அப்பாவின் பேச்சு
யாரிடமும்
அப்பா இப்போது பேசுவதில்லை.

எழுந்தவுடன்
நாட்காட்டியைப் புதுப்பிக்கும் ஆர்வம்
குறைந்து போய்விட்டது அவரிடம்.

கிளர்த்தும் இசையோ
சமையலறை மணமோ
அவரின் மனச்சுவரை எட்டுவதில்லை.

வாசல் வராந்தாவில்
பேசிக் கொண்டிருக்கும்
மாலைநேரப் பறவைகள்
அவரை ஈர்க்கின்றன.

எதிர்பாராது வந்து நனைக்கும்
மழை இரவுகளில்
அவரது புன்னகை
உற்சாகம் ஊட்டுகிறது.

செய்தித் தாட்களை
வாசிப்பதைக் காட்டிலும்
விலைக்குப் போடுவதில்
ஆர்வம் காட்டுகிறார்.

அவர் காலத்தின் கதாநாயகிகள்
முதிர்ந்து மடியும் நாட்கள்
மிகுந்த துயர் நிறைந்தவை ஆகின்றன.

முழு நிலவு மணக்கும்
அகால இரவுகளை
மலர்ச்சியுடன்
சாளர வழியே பருகுவதை
நேற்றிரவு கண்டேன்.

இந்தக் கவிதையின்
முதல் வாக்கியம் எத்தனை பிழையானது என்பதை
இந்த வாக்கிய இறுதியில்
உணர்கிறேன்.

சுந்தர்ஜி ப்ரகாஷ்

© TamilOnline.com