கவிஞர் சுந்தர்ஜி ப்ரகாஷ்
அலங்காரங்களோ பாசாங்குகளோ இல்லாமல் நேரடி வாழ்க்கையிலிருந்து கவித்துவத்தின் இயல்பான மொழியைத் தன் கவிதைகளில் சிறப்பாக வெளிப்படுத்துபவர் கவிஞர் சுந்தர்ஜி ப்ரகாஷ். க.நா.சு., தஞ்சை ப்ரகாஷ் தொடங்கி சமீபத்தில் அமரரான பிரபஞ்சன் வரை இலக்கியவாதிகள் பலருடன் நெருங்கிப் பழகியவர். தமிழ்ப் படைப்புலகில், அதிகமாகத் தன்னை முற்படுத்திக் கொள்ளாமல், அமைதியாக இயங்கி வரும் சுந்தர்ஜி ப்ரகாஷ், மொழிபெயர்ப்பிலும் தேர்ந்தவர். சுபாஷிதம், பஜகோவிந்தம், ஸ்ரீருத்ரம் போன்றவற்றைக் கவிதை நடையில் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார். அவருடன் உரையாடியதில் இருந்து...

கே: 'மீனாட்சிசுந்தரம்' சுந்தர்ஜி ப்ரகாஷ் ஆனது ஏன், எப்படி?
சுந்தர்ஜி: மதுரையில் பிறந்ததால் மீனாட்சிசுந்தரம். கல்யாண்ஜியின் கவிதைகள் தந்த கிளர்ச்சி என் இருபதாம் வயதில் என்னை சுந்தர்ஜி ஆக்கியது. முகநூல் என் பெயருடன் துணைப்பெயர் ஒன்றை இணைத்துக் கொள்ளக் கோரியபோது, என் எழுத்து, வாசிப்புக்குப் பெரும் வழிகாட்டியான தஞ்சை ப்ரகாஷின் பெயரை இணைத்து, முகநூலுக்காக சுந்தர்ஜி ப்ரகாஷ் ஆனேன்.

கே: இலக்கியம், கவிதை மீது உங்களுக்கு ஆர்வம் முகிழ்த்தது எவ்வாறு?
சுந்தர்ஜி: என்னால் குறிப்பாகச் சொல்ல முடியவில்லை. இலக்கியம் மட்டுமல்ல. இந்த வாழ்வே மிகுந்த ஆர்வம் அளிப்பதாக இருக்கிறது. எல்லாவற்றையும் நிதானமாகக் கவனிக்கும் என் ஆதார குணம் காரணமாக இருக்கலாம். எல்லாச் செய்திகளையும் அலங்கரித்துப் பேசும் என் அம்மாவின் குணம் காரணமாக இருக்கலாம். தேவையானபோது மட்டுமே பேச வாய் திறக்கும் என் அப்பாவின் பங்கிருக்கலாம். செறிவான எழுத்துகளை வாசித்தது, செழுமையான இசையைக் கேட்டது, இப்படி எல்லாமே அதனதன் பங்குக்குக் காரணமாகத் தோன்றுகிறது. சொற்பமான வார்த்தைகளில் மிகப்பெரிய வாழ்க்கை அனுபவத்தைத் தரும் திருக்குறள், கவிதைகள் எழுத ஆர்வம் தந்தது.

