தென்றல் பேசுகிறது
பாரீஸ் நகரத்தின் ஐஃபெல் கோபுரமும், சாம்ப்ஸ் எலிஸீயின் வசீகரமான கடைகளும் கட்டடங்களும்தான் ஃபிரான்ஸ் என்று ஒரு சுற்றுலாப் பயணியின் மயங்கிப் போன கண்களுக்குத் தெரியலாம். ஆனால், அவற்றைத் தாண்டி பற்றாக்குறை, வறுமை, பசி, குளிர் என்கிற யதார்த்தங்களில் வாழ்கிறார் சராசரி ஃப்ரெஞ்சுக்காரர். இந்தப் பெரிய வெடிமருந்துப் பாண்டத்தின் உச்சியில் வைத்த நெருப்பாக ஆனது கேஸ் விலை ஏற்றம். கட்சி, கொள்கை என்கிற வேறுபாடுகளைத் தாண்டி இந்தச் சபிக்கப்பட்ட சராசரி மனிதர்கள் ஒன்று சேர்ந்து போராடத் திரண்டனர் பாரீஸின் சீன் நதிக்கரையில். கொள்கைசார்ந்த தலைவர்கள் இல்லாத நிலையில் இவர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாகவே நடந்து வருகிறது. இப்போது எரிபொருள் மீதான வரி குறைக்கப்பட்டுவிட்ட போதிலும் போராட்டம் அடங்கவில்லை. அடங்காது. "இது வெறும் பெட்ரோலுக்கான போராட்டமல்ல. இன்னும் பல வரிகள் குறைக்கப்பட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்க வேண்டும்" என்கின்றனர் போராட்டக்காரர்கள். கேஸ் விலையைக் குறைத்ததில் பிரதமர் இம்மானுவெல் மேக்ரோனின் பிடிவாதம் குறைந்திருப்பது புரிந்தாலும், அவர் இன்னும் தரைமட்ட யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறதென்றே தோன்றுகிறது.

*****


உலகத்தின் அதிக மக்கள்தொகை கொண்ட சீனா, இந்தியா போன்ற நாடுகளின் உழைப்பு, வளர்ச்சியுற்ற நாடுகளுக்கு வசதிகளைக் குறைந்த செலவில் கொடுக்க உதவி வருகிறது. பாரீஸ் கலவரத்திற்கு இணையான அடிமட்டக் கொந்தளிப்பை இங்கிலாந்து, இத்தாலி, அமெரிக்கா ஆகியவற்றிலும் உணரமுடிகிறது என்கிறர் ஒரு பொருளாதார நிபுணர். குறைந்த விலை, அதிகச் சம்பளம், மிக அதிக வசதிகள் என்கிற எதிர்பார்ப்பு அமெரிக்காவிலும் பல மேற்கு நாடுகளிலும் நிலவி வருகிறது. உலகத்தின் பொருளாதாரச் சமன்பாடுகள் மாறிவரும் நிலையில், இந்த எதிர்பார்ப்பு இனியும் பொருளுள்ளதாக இருக்குமா எனத் தெரியவில்லை. உள்நாட்டில் நியாய விலை, சரியான ஊதியம் என்பவற்றை வளரும் நாடுகள் கொண்டுவரும் அதே நேரத்தில், "கொள்வது மிகை கொளாது, கொடுப்பதூஉம் குறை கொடாது" என்கிற கொள்கை வளர்ந்த நாடுகளின் இயல்பாகுமே ஆனால், உலகத்தில் சமநிலை ஓரளவு மீளும். அப்போதுதான் வாழ்வியல் சமத்துவம் சாத்தியம் ஆகும்.

*****


மேலே பேசிய ஐயங்களோடு பிறக்கும் 2019ஐ இன்னுமொரு புத்தாண்டு என்று அலட்சியப்படுத்திவிட முடியாது. நாம் நம்மை மாற்றி அமைத்துக்கொண்டால், கொடுக்கிறவராக, அக்கறை காட்டுகிறவராக நாம் மாறினால், சமுதாயம் மாறும். அப்போது மிக அதிகமானவர்களுக்கு மிக அதிக நன்மை என்பது நடைமுறை ஆகும். இந்த நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக வருகிறார் இளைஞர் சாயி பிரசாத் வெங்கடாசலம். அவரது அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின் தொகுப்பு பல சாத்தியக்கூறுகளை நம் கண்முன்னே திறக்கிறது. அழகான, செட்டான சொற்களில் அதிசயமான கவிதைகளைப் புனையும் சுந்தர்ஜி ப்ரகாஷ் அவர்களுடனான நேர்காணலும் அழகானது, செட்டானது. இரண்டு இளம் சாதனையாளர்களின் அறிவுத்திறனும் சமுதாய அக்கறையும் மெச்சவும் பின்பற்றவும் தக்கது. நீங்களே படியுங்கள்....

வளமான, மகிழ்ச்சியான, அன்பினால் நிறைந்த புத்தாண்டுக்கு நாம் அனைவரும் ஒற்றுமையோடு நல்வரவு கூறலாம் வாருங்கள். வாசகர்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

ஜனவரி 2019

© TamilOnline.com