ராஜ் கௌதமன்
"ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதாம் ஆண்டு, ஆகஸ்டு இருபத்தைந்தாம் நாள் வெள்ளிக்கிழமை இரவில், இராமநாதபுரம் ஜில்லா, திருவில்லிப்புத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு பிற்காவைச் சேர்ந்த புதுப்பட்டியில் ஆர்.சி. தெரு என்றழைக்கப்பட்ட. ரோமன் கத்தோலிக்க வடக்குத் தெருவில் சிலுவைராஜ், அவனுடைய ராக்கம்மா பாட்டியின் குடிசையில் பிறந்தான். பிறந்தபோது எல்லாக் குழந்தைகளையும் போலவே 'குவாக்குவா' என்றுதான் அழுதான். பாட்டிதான் பிரசவம் பார்த்தாள். ஆர்.சி. தெருவுக்கே அவள்தான் பிரசவம் பார்த்து வந்தாள். சிலுவை வாழ்ந்த காலமெல்லாம் ஒல்லிப்பயலாக இருந்தாலும், பிறக்கும்போது ரொம்ப குண்டாக இருந்தானாம். அதனால் அவனைப் பெறுவதற்கு அவன் அம்மை ரொம்பக் கஷ்டப்பட்டாளாம். சிலுவை தலைப்பிள்ளையாக ஜனித்த நாள் முதலாக அவள் மாட்டுக்கறியும், கேப்பக் கூழும் அதிகமாகச் சாப்பிட்டாளாம். சிலுவை ஆறுமாசக் குழந்தையாகக் குப்புறப் படுத்துத் தலையை நல்லபாம்பு மாதிரி தூக்கிக் கொண்டிருப்பது போல சீலத்தூர் ரத்னா ஸ்டுடியோவில் எடுத்த போட்டோவைப் பார்க்கும் போதெல்லாம் அதுதான் தானா என்று சிலுவைக்கு ஆச்சரியமாக இருக்கும்...." - தன் முதல் நாவலை இப்படித் தொடங்கி, தமிழின் தன்புனைவு வரலாற்று இலக்கியத்தில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியவர் ராஜ் கௌதமன்.

இவர், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வத்திராயிருப்பு புதுப்பட்டியில் சூசைராஜ்-செபஸ்தியம்மாள் தம்பதியினருக்கு ஆகஸ்ட் 25, 1950 அன்று மகனாகப் பிறந்தார். இயற்பெயர் புஷ்பராஜ். தந்தை இராணுவத்தில் பணியாற்றினார். அதனால் தாயின் கண்காணிப்பில் வளர்ந்தார். ஆரம்பக் கல்வியை உள்ளூர் ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் பயின்றார். மேல்நிலைக் கல்வி மதுரையில். புதுமுக வகுப்பு (PUC), இளங்கலை (விலங்கியல்) மற்றும் முதுகலைக் (தமிழ் இலக்கியம்) கல்வியை பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியில் பயின்றார். அக்கல்லூரிக் காலத்தில்தான் இவருக்கு நூல்கள் அறிமுகமாகின. கிடைத்த ஓய்வுநேரத்தை வாசிப்பதில் செலவிட்டார். ஆசிரியரின் தூண்டுதலால் கதை ஒன்றை எழுதினார். அது கல்லூரி மலரில் வெளியானது. அதுவே அச்சில் வந்த இவரது முதல் படைப்பு என்றாலும் தொடர்ந்து எழுதவில்லை. தேடித்தேடி பல்வேறு நூல்களை வாசித்து வந்தார். கல்லூரிப் பாடம் மூலம் அறிமுகமான இலக்கியப் படைப்புகள் இவரை மிகவும் கவர்ந்தன. மாதவையா இவரது மனம் கவர்ந்த எழுத்தாளரானார். மாதவையாவின் படைப்புகளின் மீது இவர் கொண்ட ஈடுபாடே பிற்காலத்தில் மாதவையாவின் படைப்புகளைப் பற்றி, ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற வழிவகுத்தது. வாசித்த மார்க்சிய சித்தாந்த நூல்கள் இவருள் பல தாக்கங்களை ஏற்படுத்தின. பார்வை விரிந்தது. தொடர்ந்து வாசித்தும், சிந்தித்தும் மாற்றுச் சிந்தனையாளராகத் தன்னை வளர்த்துக்கொண்டார்.

