இல்லாத வீடு
தன்
நண்பனை
அறிமுகப்படுத்தினான்
என் நண்பன்.
ஒரு காலத்தில்
ஒரே ஊரில் வசித்திருந்ததில்
ஒருமித்தோம் இருவரும்.
'அந்த மாவு மில்லுக்கு
ரெண்டு வீடு தள்ளி
எங்கள் வீடு' என்றார்.
'உங்கள் வீட்டுக்கு
அடுத்த வீட்டில்
ஒரு துர்மரணம் நிகழ்ந்ததில்லையா?'
என்ற என் ஊகத்தை
மறுத்தார் அவர்.
'நீங்கள் வைத்திருந்த
பவழமல்லி
தெருவெல்லாம் மணக்குமே?'
என்ற அவர் நினைவுப் பரிமாறல்
என்னைக் குழப்பியது.
சிறுகச் சிறுக
விலகி விலகி
அவர் வீட்டை நானும்
என் வீட்டை அவரும்
தெருவெல்லாம் தேடிக் களைத்தோம்.
இருவரும் ஒரே ஊரில்
சேர்ந்து வசித்திருக்காவிடில்
ஒருவேளை இன்னமும்
நெருங்கியிருப்போம் என்று
ஒரு நொடி எனக்குத் தோன்றியது
சிரித்துக் கொண்டே
விடைபெற்றபோது.

சுந்தர்ஜி ப்ரகாஷ்

© TamilOnline.com