அட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம்
தேவன் மனிதனாய் அவதரித்த சம்பவம்தான் கிறிஸ்துமஸ். இந்த கிறிஸ்துமஸ் விழா நாட்களில் அலங்கார மலர் வளையங்கள், பல வண்ணத் தோரண விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள், தீப வரிசைகள் - அதன் அழகைச் சொல்லவும் வேண்டுமா? இவற்றை முழுவதுமாக அனுபவிக்க வாருங்கள், அட்லாண்டா தமிழ் சபைக்கு!

கிறிஸ்து பிறந்த நற்செய்தியை அனைவருக்கும் அறிவிக்கும் வண்ணம் கிறிஸ்துமஸ் பாடல்களை வீடுதோறும் அவர்கள் அழைப்பிற்கிணங்கப் பாடிச் சந்தோசமாயிருக்கும் தருணம் இது. ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் மாலை நேரத்தில் சபை போதகர் பால்மர் பரமதாஸ் மற்றும் சபையார் சென்று வீடுகளில் கிறிஸ்துமஸ் பாடல்களைப் (Christmas Carols) பாடி, கிறிஸ்து ஏன் பிறந்தார் என்ற நற்செய்தியைக் கூறுவார்கள்.

சபையின் ஞாயிறு பள்ளி மாணவ மாணவியரின் தாலந்துகளையும் திறமைகளையும் வெளிக்கொணரும் நோக்கோடு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் (Youth & Children Christmas Service) டிசம்பர் 9ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

சபையின் பாடல் குழுவினர் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடும் நிகழ்சி (Christmas Choir Carols) டிசம்பர் 16ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு நடைபெறும். இதில் பங்கு பெற அனைவரையும் அழைக்கிறோம்.

குடும்பப் பாடல் ஆராதனை (Family Sing Song Service) நிகழ்ச்சி ஒவ்வொரு குடும்பத்தினரின் திறமைகளையும் இறைவன் அருளிய தாலந்துகளையும் வெளிப்படுத்தும் வண்ணமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் பக்திப் பாடல்களைப் பாடி இறைவனைப் போற்றும் நிகழ்ச்சி டிசம்பர் 23ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு அட்லாண்டா தமிழ் சபை தேவாலயத்தில் நடைபெறும்.

கிறிஸ்துமஸ் விழா கோலாகல நிகழ்ச்சிகளின் உச்சக்கட்டமாக டிசம்பர் 25ம் தேதி செவ்வாய் காலை 10:00 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெறும். அதில் Rev. பால்மர் பரமதாஸ் அவர்கள் விசேச செய்தி அளிப்பார்கள். மதியம் கிறிஸ்துமஸ் பல்சுவை விருந்து உண்டு. அனைவரும் வந்து பங்கு பெறுங்கள்.

வருடத்தின் கடைசி நாட்களாகிய (வியாழன், வெள்ளி, சனி) டிசம்பர் 27 முதல் 29ம் தேதிவரை தினமும் ஆலயத்தில் காலை 10:30 மணி முதல் மாலை 7 மணிவரை உபவாச ஜெபம் நடைபெறும். இதில் பங்கேற்று நம்மைச் சுத்திகரித்து அடுத்த வருடத்திற்குள் நுழைய ஆயத்தமாகுவோம்.

2018ம் வருடத்தை பழைய‌ ஆலயத்தில் தொடங்கிய நாம், இவ்வாண்டில் நமக்குக் கர்த்தர் கொடுத்த‌ புதிய ஆலயத்தில் முடித்து, புதுவருடத்தை நமது ஆலயத்தில் ஆரம்பிக்கும் வண்ணம் டிசம்பர் 31ம் தேதி திங்கள் கிழமை இரவு 10:30 மணிக்கு விசேசித்த காத்திருப்பு ஆராதனை (Watchnight Service) நடைபெறும். கடந்த வருடம் முழுவதும் காத்த இறைவனுக்கு வருடத்தின் கடைசி நிமிடத்தில் நன்றி செலுத்திவிட்டுப் புதிய ஆண்டை தேவனுடைய சன்னிதியில் தொடங்குவதுதான் இந்த ஆராதனையின் நோக்கம்.

எனவே இந்த வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் 31ம் தேதி திங்கள் கிழமை இரவு 10:30 மணி ஆராதனைக்குக் குடும்பமாக வாருங்கள்; 2019 புதிய வருடத்தை ஆலயத்தில் தொடங்கி ஆசீர்வாதம் பெறுங்கள்.

மேலும் விபரங்களைத் தென்றல் விளம்பரத்திலும் சபையின் இணையதளம் www.atlantatamilchurch.org மூலம் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com