தேவூர் ஸ்ரீதேவபுரீஸ்வரர் ஆலயம்
தேவூர் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. நாகப்பட்டினத்திலிருந்து கீவளூர் எனப்படும் கீழ்வேளூர் கச்சனம் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் உள்ளது.

இத்தல இறைவன் நாமம் தேவபுரீஸ்வரர். கதலிவனேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இறைவி நாமம்: தேன்மொழி அம்பிகை. இத்தலம் குரு ஸ்தலமாகப் போற்றப்படுகிறது. தீர்த்தம், தேவ தீர்த்தம். தலவிருட்சம், கல்லில் கனிதரும் வெள்வாழை. இதற்கு யாரும் தண்ணீர் ஊற்றுவது இல்லை. இத்தலத்து இறைவனை அனைத்துத் தேவர்களும் வந்து வழிபட்டதால் 'தேவூர்' என்ற பெயர் ஏற்பட்டது. வியாழன், இந்திரன் குபேரன், சூரியன், அனுமன், கௌதமர், அகல்யை மற்றும் பாண்டவர்களுக்குத் துணைபுரிந்த விராடன் தன் மகன் உத்திரனோடு வந்து இங்கு வழிபட்டுள்ளான். ஞானசம்பந்தர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், வள்ளலார் போன்றோர் இத்தலத்து இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர் அருணாசலக்கவிராயர் அம்பிகையைப் போற்றிப் பாடியுள்ளார். இறைவன் இங்கு சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார்.

குரு பகவான் இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானை நெடுங்காலம் வழிபட்டு வந்தார். குருபகவானின் பக்திக்கு மகிழ்ந்த இறைவன் அவருக்குக் காட்சி தந்தார் அதைக் கண்டதும் இறைவனின் தாளில் விழுந்து வணங்கி வழிபட்டார் குரு பகவான். ஈசனும் மகிழ்வுடன் தேவர்களுக்குத் தலைவனாகவும், ஆசானகவும் இருக்கும் பதவியை அருளியதுடன், 'தேவகுரு' என்ற பட்டத்தையும் வழங்கினார். குருபகவானும், தனக்கு அருள் புரிந்ததுபோல் இங்கு வந்து தன்னை வணங்குபவர்களுக்கும் அருள் புரியவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். இறைவனும் அதற்கு இசைந்தார். குரு வழிபட்டு அருள் பெற்ற தலம் என்பதால் இத்தலம் 'குரு ஸ்தலம்' என அழைக்கப்படுகிறது. இறைவன் 'தேவகுரு நாதர்' என்று அழைக்கப்படுகிறார். இங்கு தென்முகக்கடவுள் 'குரு தட்சிணாமூர்த்தி' என அழைக்கப்படாமல் 'அனுக்கிரக தட்சிணாமூர்த்தி' என அழைக்கப்படுகிறார். குரு தோஷம் நீங்க இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் தங்கள் ஜென்ம ஜாதகத்தை வைத்து அனுக்கிரக தட்சிணாமூர்த்தியை வழிபடத் திருமணம் கைகூடுகிறது என்பது கண்கூடான உண்மை.

மூன்று நிலை ராஜகோபுரத்துடனும் ஐந்து பிரகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது சுவாமி சன்னிதிக்கும் அம்மன் சன்னதிக்கும் இடையே சுப்பிரமணியர் சன்னிதி உள்ளது. அதனால் இத்தலம் சோமாஸ்கந்தத் தலமாக விளங்குகிறது. பிரகாரத்தில் பாலகணபதி, பாலமுருகன், இந்திரலிங்கம், அகல்ய லிங்கம், கௌதம லிங்கம், மாணிக்கவாசகர் வழிபட்ட ஆத்ம லிங்கம் ஆகியன அமைந்துள்ளன. இத்தல விநாயகர் 'பிரம்ம வரதர்' என்று அழைக்கப்படுகிறார். அஷ்ட விநாயகர் தலங்களில் இதுவும் ஒன்று. சுப்பிரமணியர், அம்பாள் சன்னதிக்கு இடையில் மகாலட்சுமி சன்னதியும் அமைந்துள்ளது. சைவ, வைணவ பேதமின்றி பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். இங்குள்ள விஷ்ணு துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். ஒரு கையில் சங்கு சக்கரமும் மறுகையில் மழுவும் கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறாள். இவளை வணங்கினால் திருமணத் தடை, காரியத் தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி உண்டாகிறது.