படிப்பை முடித்துச் சிலகாலம் வேலை இல்லாமல் இருந்த காலகட்டத்தில் வாழ்வில் இவர் எதிர்கொண்ட அவமானங்களும், புறக்கணிப்புகளும், சமூக அழுத்தங்களும் இவருள் பல கேள்விகளை எழுப்பின. திறமை இருந்தும், தகுதி இருந்தும் வேலை கிடைக்காததற்கு சாதியக் கட்டமைப்பே முக்கிய காரணம் என்பதாக உணர்ந்தார். மதுரை ஆதினத்தை அணுகி இந்துவாக மதம் மாறினார். புஷ்பராஜ், கௌதமன் ஆனார். காரைக்கால் அரசுக் கல்லூரியில் விரிவுரையாளர் வேலை கிடைத்தது. பேராசிரியர் க. பரிமளத்துடன் திருமணம் நிகழ்ந்தது. இவர் வாசித்த அம்பேத்காரிய நூல்கள் இவருள் பல திறப்புகளை ஏற்படுத்தின. தலித்திய சிந்தனைகள் மற்றும் தலித் இலக்கியம் மீது இவரது கவனம் சென்றது. 'ராஜ் கௌதமன்' என்ற பெயரில் அது சார்ந்த கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். கூடவே சமூகம் சார்ந்த விமர்சனங்களை மையமாக வைத்துப் பல கட்டுரைகளை எழுதினார். அவை 'பிரக்ஞை', 'நிறப்பிரிகை', 'கொல்லிப்பாவை' 'பரிணாமம்', 'படிகள்', 'அலை', 'காலச்சுவடு' போன்ற இதழ்களில் வெளியாகி வாசக கவனம் பெற்றன. நண்பர்களுடன் இணைந்து 'இலக்கிய வெளிவட்டம்' என்ற பெயரில் சிற்றிதழ் ஒன்றை நடத்தினார். சிற்றிதழ்களில் இவர் எழுதிய திறனாய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 'எண்பதுகளில் தமிழ்க் கலாச்சாரம்' என்ற தலைப்பில் நூலாக வெளியானது. தொடர்ந்து 'தலித் பண்பாடு', 'தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு', 'பொய் + அபத்தம் = உண்மை', 'அறம்-அதிகாரம்' போன்ற நூல்கள் இவரது ஆழமான தலித் இலக்கியச் சிந்தனைப் போக்கை அடையாளம் காட்டின.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப்பட்டம் பெற்ற ராஜ் கௌதமன் 'அ. மாதவையாவின் தமிழ் நாவல்கள்' என்ற தலைப்பில் ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். அந்த ஆய்வின் சுருக்கத்தைப் பின்னர் காவ்யா பதிப்பகம் நூலாக வெளியிட்டது. அ. மாதவையா பற்றி விரிவாக வந்திருக்கும் முதன்மையான தமிழ்ப் படைப்பு அதுவே. மாதவையாவின் மகனான மா. கிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்தும், மாதவையாவுடன் பழகிய பிற நண்பர்களிடமிருந்து தகவல் பெற்றும் அந்நூலை உருவாக்கியிருந்தார் ராஜ் கௌதமன். (இதன் பின்னரே சு. வேங்கடராமன் 'அ. மாதவையா' என்ற தலைப்பில் 'இந்திய இலக்கியச் சிற்பிகள்' வரிசையில் சாகித்ய அகாதமிக்காக ஒரு நூலை எழுதினார்.)

ஓர் ஆய்வாளராக ராஜ் கௌதமன் முன்வைக்கும் கருத்துக்கள் முக்கியமானவை. "தமிழகத்தின் கடவுள் – சமய உருவாக்கம் என்பது வெளியிலிருந்து படையெடுத்துவந்து திணிக்கப்பட்டதல்ல. அதனைப் பண்பாட்டுப் படைப்பு என்று சுருக்கிவிட முடியாது. கலாச்சாரங்களின் கலப்பில் பரிணாமம் அடைந்ததொரு சுய உருவாக்கம் என்றுதான் கூறவேண்டும்" என்று தனது 'பாட்டும், தொகையும், தொல்காப்பியமும், தமிழ்ச் சமூக உருவாக்கமும்' என்ற ஆய்வு நூலில் குறித்துள்ள செய்தி சிந்திக்கத்தகுந்தது. இவரது 'தலித்திய விமர்சனக் கட்டுரைகள்' நூல் முக்கியமானது. 'கலித்தொகைப் பாடல்: ஒரு விளிம்பு நிலை நோக்கு' என்ற நூலும் குறிப்பிடத் தகுந்ததாகும். அயோத்திதாச பண்டிதர் பற்றி இவர் எழுதியிருக்கும் 'க.அயோத்திதாசர் ஆய்வுகள்' நூலும் முக்கியமானது. 'ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்' பலரது பாராட்டுக்களைப் பெற்ற நூலாகும். "ராஜ்கௌதமனின் ஆய்வுகள் நிதானமான ஆய்வுநோக்கும், ஆய்வுப்பொருள்மேல் உண்மையான மதிப்பும் கொண்டவை. அவற்றுடன் முரண்படுபவர்கள்கூட அவற்றைப் பெருமதிப்புடனேயே அணுகமுடியும். ஆகவே என் கணிப்பில் நவீனத்தமிழ் உருவாக்கிய முதன்மையான இலக்கிய ஆய்வாளர் ராஜ் கௌதமன் அவர்களே. அவருடைய தலைமுறையில் அவருடன் எளியமுறையில் ஒப்பிடக்கூட எவருமில்லை என்பதே உண்மை" என்கிறார் ஜெயமோகன்.

