சர்க்கரைவள்ளி போளி
தேவையான பொருட்கள்
சிவப்பு சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1/2 கிலோ
மண்டை வெல்லம் - 200 கிராம்
தேங்காய் - 1/2 மூடி
ஏலக்காய் - 5
மைதா அல்லது கோதுமை மாவு - 1/2 கிலோ
நெய் - 100 கிராம்
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை
முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோலுரித்துக் கையால் மசிக்கவும். வெல்லத்தைத் தட்டிக் தண்ணீர் கொஞ்சமாக வைத்து, கொதித்தபின் மண் நீக்கிப் பாகு காய்ச்சவும். பாகு கொதித்ததும் தேங்காயை நைசாகத் துருவிச் சேர்க்கவும். ஏலக்காய்ப் பொடி சேர்த்து சர்க்கரைவள்ளிக் கிழங்கு மசித்ததையும் சேர்த்துக் கிளறவும். சிறிது நெய்விட்டுக் கையில் ஒட்டாத பதம்வரை கிளறி, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

மைதா மாவை சப்பாத்திப் பதத்துக்குப் பிசைந்து மீண்டும் நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து அரை மணி நேரமாவது (குறைந்த பட்சம்) ஊறவைக்கவும். பிறகு மாவை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்துக் கையளவு தேய்க்கவும். அதனுள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு பூரண உருண்டையை வைத்து மூடவும். மீண்டும் அதைச் சப்பாத்தி போலப் பெரிதாக இடவும்.

தோசைக்கல்லைக் காய வைத்து ஒவ்வொரு போளியாகப் போட்டு இருபுறமும் நெய்விட்டுச் சிவக்க எடுக்கவும். மூடிவைத்துச் செய்தால் மென்மையாக இருக்கும்.

சுவையான, சூடான ஆரோக்கியம் தரும் போளிகளை அழகாக எடுத்து வைத்துப் பரிமாறவும்.

பார்வதி கல்யாணராமன்,
கேரி, வட கரோலினா

© TamilOnline.com