கே: 'கள்ளம்' நாவல் ப்ரகாஷ் சொல்லச் சொல்ல நீங்கள் எழுதியதல்லவா?, அதைப்பற்றிச் சில வார்த்தைகள்...
சுந்தர்ஜி: கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன் அவருக்கு வலது கையில் திடீரென ஓஸ்ட்டியோமயலைடிஸ் (Osteomyelitis) ஏற்பட்டது. பெரும்பாலும் புகைப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கே எலும்புத் தொற்றாக இந்த நோய் உருவாக வாய்ப்புண்டு. அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தினமும் எழுதும் பழக்கமுள்ள அவரால் எழுதமுடியாத நிலை சகிக்க முடியாததாக இருந்தது. அருகில் இருந்த என்னிடம், "நான் சொல்லச் சொல்ல நீ எழுதுகிறாயா?" என்று கேட்டார். சம்மதித்தேன். 1987ல் இலக்கிய நோபல் பெற்ற ஜோஸஃப் பிராட்ஸ்க்கி, தன்னுடைய நீதிமன்ற விசாரணை குறித்து எழுதி இருந்த பதிவை முதன்முதலில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லச் சொல்ல, நான் எழுதினேன். அது கணையாழியில் வெளிவந்தது அவருக்குப் பெரிய உற்சாகத்தையும், என்மூலம் எழுதும் உத்திமீது நம்பிக்கையையும் அளித்தது.சிறுகதை, கவிதை, கட்டுரை இவற்றை எழுதுபவர்களை விட நாவல்கள் எழுதுபவர்கள்தான் அதிகம் கவனம் பெறுகிறார்கள் என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. "ஒரு நாவல் எழுதிப் பார்ப்போமா?" என்று கேட்ட அவரிடம், சம்மதம் சொன்னேன். 'கள்ளம்' எழுதத் தொடங்கினோம். சில நாட்கள் ஒரு பக்கம் கூட எழுதியிருக்க மாட்டோம். சில நாட்கள் விடாமல் எழுத வாய்க்கும். வசதி இருந்தபோது, தஞ்சாவூர் கார்த்திக் லாட்ஜ், ஹோட்டல் தமிழ்நாடு என்று அறை எடுத்துத் தங்கி எழுதி இருக்கிறோம். வசதியற்ற பல நாட்கள் பெரியகோயில் புல்வெளியில். அநேகமாக நான்கு மாதங்களில் எழுதி முடித்துவிட்டோம் என்ற நினைவு. எழுதும்போது என் கருத்தைக் கேட்பார். என்றாலும் அவரின் விருப்பம்போல் தான் நாவல் பயணிக்கும். அது ஒரு மறக்கமுடியாத அனுபவம்.

கே: க.நா.சு.விடம் நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள். கும்பகோணத்தின் புகழ்பெற்ற பல இலக்கியவாதிகளிடம் நட்புப் பூண்டிருந்திருக்கிறீர்கள். அவற்றில் உங்கள் மறக்க முடியாத அனுபவங்கள்…
சுந்தர்ஜி: என் இருபது வயதிலேயே க.நா.சு. வின் எழுத்தும், கவிதையும் என்னை வசீகரித்தன. இன்றுவரை தொடர்கிறது. 1986ல் இருந்து 1988ல் அவர் மறையும்வரை அவருடன் நெருங்கிய பழக்கம். அவர் ஒரு சாலையில் தனியாக நடந்து செல்லும்போது "ஒரு மகத்தான கலைஞன் செல்கிறான்" என்ற அடையாளம் இல்லாமல் கடந்து செல்வார். வாழ்க்கையில் அடையாளம் காணப்படாமல் எளிமையாய் வாழ்ந்து மறையவேண்டும் என்ற ஆழமான எண்ணம் எனக்குள் உருவாக அவரே என் முன்னோடி.

எழுத்தை வாசிக்க விரும்பும் நான் எழுதுபவர்களைச் சந்திக்க விரும்பியதில்லை. ஆனாலும் ப்ரகாஷின் நட்பால், அவரின் துணையுடன் கும்பகோணத்தில் எம்.வி.வி., கரிச்சான்குஞ்சு, தேனுகா, ஓவியர் அரவக்கோன், க்ருஷாங்கினி, ரெங்கராஜன் போன்றோரை அடிக்கடி சந்திக்க வாய்த்தது. நான் வயதில் சிறியவன் என்பதால் அவர்கள் அனைவரும் பேசுவதைக் கவனிப்பதில் மட்டுமே என் ஆர்வம் இருக்கும். என்னைப் போன்ற சிறியவனையும் அவர்கள் அருகில் வைத்துக்கொண்டது அவர்கள் பெருந்தன்மை.

