ஹரிகதை கமலா மூர்த்தி
மூத்த ஹரிகதைக் கலைஞரான கமலா மூர்த்தி (86) அமரரானார். இவர், 1932ல் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள லட்சுமிக்குடி கிராமத்தில், ராமச்சந்திர ஐயர், சீதாலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். ஆன்மீகப் பாரம்பரியமுள்ள குடும்பம். சிறுவயதிலேயே குரல்வளமும் இசைஞானமும் இருந்தன. சிதம்பரத்தில் புகழ்பெற்றிருந்த ராஜா பாகவதரிடம் முதலில் ஹரிகதை பயின்றார். ஒன்பதாம் வயதில் 'வத்சலா கல்யாணம்' என்ற தலைப்பில் இவரது அரங்கேற்றம் நிகழ்ந்தது. குருவின் மறைவுக்குப் பின் குடும்பம் திருவையாறில் குடியேறியது. அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய திருவையாறு அண்ணாசாமி பாகதவரிடம் சீடராகச் சேர்ந்து ஹரிகதா நுணுக்கங்களைப் பயின்றார். அப்போதே ஹரிகதையும் நிகழ்த்தி வந்தார். அது ஆண்களே ஹரிகதையில் கோலோச்சி வந்த காலம். அக்காலத்தில் பெண்களாக நுழைந்து சாதனை புரிந்தவர் சரஸ்வதி பாய் மற்றும் மணி பாய். அவர்கள் வரிசையில் கமலாவும் இணைந்தார். இரண்டு குருநாதர்களிடம் பயின்ற அனுபவத்தினால் மிகச்சிறப்பாகக் கமலாவால் ஹரிகதையை நடத்த முடிந்தது. 1948ல் கிருஷ்ணமூர்த்தியுடன் திருமணம் நிகழ்ந்தது. மனைவியின் திறமையை அறிந்த அவர் உறுதுணையாக இருந்தார். அதனால் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று கமலா மூர்த்தியால் ஹரிகதை செய்யமுடிந்தது. வானொலி மற்றும் தொலைக்காட்சியிலும் இவரது நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று ஹரிகதை நிகழ்த்திய பெருமை இவருக்கு உண்டு. 80 வயதைக் கடந்த பின்னரும் கூட ஹரிகதை சொல்வதை நிறுத்தாமல், ஆத்மார்த்தமாக அதனைச் செய்துவந்தார். நாடி வந்த இளையோருக்கு ஹரிகதையின் நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்.

தனது பேத்தி சுசித்ரா பாலசுப்பிரமணியன் (பார்க்க) சிறந்த ஹரிகதா நிபுணராகப் பரிணமிக்க உதவினார். கலைமாமணி விருது, மியூசிக் அகாதமி வழங்கிய டி.டி.கே. விருது, சங்கீத நாடக அகாதமி விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர் இவர். தஞ்சாவூரில் வசித்து வந்தார்.

© TamilOnline.com