தென்றல் பேசுகிறது...
முகநூல் (Facebook) குடும்பத்தில் முகநூல் தவிர வாட்ஸாப், மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் எல்லாம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த நான்கில் ஒன்றையேனும் அன்றாடம் பயன்படுத்துகிறவர்களின் மொத்த எண்ணிக்கை 2 பில்லியனைத் தாண்டுகிறதாம். 2018ம் ஆண்டில் தனியார் தகவல் பயன்பாடு உட்படப் பல புகார்கள் செய்யப்பட்டு முகநூல்மீது அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால், சில நாட்களுக்கு முன்னர் முகநூல் குழுமத்தின் லாபம் அறிவிக்கப்பட்டபோது அது சந்தையின் எதிர்பார்ப்பை விஞ்சியதாக இருந்தது! சென்ற ஆண்டைவிட 50 சதவிகிதம் அதிகரித்து லாபம் $16.64 பில்லியன் ஆகியிருக்கிறது! ஆக, பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் முகநூலை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்று ஆகிறது. எப்படி நமது தனிப்பட்ட தகவலை உரக்கக் கூவாமல் இருப்பது, அபாயமானவர்களின் வலையில் விழாமல் இருப்பது, வேண்டியவர்களோடு மட்டும் தொடர்புக்குப் பயன்படுத்துவது, வணிக விளம்பரம் செய்வது என்பவற்றைச் சரியாகத் தீர்மானித்து, நமது தேவைக்கேற்ப இந்தச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள முடியும். சுருங்கச் சொன்னால் முகநூல், வாட்ஸாப் போன்றவற்றை நாம் எப்படி நமது லாபத்துக்குப் பயன்படுத்துவது என்பதுதான் சவால். ஊன்றிக் கவனித்துச் செய்தால் இது சாத்தியம்.

*****


உறைந்து நின்றிருந்த அரசு எந்திரம் இயங்கத் தொடங்கிவிட்டது. அமெரிக்க வரலாற்றிலேயே மிக நீண்ட Government shut down தற்காலிகமாகவேனும் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. அரசு வேலைகள் முடங்கியதால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட துயரங்கள் ஒருபுறம் என்றால் சராசரி அரசு ஊழியர்கள் திருவோடு ஏந்தித் தெருவுக்கு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டதையும் பரிவோடு பார்க்கிறோம். அதிபரின் நாகரீகக் குறைவான பேச்சுக்கள் அவரோடு உயர்மட்டத்தில் உள்ளவர்கள்கூடப் பணி செய்யமுடியாத நிலைமையை ஏற்படுத்தி உள்ளது. தவறான குடிவரவு அணுகுமுறையால், வேலைகளுக்குத் தகுதியான நபர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. உடல்திறன், அறிவுத்திறன், கல்வித்திறன் இவற்றில் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் இங்கே வந்து தேனீக்கள் போலக் குழுமியதால்தான் அமெரிக்கா புத்தாக்கத்தின் பொன்னாடாக இருந்துவருகிறது. இந்த அந்தஸ்தை இழக்கும் நாள், அதிபரின் புண்ணியத்தில், அருகில் வந்துகொண்டிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

*****


"நீ தீர்வின் ஒரு பகுதியாக இல்லையென்றால், நீயேதான் பிரச்சனையின் ஒரு பகுதியாக இருக்கிறாய்" என்பார்கள். மேலே கூறிய அரசியல் ரீதியான பிரச்சனைகளை, சரியான நபரை அதிபராகத் தேர்ந்தெடுப்பதன் மூலம், குடிகளாகிய நாம் தீர்க்கமுடியும். தாழக் கிடப்போரின் நலனையே தமது பொதுவாழ்வின் லட்சியமாகக் கொண்ட செனட்டர் கமலா ஹாரிஸ் அவர்கள் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்திருப்பது நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. இந்திய-ஆப்பிரிக்க-அமெரிக்கப் பாரம்பரியங்களின் செழுமையான கலவையாக அவரை நாம் பார்க்கிறோம். இந்தப் பாரம்பரியத்தில் வந்த முதல் பெண் அதிபர் ஒருவரைப் பீடத்தில் அமர்த்திப் பார்க்கும் அரிய வாய்ப்பும் நமது கதவைத் தட்டுகிறது. எப்போதையும் விட அதிக அவசரத்துடன், ஆர்வத்துடன், வேகத்துடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் நாம் "தீர்வின் ஒரு பகுதியாக" இருக்கமுடியும்.

*****


வெற்றிகரமான பல குடும்பப் படங்களைக் கொடுத்து, நடிகர் மோகனை 'மைக்' மோகன் என அறியப்படச் செய்த இயக்குனர் கே. ரங்கராஜ் அவர்களின் நேர்காணல் ஒரு மாறுதலான அனுபவத்தைத் தருவது. டென்னிஸ் மிகச் சவாலான போட்டி விளையாட்டு. பெருந்திறமை கொண்டோர் ஆயிரக்கணக்கில் மோதிக்கொள்ளும் விளையாட்டு. அமெரிக்கத் தேசீய குளிர்கால டென்னிஸ் போட்டிகளில் 18 வயதுக்குட்பட்ட ஆடவர் ஒற்றையர் பிரிவில் சேம்பியன்ஷிப் வென்ற தமிழ் இளைஞர் இஷான் ரவிச்சந்தர் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம். அவரைப்பற்றி இந்த இதழில் வாசித்து மகிழுங்கள். பலரும் விரும்பிய ஷீரடி சாயி சரித்திரம் இந்த இதழில் தொடர்கிறது. வழக்கமான அம்சங்களும் சிறப்பிக்கின்றன.

வாசகர்களுக்கு வேலன்டைன் நாள் வாழ்த்துக்கள்!

தென்றல் குழு

பிப்ரவரி 2019

© TamilOnline.com