எப்போதும் கரிச்சான்குஞ்சுவின் குரல் உச்சத்தில் இருக்கும். எம்.வி.வி.க்கு செவித்திறனில் குறை இருந்தாலும், அவர் உரக்கப் பேசமாட்டார். ஆனால் கருத்துகள் அழுத்தமாக இருக்கும். பல நாட்கள் அரட்டையில் லயித்து, தஞ்சாவூர் செல்லும் இறுதிப் பேருந்தைப் பிடிக்க ஓடி இருக்கிறோம். இது தவிர ப்ரகாஷுடன் பயணித்து நான் சந்தித்த மறக்க இயலாத ஆளுமைகள் ப. சிங்காரம், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், ந.முத்துசாமி.கே: உங்கள் கவிமொழி மிக வித்தியாசமானது. வாசகனை ஈர்த்து, கவிதையுடன் பிணைத்துவிடக் கூடியது. அது எப்படிக் கைவந்தது?
சுந்தர்ஜி: அதை நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள் என நம்புகிறேன். நான் கவிதைகள் எழுதும் முன் 1. அவை யார் எழுதியது போலவும் இருக்கக்கூடாது. 2. அவை எளிமையாக இருக்கவேண்டும். 3. என் ஆன்மாவில் தோய்ந்த மொழியில் இருக்கவேண்டும் என்கிற மூன்று அடிப்படையான தீர்மானங்கள் வைத்துக்கொள்கிறேன். முடிந்தவரை அவற்றை எட்ட முயற்சிக்கிறேன்.

கே: ஒரு கவிதை உங்களுள் எப்படி உருவாகிறது, கவிதைகளின் பேசுபொருளாக எவற்றை அமைத்துக் கொள்கிறீர்கள்?
சுந்தர்ஜி: ஒரு கவிதை யாரோ பேசும் ஒரு வாக்கியத்தில், கண்ணில் படும் கிளரவைக்கும் காட்சி அனுபவத்தில் உருவாகலாம். வாசிக்கும் அற்புதமான எழுத்து அந்த உந்துதலைத் தரலாம். தத்துவம் கவிதைக்கு மிகவும் நெருக்கமானது. தத்துவ சிந்தனை நல்ல கவிதையின் ஆதாரம். என்னைச் சலனப்படுத்தும் எதையும் நான் கவிதையாக்க முனைகிறேன்.

கே: மொழிபெயர்ப்பிலும் உங்களுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதுபற்றி...
சுந்தர்ஜி: என் ரசனையை ஒட்டிய பிறமொழிப் படைப்புகளின் மீது எப்போதும் எனக்கு ஆர்வமுண்டு. அவற்றைப் பிறரும் ரசிக்கவேண்டும் என்று மொழிபெயர்ப்பதுண்டு. எனது இருபது வயதில் 'பை ஜூயி' என்ற ஆறாம் நூற்றாண்டுக் கவிஞனின் 200 கவிதைகளை மொழிபெயர்த்தேன். அதில் சிலவற்றை சுந்தரராமசாமி 1988ல் காலச்சுவடு இதழில் வெளியிட்டார். எப்போதுமே எனக்கு கவிதை, இந்தியத் தத்துவம் இரண்டும் மனதுக்கு நெருக்கமானவை. அதன் தொடர்ச்சியாகத்தான் பஜகோவிந்தம், சுபாஷிதம் ஆகியவற்றை மொழிபெயர்த்தேன்.

கே: உங்களது தக்ஷிணாயனம் நாவலை ஏன் தொடர்ந்து எழுதவில்லை?
சுந்தர்ஜி: 60 அத்தியாயங்களில் ஒரு நாவல் எழுத முடிவுசெய்து 2012ல் ஒரு மாதத்தில் 13 அத்தியாயங்கள் வரை எழுதி நின்றுபோன முயற்சி அது. ஏனோ பல நெருக்கடிகளால் அதனைத் தொடர முடியவில்லை. மனதில் எழுதி முடித்த அந்த நாவலை வெளியே கொண்டுவர வேண்டும். இன்னும் ஒரு வருடத்திற்குள் முடிக்க இந்த நேர்காணலில் சங்கல்பம் செய்து கொள்கிறேன்.கே: நிச்சயம். உங்கள் சங்கல்பம் நிறைவேற எங்கள் வாழ்த்துக்கள். உங்களைப் பாதித்த, மிகவும் கவர்ந்த கவி ஆளுமைகள் பற்றிச் சொல்லுங்கள்...
சுந்தர்ஜி: கவிதை மட்டுமே எனது மனம் விரும்பி எழுதும் வடிவம். மற்ற அனைத்தும் காலம் உந்த, அதை நான் வெளிக்கொண்டு வர முயற்சி செய்கிறேன். சிறுகதை, கட்டுரை, நாவல், மொழிபெயர்ப்பு எல்லாம் அப்படியே. பாரதியை வாசிக்க வாசிக்க ஒரு சிறு தோணி கடலைக் கடக்கும் உருவகம் மனதில் வருகிறது. எப்போதும் என் எழுத்தின் முன்னோடி பாரதிதான். அவருடைய கவிதைகளில், சுயசரிதையில் பொதிந்திருக்கும் சிந்தனைகளை நமது சமூகம் முழுமையாக இன்னும் வாசிக்கவில்லை. தமிழின் சிறுகதை வடிவத்திற்கும் ஆசான் பாரதிதான்.

