஜ்ஜி மாவுப் பதத்திற்குக் கரைக்கவும். எண்ணெய் 2 தேக்கரண்டி கலவையில் ஊற்றிக் கலக்கவும். அடுப்பில் வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் உருண்டைகளை மாவில் முக்கி எண்ணெயில் போட்டு நல்ல சிவப்பாக மாறும்வரை பொரித்து எடுத்து தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

சுவையான மாலைநேரச் சிற்றுண்டி தயார்.

பார்வதி கல்யாணராமன்,
கேரி, வட கரோலினா

© TamilOnline.com