ராஜ் கௌதமன் மொழிபெயர்ப்பிலும் தேர்ந்தவர். சார்லஸ் டார்வினின் 'The Origin of species' உள்ளிட்ட பல கோட்பாட்டு நூல்களை தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார். எரிக் ஃப்ராம் எழுதிய The Sane Societyயைத் தமிழில் தந்துள்ளார். Germaine Greer எழுதிய 'The Female Eunuch' நூல் 'பாலற்ற பெண்பால்' என்ற தலைப்பில் இவரால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. வள்ளலாரை வேறொரு கோணத்தில் காட்டும் நூல் இவர் எழுதிய 'கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போக' என்பது. தன் மனம் கவர்ந்த புதுமைப்பித்தன் பற்றி 'புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ்' என்ற தலைப்பில் இவர் எழுதியிருக்கும் நூல் இவரது அரிய அவதானிப்புகளைக் காட்டும் நூலாகும். அதன் பிறகு வெளியானதுதான் தமிழ்ப் படைப்புலகில் இவர் பெயரை நிரந்தரமாக நிலைக்கச் செய்திருக்கும் 'சிலுவைராஜ் சரித்திரம்'.

ராஜ் கௌதமனின் சகோதரியான பாமாவின் 'கருக்கு' புதினத்தை அடுத்து தமிழில் வந்துள்ள இரண்டாவது தலித்திய தன்வரலாற்றுப் புதினம் என்று சிலுவைராஜ் சரித்திரத்தைச் சொல்லலாம். சமகாலத் தலித்தியச் சமூக வரலாற்று நாவல் என்றும் இதனை வகைப்படுத்தலாம். இந்நூல் வெளியானபோது ராஜ் கௌதமனுக்கு வயது 52. தன்வரலாற்றுத்தன்மை கொண்ட புனைவாக எழுதப்பட்டிருக்கும் இந்நூல் எள்ளலும் விமர்சனமும் ஒருங்கே கொண்டது. குழந்தைப்பருவம் துவங்கி வாலிபப் பருவம் வரையிலான சிலுவைராஜின் எண்ணங்களை, ஏக்கங்களை, ஆசைகளை, நிராசைகளை, அவமானங்களை, ஏமாற்றங்களை இயல்பான நடையில் அங்கதத்துடன் சொல்லிச் செல்கிறார் ராஜ் கௌதமன். முதலில் பள்ளி வாழ்க்கை, அங்கு சிலுவைராஜ் எதிர்கொள்ளும் அனுபவங்கள், தொடர்ந்து கல்லூரி வாழ்க்கை அதில் அவனுக்குக் கிடைக்கும் தரிசனங்கள், பின் வேலைதேடி வாழ்க்கைப் பயணம், அதில் அலைந்து திரிந்து நண்பர்களுடன் விவாதித்து அவமானப்பட்டு, புறக்கணிப்புகளுக்கு ஆளாகி அவன் அடையும் புரிதல்கள் என நாவலில் வாழ்க்கையின் கசப்பையும் கூடப் புகாராகச் சொல்லாமல் நகைச்சுவையுடன் பதிவு செய்திருக்கிறார். இதற்கு அவரது புறவயப் பார்வையும் தன்னிலிருந்து தான் விலகித் தன் வாழ்க்கையைப் பார்க்கும் அனுபவமுமே காரணம் என்று சொல்லலாம். பால்யத்தைத் தொலைக்காது, மிச்சமிருக்கும் வாழ்க்கையை அந்தப் பால்யத்துடனேயே அந்த நினைவுகளுடனேயே வாழ நினைக்கும், வாழ்க்கையைக் கடத்தும் இளைஞன் ஒருவனின் வாழ்க்கைப் பயணம் தான் 'சிலுவைராஜ் சரித்திரம்' என்று சொல்லலாம்.

