இஷான் ரவிச்சந்தர்
ஜனவரி 4ம் தேதி, ஃப்ளோரிடாவில் நடந்த அமெரிக்க தேசிய குளிர்கால டென்னிஸ் போட்டிகளில், 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சேம்பியன்ஷிப் வென்றார் இஷான் ரவிச்சந்தர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது (நியூ ஜெர்சி, மான்ட்கோமரி) இஷான் இறுதிச்சுற்றில், கலிஃபோர்னியாவின் சாக்கரி லிம் என்பவரை 7-6 (2), 6-3 என்ற செட் கணக்கில் வென்று தங்கப்பந்தைக் கைப்பற்றினார். இதற்கு முன்னர் இஷான் டென்னிஸ் போட்டிகள் பலவற்றில் வெற்றி பெற்றிருந்தாலும் தங்கப்பந்து போட்டியில் வென்றது பெரும் சாதனையாகும்.

அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களான ரவிச்சந்தர் மற்றும் ப்ரீத்தியின் மகன்தான் இஷான். இவருக்கு ஆன்யா என்ற தங்கையும் உள்ளார். அவரும் டென்னிசில் பயிற்சிபெற்று பள்ளி அளவில் வெற்றிகளைக் குவித்து வருகிறார்.

சிறு வயதிலிருந்தே டென்னிஸ் ஆர்வம் கொண்ட இஷானுக்கு, ரோஜர் ஃபெடரர், நடால் ஆகியோரை மிகவும் பிடிக்கும். முன்னர் இஷான் நாசா, நியூஜெர்சி உள்படப் பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். லிம்முடன் ஆடிய இறுதிப் போட்டியில் ஆட்டத்திறனை இருவரும் சமமாக வெளியிட்டாலும், இஷானின் மன உறுதியும், ஆவேசமான விளையாட்டு உத்திகளும் வெற்றியைச் சாத்தியமாக்கின.

இஷான் அடித்து ஆடும் அணுகுமுறை முன்னணி வீரரான ஜோகோவிச்சின் யுக்திகளை நினைவூட்டுவதாக 'டென்னிஸ் ரெக்ரூட்டிங் நெட்வொர்க்' என்ற பத்திரிகை கூறுகிறது. இறுதிப் போட்டியில் சில நெருக்கடியான தருணங்களை இஷான் கையாண்ட விதம் வெற்றியை உறுதிப்படுத்தியது. 5' 8" உயரமுள்ள இஷான், "வரிசையாக 7 போட்டிகளை இந்த வாரம் சந்தித்துள்ளேன். உழைப்பில் கிடைத்த வெற்றிக் களிப்பில் இருக்கிறேன்" என்கிறார்.

தற்போது கலிஃபோர்னியாவின் சாக்ரமென்டோவில் நண்பர் வீட்டில் தங்கி டென்னிஸ் பயிற்சி பெற்று வருவதுடன் தனது 11ம் வகுப்பையும் தொடர்ந்து வருகிறார். தந்தை ரவிச்சந்தர் "இத்தகைய கடும் விடாமுயற்சியும், கடின உழைப்பும் கொண்ட பயிற்சி பெறுபவரைப் பார்த்ததில்லை" என்று இஷானின் பயிற்சியாளர்கள் சொல்வதாகப் பெருமையோடு கூறுகிறார்.

இஷான் ரவிச்சந்தர் டென்னிசில் மேன்மேலும் பல சாதனைகள் செய்து, அமெரிக்காவுக்குப் பெருமைச் சேர்க்கத் தென்றல் வாழ்த்துகிறது.

வசுமதி சுந்தரம்

© TamilOnline.com