ஸ்ரீ ஷீரடி சாயிபாபா (பகுதி - 1)
இறைவன் பெருங்கருணையினால் மக்களிடையே அவதரிக்கிறான். இவர்களில் எங்கு, எப்போது தோன்றினார் என்றறிய இயலாதவராய், சுயம்பு மூர்த்தியாக அவதரித்தவர் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா. இந்தியா முழுவதிலும் பரவலாக அறியப்பட்ட முதல் அவதார புருடர் இவர். பல்வேறு லீலைகள் செய்தவர். பலரின் வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்த்தவர். இன்றும் ஷீரடித் தலத்தினை நாடி வருவோரின் பிரச்சனைகளைச் சூட்சுமமாக தீர்த்துக் கொண்டிருக்கும் அம்மகானின் வரலாறு எல்லாரும் அறிய வேண்டிய ஒன்று.

தோற்றம்
பாபா எங்கு, எப்போது, எந்த ஆண்டு பிறந்தார் என்பதைச் சரியாக அறிய இயலவில்லை. அந்தணர் குலத்தில் பிறந்து, இஸ்லாமியப் பக்கீர் ஒருவரால் வளர்க்கப்பட்டவர் என்பதாக ஒரு வரலாறு தெரிவிக்கிறது. அவருக்குப் பின் வெங்குசா, பாபாவை வளர்த்தார். பாபா தன் பிறப்பு பற்றி முழுமையாக யாரிடமும் தெரிவிக்கவில்லை. என்றாலும் குருநாதர் பற்றி அவ்வப்போது சொல்லியிருக்கிறார். அவர் ஷீர்டியில் முதன்முதலில் பதினாறு வயது இளைஞனாகக் காட்சி கொடுத்த இடம் ஒரு வேப்பமரத்தடி. அதுதான் குருஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மரத்தடியில் அவர் பல காலம் அமர்ந்திருந்தார். அந்த மரத்திற்கு அருகில், பூமிக்கு அடியில் அமைந்துள்ள ஓர் அறையில் தன் குரு வாழ்ந்து வந்ததாக பாபா கூறியிருக்கிறார். அங்கு எப்போதும் அணையா விளக்கு எரியவேண்டும் என்பது அவரது கட்டளை. இந்து - இஸ்லாம் என இரு மதத்திற்கும் பாலமாகத் தோன்றிய இம்மகான் வசித்தது ஒரு மசூதியில். கொண்டாடியது ஸ்ரீராமநவமி உட்பட பல இந்துப் பண்டிகைகளை. 'சந்தனக் கூடு' என்று தமிழகப் பகுதிகளில் அழைக்கப்படும் 'உரூஸ்' ஊர்வலத்தையும் அவர் நடத்திவந்தார். அவர் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்ததோ 'அல்லா மாலிக்' என்பதைத்தான். இந்துக்களும் அவரது பக்தர்களாக இருந்தார்கள். இஸ்லாமியர்களும் அவர் பக்தர்களாக இருந்தார்கள். அவர் நடத்திய விழாக்களில் கலந்து கொண்டார்கள். எல்லோருக்கும் அவர் 'பாபா'. பாபா என்ற சொல்லுக்குத் தந்தை என்பது பொருள்.

பெயருக்கு ஏற்றாற்போல் அவர் தந்தையாக விளங்கிப் பலரது இன்னல்களைத் தீர்த்திருக்கிறார். பலரது வாழ்க்கையை மாற்றியிருக்கிறார். அவர் தன் வாழ்நாளில் செய்த அற்புதங்களோ எண்ணற்றவை.

பாபாவின் அற்புதங்கள்
ஒவ்வொரு நாள் மாலையிலும் மசூதியில் தீபம் ஏற்றுவது பாபாவின் வழக்கம். அதற்காக தினமும் கடைத்தெருவிற்குச் சென்று வியாபாரிகளிடம் எண்ணெய் வாங்கிவந்து தீபம் ஏற்றுவார். இது தொடர்ந்து பல நாட்களாக நடந்துவந்தது. பாபா காசு, பணம் கையில் வைத்திருக்க மாட்டார் என்பதால் அவரால் எண்ணெய் வியாபாரிகளுக்குச் சரியாகப் பணம் தர முடியாது. இது இப்படியே தொடர்ந்து வந்தது.