பஞ்சம் ஏற்பட்டபோது கௌதமர் இங்கு வந்து தங்கி லிங்கம் அமைத்து வழிபட்டு, பொன்னும் பொருளும் பெற்றுப் பசி நீங்கியதாக வரலாறு சொல்கிறது. இலங்கேசுவரனான ராவணன், குபேரனிடம் சண்டையிட்டு, குபேரனின் ஐந்து பெரும் செல்வங்களில் சங்கநிதி, பதுமநிதி என்ற இரு செல்வங்களையும் கவர்ந்து எடுத்து வந்துவிட்டான், அதனால் மனம் வருந்திய குபேரன், இத்தலத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு இங்கு வந்து தங்கி இறைவனை வழிபட்டான். குபேரன் இத்தல இறைவனை, வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில், செந்தாமரைப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டான். அவனது பூஜைக்கு மகிழ்ந்த சிவபெருமான், குபேரனுக்கு அவன் இழந்த சகல செல்வங்களும் திரும்பிக் கிடைக்க வழி செய்ததாகப் புராணம் கூறுகிறது

திருமணபாக்கியம், புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் கல்வாழைக்குப் பூஜை செய்கிறார்கள். திங்கள் கிழமைகளில், சந்திர ஓரையில் வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. சூரியன் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளான். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை கோயில் ராஜகோபுரத்தின் முதல்நிலை மாடம் வழியாக வந்து தேவபுரீஸ்வரரின் மேனியைத் தழுவி சூரியன் வழிபடுகிறான். அன்று காலை சூரியன் இறைவனைத் தொழுவது காலை 7 1/2 மணிக்குள் நிகழ்கிறது. மகத நாட்டரசன் குலவவர்த்தனன் இத்தல இறைவனை வழிபட்டு அருள்பெற்றுப் பரி வேள்வியை நிறைவேற்றினான்.

கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட கோயில்களில் இதுவும் ஒன்று. இம்மன்னர் பொது சகாப்தம் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சுவாமி சன்னிதியை உயர்த்தி மாடக் கோவில் வடிவில் இவர் திருப்பணி செய்துள்ளார். கோவிலில் இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஒன்று ஜடாவர்மன் என்ற திரிபுவனச் சக்கரவர்த்தியால் பொது சகாப்தம் 1262ல் சுந்தர பாண்டியத்தேவரால் அருளப்பட்டது. மற்றொன்று பொது சகாப்தம் 1425ல் அருளப்பட்டது விஜயநகர காலத்தைச் சேர்ந்தது. இது குறித்த கல்வெட்டு கட்டு மலையில் வடசுவற்றில் உள்ளது.

இக்கோவில் சுவாமி, அம்பாள், விநாயகர் முருகன் அனைவரும் கிழக்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு. இங்கு அம்பாளிடம் குழந்தைகளுக்கு அன்னப்பிராசனம் செய்தால் குழந்தைகள் நல்ல பேச்சாற்றல் பெறுவார்கள் என்பது ஐதீகம். ராகு-கேது தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது. கோவிலில் குருப்பெயர்ச்சி விழா, மஹாலக்ஷ்மி குபேரபூஜை வருடா வருடம் மாசித் திங்கள் பூரட்டாதி நட்சத்திரம் அன்று நடக்கிறது. அன்று குபேரன் அரூபமாக வந்து இறைவனை வணங்குவதாக ஐதீகம். வைகாசி விசாகத் திருவிழா, பிரம்மோற்சவம் ஆகியன சிறப்பாக நடைபெறுகின்றன. வாராவாரம் குருபூஜை நடக்கிறது. பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனம் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. தினசரி ஐந்து கால பூஜை நடக்கிறது. சிவராத்திரியும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குருபகவான், குபேரன் பூஜித்த தேவபுரீஸ்வரரை வழிபட்டு நலமும், வளமும் பெறுவோமாக.

சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com