பிரணவ் ரவிச்சந்திரன்
ஒரு பென்னி என்பது சல்லிக்காசு பெறாத நாணயமாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் ஈஸ்ட் ஹாம்ப்டன், கனெக்டிகட்டைச் சேர்ந்த மாணவர் பிரணவ் ரவிச்சந்திரனுக்கு அப்படியல்ல. வீட்டில் யாரும் பொருட்படுத்தாமல் இறைந்து கிடக்கும் பென்னியைப் பார்த்தபோது, இவற்றைச் சேர்த்தால் பெருந்தொகை ஆகுமே என்று தோன்றியதாம். அப்படிப் பிறந்ததுதான் 'Penny for Poor' (ஏழைக்கு ஒரு பென்னி).

ஒரு, ஒரு பென்னியாகத் திரட்டி, இவர் கொடுத்துள்ள நன்கொடையின் அளவு இன்றைக்கு ஒரு மில்லியன் பென்னி - அதாவது 10,000 டாலர்! ஒரு பென்னி கொடுப்பது யாருக்கும் பாரமாகத் தெரியாது, பிரணவ் கேட்பதெல்லாம் அவ்வளவுதான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது வெறும் பழமொழி அல்ல, நிதர்சனமான உண்மை.

பிரணவ் ரவிச்சந்திரனின் 'ஏழைக்கு ஒரு பென்னி' சேவைக்காக 20 வயதிற்குட்பட்ட 20 இளைஞர்களில் (20 Under 20) ஒருவராக இவரை இந்தியா நியூ இங்கிலாந்து நியூஸ் தேர்ந்தெடுத்துள்ளது.

இவரது அமைப்பு சுகாதாரம் மற்றும் வீடற்றோர் நலம் ஆகியவற்றுக்கு நிதி உதவுகிறது. பென்னி ஃபார் புவர், (501c3) பிரிவில் வரி விலக்குக்காக விண்ணப்பித்துள்ளது.

பிரணவ் நோக்கற்ற பணிக்கெனத் தனது பள்ளியின் 'தன்னார்வலர் சேவை விருது', தான் வசிக்கும் ஈஸ்ட் ஹாம்ப்டன் நகரின் Spirit of Community Award போன்றவற்றை முன்னர் பெற்றுள்ளார்.

அடுத்த முறை நீங்கள் ஒரு பென்னி நாணயத்தைப் பார்த்தால், பிரணவை நினைவில் கொள்ளுங்கள். 'பென்னி ஃபார் புவர்' உண்டியல் விரைவில் உங்கள் ஊருக்கு வரும். அதில் சேர்த்துவிடுங்கள்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com