ஆ. மாதவன்
நவீன தமிழ் இலக்கியத்தில் பரிச்சயம் கொள்ளும் எந்தவொரு வாசகரும் சில படைப்பாளிகளை நிச்சயம் பெயரளவிலாவது தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வரிசையில் ஒருவர் தான் ஆ. மாதவன். இவரது படைப்புக்கள் மனித வாழ்வை யதார்த்தமாகப் பார்த்து மனிதநேயத்தோடு உரசிக் கொள்ளும் பாங்கை முன்னிறுத்துபவை.

திருவனந்தபுரத்து ராஜாங்கத்தில் 'சாலை - சாலைக்கம்போளம்' என்பது அருமை யான கதைக்களம். இது உள்ளத்தை ஈர்க்கும் பகுதி. இங்குள்ள மனிதர்கள், அவர்களது வாழ்வியல் அகம், புறம் சார்ந்த மோதல்கள் யாவும் திரும்பத் திரும்ப இழுபட்டுக் கதைக்களன்களாக விரிவு பெறும் அழகு மாதவனின் படைப்பாளுமையின் இயங்கு தளமாகும். இதுவே இவரை தனித்து அடையாளம் காட்டும்.

ஆர். கே. நாராயணுக்கு மால்குடி கற்பனைப் பிரதேசமாக இருந்தது. மாதவனுக்கு 'சாலை' நிஜப்பிரதேசம். அங்கு அமைந்த உயிர்ப்பு - இயக்கம், மனிதர்கள் - யாவும் படைப்பியல் கூறுகளின் சேர்மானமாகப் படைப்புகள் உள்ளன.

ஆ. மாதவனின் 'கடைத்தெருக் கதைகள்' மற்றும் 'மாதவன் கதைகள்' என்பவை ஆசிரியரின் சிறந்த சிறுகதைகள். 'கிருஷ்ணப் பருந்து' சிறந்த நாவல். திருவனந்தபுரத்தின் சாலையும் அதன் சூழலும் சித்திரிக்கப்படும் பாங்கு சிறப்பானது. மாதவனின் படைப்பாளுமை ஒரு நேர் கோட்டுப் பாணி வகையிலானது அல்ல. விமரிசன யதார்த்த மரபிலிருந்து முளை விட்டவர். ஆனால் வாழ்க்கை அனுபவம், இயற்கையைப் புரிதல், படைப்புத் தேடல் யாவும் மாதவனின் படைப்பாளுமையைச் செழுமைப்படுத்திக் கூர்மையான நுண்ணுணர்வுமிக்க கதைகளைப் படைக்கும் எழுத்தாளராகவும் உருமாற்றி உள்ளது.

சமூக அக்கறை, சமூக விமரிசனம் எந்தவொரு படைப்பாளியையும் உள்ளிருந்து இயக்கவேண்டும். அப்பொழுதுதான் படைப்புவெளி அதற்கேயுரிய தாக்கப் பின்னல்களையும் அழகியலையும் கொண்டு வரும். மாதவனின் படைப்பில் இவை மேலும் மேலும் சிறப்பாக வெளிப்பட்டு வருவதைக் காணலாம். மனிதப்பண்பின் இயல்புநிலை இயக்கம் முரண்கள் மோதல்கள் யாவும் சமூகநிலை சார்ந்து வெளிப் படுவதில் பல்வேறு உணர்ச்சி நிலைக் கடத்தல் சார்ந்ததாகவும் உள்ளது.

மாதவனின் படைப்புலகம் தொற்ற வைக்கும் அனுபவம் பல்வேறு உணர்ச்சிக் குமுறல்களின், வாழ்வை எதிர்கொள்ளும் பக்குவத்தின் ஏற்ற இறக்கம் சார்ந்ததாகவே உள்ளது. இருப்பினும் மனித இருப்புக் குறித்த தன்னளவிலான தத்துவ விசாரணையின் நீட்சியாகவும் புனைவு வெளி சுழன்றடிக்கின்றது. அதுவே தனக்கான வேகத்தையும் லயத்தையும் கண்டு கொள்கிறது. 'சாலைத் தெருவின் கதைசொல்லி' என்ற ஒற்றை நிலைக்கு அப்பால் மாதவனின் கவனம் 'முழுமை' குறித்த தேடல் சார்ந்த பயணம்.

நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் ஆ. மாதவன், நகுலன், நீல. பத்மநாபன் போன்றவர்கள் வெவ்வேறு படைப்புலக வெளியை நம் முன் நிறுத்துபவர்கள். ஆனாலும் வித்தியாசமான அனுபவப் பகிர்வாகவே அவை அமைந்து வருகின்றன. ஆ. மாதவனின் சிறுகதைகள் தமிழ்ப் பரப்பில் தனித்து வித்தியாசமான வெளிகளைக் காட்டுபவை.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com