ஒருநாள் கடைக்காரர்கள் அனைவரும் தங்களுக்குள் ஒன்றுகூடினர். "இனி யாரும் பாபாவுக்கு எண்ணெய் கொடுப்பதில்லை" என்று முடிவு செய்தனர். பாபாவுக்கு அளிக்கப்படும் எண்ணெய்க்குக் காசு வராது என்பதால்தான் அவர்கள் அந்த முடிவுக்கு வந்தனர்.

மாலை வழக்கம் போல் பாபா அந்த எண்ணெய் வியாபாரிகளிடம் சென்று எண்ணெய் கேட்டார். ஆனால், அவர்கள் யாரும் எண்ணெய் தர முன்வரவில்லை. அதனால் பாபா மசூதியை நோக்கித் திரும்பிச் சென்றார். வியாபாரிகளில் சிலர் பாபா என்னதான் செய்கின்றார் பார்ப்போம் என்றெண்ணி அவரைப் பின்தொடர்ந்தனர்.

பாபா மசூதி உள்ளே சென்றார். எண்ணெய் டப்பாவைக் கையில் எடுத்தார். அதில் சிறிது நீர் ஊற்றினார். அதைத் தன் வாயில் ஊற்றினார். பின்னர் அந்த நீரை மறுபடியும் எண்ணெய் டப்பாவில் நிரப்பினார். அதைத் தீபங்களில் ஊற்றினார். என்ன ஆச்சரியம்! தீபங்கள் சுடர்விட்டு எரிய ஆரம்பித்தன.

அவரை அதுவரை சாதாரண பக்கீர் என்று கருதிவந்த வியாபாரிகள் பாபாவின் மகத்துவத்தை உணர்ந்தனர். அவர் பாதம் பணிந்து வணங்கினர். பாபாவும் அவர்களை மன்னித்து, "என்றும், எவரிடத்தும் பொய் கூறக்கூடாது; எப்போதும் பொருளாசை இருக்கவே கூடாது" என்று கூறி ஆசிரிவதித்தார்.

*****


ஒருமுறை பாபாவைத் தரிசிப்பதற்காக, அதிகாலையில் மசூதிக்குச் சென்றார் ஒருவர். அங்கு அவர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிட வைத்தது. அப்படியே அதிர்ந்து போய் நின்றுவிட்டார். காரணம், மசூதியின் நடுவில் பாபாவின் தலை ஒருபுறமும், கை, கால், உடல் ஆகியவை வெறுவேறு இடங்களிலும் சிதறிக் கிடந்தன. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. இது ஏதேனும் கொள்ளையர்களின் வேலையாக இருக்குமோ என்று எண்ணினார். உடனே அந்தக் கிராமத்தின் தலைவருக்குத் தகவலைச் சொல்ல ஓடினார். பாபாவின் நிலையை எண்ணி அவரது கண்களில் கண்ணீர் பெருகியது. உடல் நடுங்கியது. ஆனாலும் சளைக்காமல் ஓடினார்.

வேகமாக ஓடிக் கொண்டிருந்தவருக்கு திடீரென ஒர் எண்ணம் தோன்றியது. பாபா கடவுளின் அவதாரம் அல்லவா? அவரை யார் என்ன செய்ய முடியும்? என்று நினைத்தார். உடனே அச்சம் விலகியது. மனம் தெளிவடைந்தது. தைரியம் வந்தது. சமநிலையை அடைந்தார். மீண்டும் மசூதியை நோக்கிச் சென்றார். அவர் சென்று பார்த்தால், பாபா வழக்கம்போலத் தியானம் செய்து கொண்டிருந்தார். வெகுநேரம் கழித்துக் கண் விழித்தவர் பக்தரைப் பார்த்ததும் புன்னகைத்தார். அப்போதுதான் அந்த பக்தருக்கு பாபா செய்த அற்புதம் புரிந்தது. இது ஒருவகை யோகம் என்பதை உணர்ந்தவர், பாபாவின் கால்களில் வீழ்ந்து பணிந்து வணங்கினார்.

காண்பதற்கரிய காட்சி பெற்ற அந்த பக்தருக்கு ஆசிகூறி அருள் புரிந்தார் பாபா.

*****


பாபா செய்த மற்றோர் அற்புதம் மிகவும் அரிதானது...

(அடுத்த இதழில் நிறைவுறும்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com