சுயஜாதி விமர்சனம், ஜாதிக் கிறிஸ்தவருக்கும் மற்றக் கிறிஸ்துவருக்கும் இருக்கும் அரசியல்கள், மோதல்கள், பிரிவினைகள், பாதிரிகளின் வேட்கைகள் என நாவல் பல கோணங்களை மிகையேதுமில்லாமல் காட்சிப்படுத்துகிறது. எம்.ஏ. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் வேலை கிடைக்காத சிலுவைராஜ், இறுதியில் எஸ்.சி. சான்றிதழுக்காக இந்துவாக மாறுகிறான். மதுரை ஆதினத்தை அணுகி அவன் இந்துவாக மாறுவதையும் பின் அதைக் கொண்டு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு அரசாங்க கெஜட்டில் அதைப் பதிவு செய்வதையும் எள்ளல் தொனியில் மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ராஜ் கௌதமன்.

"தாசில்தார் தந்த எஸ்.ஸி. சான்றிதழும், அந்த கெஜட் காப்பியும் அவன் வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்களை உண்டாக்கப் போகின்றன என்பது அப்ப சிலுவைக்கித் தெரியாது. எத்தனையோ வருசமாக அரும்பாடுபட்டுப் படிச்சு வாங்கிய பட்டங்களைவிட, அந்தப் பேப்பர்கள்தான் அவனை எங்கெங்கோ கொண்டு போயின" என்று சொல்லிச் சிலுவைராஜின் சரித்திரத்தை (முதல் பாகம்) நிறைவு செய்கிறார் ராஜ் கௌதமன்.

சிலுவைராஜ் சரித்திரத்தின் இரண்டாம் பாகமாக வெளியானது 'காலச்சுமை.' காரைக்காலில் உள்ள கல்லூரியில் பேராசிரியராகப் பொறுப்பேற்கிறான் சிலுவைராஜ். அதன் பிறகு திருமணம். குடும்ப வாழ்க்கை. மகள் பிறப்பு. வாழ்க்கை முன்னேற்றம். அது 'அப்படியே இருக்கும்' தனது உறவுகளிடமும் நண்பர்களிடமும் ஏற்படுத்தும் பொறாமை, கசப்பு என அனைத்தும் இந்நாவலில் இயல்பாகப் பேசப்படுகிறது. புலம்பலோ, சலிப்போ இல்லாமல் மெல்லிய நகைச்சுவையுடன் நகர்வதே இவரது எழுத்தின் பலம். சிலுவைராஜின் சரித்திரத்தின் மூன்றாம் பாகமாக வெளியானது 'லண்டனில் சிலுவைராஜ்'. மேலைநாட்டுப் பண்பாட்டுச் சூழலை ஓர் எளிய இந்தியப் பயணியின் பார்வையில் விமர்சிக்கும் நூல் இது. வயதானாலும் தன் பால்யத்தைத் தொலைக்காத சிலுவைராஜ், லண்டனுக்குப் பயணப்படுகிறான். அங்கு அவனுக்குக் கிடைக்கும் அனுபவங்கள், ஏற்படும் பிரமிப்புகள், ஆச்சரியங்கள் நாவலில் விரிகின்றன.

காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றிய ராஜ் கௌதமன் 2011ல் ஓய்வுபெற்றார். தற்போது மனைவி க. பரிமளத்துடன் திருநெல்வேலியில் வசித்து வருகிறார். இவரது மனைவியும் ஓர் எழுத்தாளர், பேராசிரியர். 'தி. ஜானகிராமன் நாவல்களில் பாலியல்', 'இந்துப் பெண் - பெண்ணியப் பார்வை' போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். மகள் டாக்டர் நிவேதா லண்டனில் மருத்துவர். சிறுகதைகளை அரிதாகவே எழுதியிருக்கும் ராஜ் கௌதமன், ஆய்வுக் கட்டுரை, விமர்சனக் கட்டுரை, நாவல், திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். ராஜ் கௌதமனின் இலக்கியப் பங்களிப்புக்காக 2016ம் ஆண்டிற்கான 'விளக்கு விருது' இவருக்கு வழங்கப்பட்டது. ஜெயமோகனின் தலைமையில் செயல்படும் 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்' ராஜ் கௌதமனுக்கு 2018ம் ஆண்டுக்கான 'விஷ்ணுபுரம் விருது' வழங்கிச் சிறப்பித்தது. எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய ஆய்வாளர், கல்வியாளர், விமர்சகர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழும் ராஜ் கௌதமன், தமிழ் இலக்கியப் படைப்பாளுமைகளில் முக்கியக் கவனம் கொள்ளத்தக்கவர்

அரவிந்த்

© TamilOnline.com