திருவள்ளுவர், ஔவையார், தாயுமானவர், குமரகுருபரர், வள்ளலார் இவர்கள் நம் பொக்கிஷம். அகம், புறம், பதினெண்கீழ்க்கணக்கு உள்ளிட்ட நமது சங்க இலக்கியம், உலக இலக்கியத்தின் நவீனத்திற்கு முன்னோடி. அஷ்டாவக்ர கீதை, யோக வாசிஷ்டம், கைவல்ய நவநீதம், ஒழிவில் ஒடுக்கம் இவை நான்கும் ஞானப் பெட்டகத் திறவுகோல்கள்.

கே: எழுத்தாளர்களில் யாருடைய படைப்புகள் உங்களை மிகவும் கவர்ந்தவை?
சுந்தர்ஜி: தற்கால வாசிப்பில் க.நா.சு., ரசிகன், ப. சிங்காரம், சி. மணி, சுந்தரராமசாமி, வைதீஸ்வரன், அசோகமித்திரன், ந. முத்துசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன், விக்ரமாதித்யன், ராஜசுந்தரராஜன், சமயவேல், நா. சுகுமாரன், கோபிகிருஷ்ணன், இரா. முருகன், பாரதிமணி இவர்களை எல்லாம் நான் ரசித்திருக்கிறேன். கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் யாரையும் வாசிக்காமல், எழுதாமல் இருந்தேன். அந்த இடைவெளியை என்னால் கடக்க முடியவில்லை. அதனால் 90களுக்குப் பிந்தைய எழுத்து அனைத்தையும் என்னால் வாசிக்க இயலவில்லை. அந்த இடைவெளியில் நான் மிக நல்ல எழுத்தாளர்கள் பலரையும் தவற விட்டிருக்கக் கூடும். ஆனால் அத்தனையையும் இப்போது என்னால் வாசிக்க இயலாது.

கே: உங்களது ஆன்மிக ஆர்வம் குறித்து...
சுந்தர்ஜி: 1. எனது எளிய வாழ்க்கையில் கடவுள், எனது தகுதிக்கும் மேலாக எனக்களித்த கொடை ஸ்ரீஸ்ரீஸ்ரீ. ஷண்முகானந்தா என்ற ஞானியை எனக்குக் காட்டியதுதான். இமயத்தில் ஆசிரமம் நிறுவி, துறவு வாழ்க்கை வாழ்ந்து வரும் அந்த மகான் எனனைத் தேடி வந்து, என் குருவாய் அமைந்தார். அவரின் சந்திப்பு என்னை புத்துயிர்ப்பித்தது.

2. 2012ல் என் நண்பன் செல்லதுரையுடன் சதுரகிரி மலை ஏறும்போது, அங்கு பத்து நிமிடங்கள் ஏற்பட்ட மரண அனுபவம்.

மேற்சொன்ன இரண்டு சம்பவங்களும் என்னைப் புரட்டிப் போட்டன. எனக்குள் உருவாகி இருந்த பல மதிப்பீடுகளைத் தகர்த்தன.

மதம் கடந்த, மனம் கசிந்து தன்னுள் காணும் இறைநிலையே, உச்சநிலை ஆன்ம அனுபவம். அளவற்ற அன்பே முதிர்ந்த மனதின் மொழி. கருணையும், சகிப்புமே உலகை வெல்லும் ஆயுதம்.கே: உங்களை எழுத வைப்பது எது, உங்கள் கவிதா சக்தியை உயிர்ப்போடு வைத்திருப்பது எது?
சுந்தர்ஜி: கடவுளின் கரம் சில சமயம் எழுதவும், சில சமயம் எழுதாமல் இருக்கவும் வைக்கிறது. ஒவ்வொரு நாளும் ஏதோ ஓர் அற்புதமான எளிய தரிசனம் எனக்குக் கிட்டுகிறது. பாடம் போதிக்கிறது. உறக்கத்தில் தோன்றி மறையும் சில கனவுகள் போன்ற மின்னும் நட்சத்திர தருணங்கள் அவை. என்னை எழுத வைக்கும் கடவுளின் கரம் சுட்டும் காட்சிகள் அவை.

மலைப்பிரசங்கம், அவதூத கீதை, யட்சப் பிரச்னம், விதுர நீதி, பஞ்சதந்திரம் இவற்றை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் எனக்குள் உண்டாகும் கிளர்ச்சி வார்த்தைகளில் வராது. எழுதி எழுதிக் கரைந்து, எழுதும் அவசியமற்று நிறுத்திக்கொள்ளும் ஒரு கணம் வரும். அது ஆன்மாவின் சங்கீதத்தை உணர்ந்த தருணமாக இருக்கும் எனவும் நம்புகிறேன்.

சுந்தர்ஜி ப்ரகாஷின் கவிதையாகவே பேசுகிறார். நாம் அதில் லயித்துப் போகிறோம்.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

*****


தஞ்சை ப்ரகாஷும் நானும்
ப்ரகாஷ் என் வாழ்க்கையில் 1985ல் நுழைந்தார். என்னைவிட இருபத்தியிரண்டு வயது மூத்தவரை, அறிமுகமான நாள் முதல் பெயர்சொல்லி அழைக்கும் சுதந்திரம் அவரை அடையாளம் காட்டியது. 1985 முதல் 1990 வரை தொடர்ச்சியாக எல்லா நாட்களும், 1994 வரை இடைவெளிகளுடனும், 1997 வரை நீண்ட இடைவெளிகளுடனும் அவருடன் பழகி இருக்கிறேன். என்மீதும், என் எழுத்துமீதும் மிகுந்த அன்பு செலுத்தினார். நான் தமிழில் பெரிய எழுத்தாளனாக வருவேன் என்று நம்பினார். ஆனால் 1990ல் பணி நிமித்தம் சென்னை சென்றபின் எழுதுவதையே நான் நிறுத்தி, அவர் நம்பிக்கையைத் தகர்த்து விட்டேன். அவர் மரணம் அடைந்த துயரச்செய்தி என்னை மூன்று ஆண்டுகள் கழித்தே அடைந்தது.

எழுதுவது, வாசிப்பது, உரையாடுவது, பயணங்கள் செய்து கொண்டே இருப்பது, நல்ல ருசியான உணவுகளைச் சமைப்பது, ஹோமியோபதி மருத்துவத்தில் ஈடுபாடு இவை மொத்தமும்தான் ப்ரகாஷ். அவர் காலத்தில் க.நா.சு.வுக்கு அடுத்தபடியாக அதிகம் வாசிப்பனுபவம் கொண்டவர் ப்ரகாஷ். புதிய புதிய புத்தகங்கள் வாங்கிப் படிப்பதும், எல்லோருக்கும் தான் ரசித்த நூல்களைப் பரிசளிப்பதும் அவர் வாடிக்கை. தமிழ், ஆங்கிலம் தவிர மலையாளம், தெலுங்கு இரண்டிலும் மூலத்திலேயே நூல்களை வாசிப்பார்.

மாக்ஸ் முல்லர் பவன் திருச்சியில் வாரம் இரு நாட்கள் நடத்திய வகுப்புகளுக்கு அவரும், நானும் சென்று, ஓராண்டு ஜெர்மன் கற்றுக் கொண்டோம். அவருக்கு ஓஷோவின் மீது பெரிய ஈர்ப்பு இருந்தது. அவர் யாரிடமும் விரோதம் கொண்டு நான் பார்த்ததில்லை. மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவர். ஒரு குழந்தைபோல யாரிடமும் வேறுபாடு இல்லாமல் அவரால் நெருங்கிவிட முடியும். அவரின் முழுவீச்சை உணராத சராசரி மனிதர்களுடனும் அவரால் இயல்பாகப் பழகமுடியும். புதிதாக எழுதும் யாரிடமும் கறாரான விமர்சனம் செய்யமாட்டார்.

அவருடைய எழுத்துகள் அவர் வாழ்ந்த காலத்தில் கவனம் பெறவில்லை. அதில் அவருக்கு வருத்தம் இருந்தது. அவருடனான என் அனுபவங்கள் ஒரு புத்தக அளவுக்கு விரியக் கூடியவை. அவர் மறைந்து பதினெட்டு ஆண்டுகள் கரைந்துவிட்ட போதும், அவற்றை எழுத இன்னும் எனக்குள் சமிக்ஞைகள் தென்படவில்லை. நிச்சயம் எழுதுவேன்.

-சுந்தர்ஜி ப்ரகாஷ்

*****


அகம் விரும்புதே புறம்
2010ல் இசைக்கவி ரமணனின் அரிய நட்பு கிடைத்தது. அதன்மூலம் அவர் உருவாக்கிய மின்னஞ்சல் குழுவில் நானும் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. நான் தொடர்ந்து நிறைய எழுதிய காலம் அது. 400 சுபாஷிதங்களைத் தமிழில் மொழிபெயர்த்தேன். அதை குழுவில் இருந்த கிரேஸி மோகனும் மிகவும் ரசித்துப் பாராட்டினார். அதன்பின் புறநானூறு பாடல்களுக்கு நவீன கவிதை வடிவம் கொடுக்க முயற்சித்தபோது, அவராகவே என் முதல் கவிதைக்குப் பொருத்தமாக வெண்பா எழுதி அனுப்பினார். மிகவும் சிறப்பாக இருந்தது. நாம் இருவரும் இணைந்து செய்யலாமா என்று கேட்டபோது ஒப்புதல் தந்தார். அறுபது பாடல்கள்வரை எழுத முடிந்தது.

இருவரின் சூழல் காரணமாக அது நின்றுபோனது. அவ்வப்போது பேசிக் கொள்ளும்போது அது தொடர இருவருமே பரஸ்பரம் விருப்பம் தெரிவித்தாலும் இன்னமும் தொடர இயலாமல் நிற்கிறது. நிச்சயம் விரைவில் தொடரும் என நம்புகிறேன்.

-சுந்தர்ஜி ப்ரகாஷ்

*****


நினைவுப் பாதை
மதுரையில் பிறந்து, தளவாய்புரம் (ராஜபாளையம்), ஸ்ரீவைகுண்டம் (திருநெல்வேலி), தஞ்சாவூர், சென்னை, புதுச்சேரி என்ற வெவ்வேறு வசிப்பிடங்களில் வாழ்க்கை கரைந்தாலும், திருநெல்வேலி வாழ்க்கை என்னுள் இன்னமும் உயிர்ப்புடன் நிலைத்திருக்கிறது. தாமிரபரணிக் கரையோரத்தில் வாழ்ந்த சுமார் பத்து வருடங்களின் வேரைத் துறந்த வாழ்க்கையை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. என் பள்ளி, கல்லூரிப் பருவத்துடன் அந்த வாழ்க்கை இணைந்திருப்பதுதான் காரணம் எனத் தோன்றுகிறது. எனக்குத் தமிழ் போதித்த பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளிக்கும், என் பள்ளித் தோழனாக பாரதியைச் சொல்லிக் கொள்ளும் பெரும்பேறைக் கொடையளித்த திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் பள்ளிக்கும் என் மனதில் எப்போதும் இடமுண்டு.

பொருளீட்டும் வாழ்வில் சென்னை மற்றும் புதுச்சேரியில் சுமார் பதினொரு வருடங்கள் TVS நிறுவனத்தில் கழிந்தது. அதன்பின் LIC யில் நான் முகவராக இருந்த ஐந்து ஆண்டுகள் மிகப்பெரிய வெற்றியும், பல சாதனைகளும் அடைந்த காலமாக இருந்தது. வாழ்வின் ஆனந்தம் எளிமையும், அடையாளம் அற்றும் இருத்தலே. அந்த ஆனந்த லகரியில் நான் மிதந்து கொண்டிருக்கிறேன். இந்த ஆனந்தம் என்றும் மிஞ்சட்டும் என இறைவனை யாசிக்கிறேன்.

-சுந்தர்ஜி ப்ரகாஷ்

*****

© TamilOnline.com