அஸிஸியின் அற்புத ஞானி
அவர் அந்த குச்சியைக் கழுத்தின் அடியில் இடுக்கிக்கொண்டு இன்னொரு கையில் உள்ள குச்சியை வயலின்போல மேலும் கீழும் இழுத்தபடி, கண்மூடி மெய்மறந்து மெலிதாகப் பாடலானார்….

ஓ பிரபு!
உமது சமாதானத்தின் கருவியாய் என்னை மாற்றும்;
வெறுப்பிருக்கும் இடத்தில் நான் விதைக்கட்டும் அன்பை;
புண்பட்ட மனத்தில், மன்னிப்பை;
பிரிவுற்ற இடத்தில், ஒருமையை;
ஐயம் நிலவுமிடத்தில், விசுவாசத்தை;
நிராசையுற்ற இடத்தில், நம்பிக்கையை;
இருள்மிக்க இடத்தில், ஒளியை;
துயருற்ற இடத்தில், சந்தோஷத்தை.

ஓ தெய்வீக இறையே!
நான் இவ்வாறிருக்க அருள்வாய்...
ஆறுதல் கேட்பவனாக அல்ல, கொடுப்பவனாக;
புரிதலைக் கோருபவனாக அல்ல, புரிந்துகொள்பவனாக;
நேசத்தை வேண்டுபவனாக அல்ல, நேசிப்பவனாக;
ஏனென்றால்
கொடுப்பதில்தான் நாம் பெறுகிறோம்,
மன்னிப்பதில்தான் மன்னிக்கப்படுகிறோம்,
மரிப்பதில்தான் நித்திய ஜீவிதம் பெறுகிறோம்.


நானும் மெய்மறந்து ரசித்தபடி அவரைப் பின்தொடர்ந்து பாடிக்கொண்டே நடக்கிறேன். நான் அவருடைய 12 சீடர்களில் ஒருவன் இத்தாலிய பெருந்தனக்காரர் ஒருவருக்கும் ஃபிரெஞ்சுப் பெண்மணி ஒருவருக்கு செல்வ மகனாக இத்தாலியின் அஸிஸியில் பிறந்தவர் இவர். ஃபிரான்செஸ்கோ என வீட்டில் அழைக்கப்பட்ட இவர் புனித ஃபிரான்ஸிஸ் ஆகும் முன்னர்...

அவருடைய இளமையை ஒரு வார்த்தையில் விவரிக்க வேண்டுமானால் "ராஜ போகம்" என்று சொல்லலாம். ஒரே மகன், செல்லமாய் வளர்ந்தவன். அவருக்கும் அவர் குடும்பத்தார்க்கும் அஸிஸிப் பட்டணத்தில் நல்ல செல்வாக்கு. வாரி இறைக்க ஏராளமான பணம். ஃபிரான்செஸ்கோ கலா ரசிகராகவும், மதுக் களியாட்டங்களில் நாட்டம் கொண்டவராகவும், பாடுவதிலும், நடனமாடுவதிலும் தேர்ந்தவராகவும் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கையுடன் கவலையற்றவராக வாழ்ந்து வந்தார்.

ஓர் இரவு, மதுக் களியாட்டத்தில் நேரமாவது தெரியாமல் தாமதமாக வீடு திரும்புகிறார். ஒரு ராப்பிச்சைக்காரரின் அழுகுரல் கேட்கிறது. தன் கையில் இருந்த அத்தனை பணத்தையும் கொடுத்த இளகிய மனம் படைத்தவர்தான் ஃபிரான்செஸ்கோ. சிறுவயது முதலே 'Knight' என்ற வீர்த்திருமகனாகத் திகழ விரும்பி, குதிரையேற்றம், வாள் சண்டை எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினார். தன் தந்தையைப் போலத் துணி வியாபரி ஆக ஒருபோதும் விரும்பவில்லை.

1202 வருடம் அஸிஸிக்கும் அருகிலுள்ள பெருஜியாவிற்குமிடையே போர் நிகழ்ந்த போது, பெற்றோர் சொல்லைக் கேட்காமல், தம் கனவை நனவாக்கப் புறப்பட்டார். போர்க் கைதியாகச் சிறைப்பட்டார். நிலவறைச் சிறையில் அடைக்கப்பட்டு மிகுந்த வேதனை அனுபவித்தார். அங்கே உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடும் காய்ச்சலால் அவதியுற்றபோது கர்த்தரை நோக்கிப் பிரார்த்தித்தார். அங்குதான் தனக்குக் கர்த்தரின் தரிசனம் கிடைத்தாகப் பின்னாளில் அறிவித்தார்.

அவரை செல்வந்தர் மகனென்று அறிந்த பெருஜியா அரசு, அவரை விடுவிக்கப் பெரிய தொகையைப் பிணையத் தொகையாகக் கேட்டது. நீண்ட நாள் அலைகழித்த பின், 1203 வருடம் விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து திரும்பிய நாள்முதல் கடவுளைத் தொழுபவராகவும், தனிமை விரும்பியாகவும் மாறியிருந்தார் அவர். முன்போல் அவர் நண்பர்களைத் தேடவில்லை, சுகத்தை நாடவில்லை.

இவ்வாறு நாட்கள் கழிந்தன. ஒருநாள் அவர் குதிரையில் சென்றுகொண்டிருந்த போது ஒரு தொழுநோயாளியைக் கண்டார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் என்றால் அவர் முகம் சுளித்திருப்பார். இன்றைக்கு இருக்கும் இவர் வேறொருவர். தொழுநோயாளியை ஆதரவாய் அணைத்து முத்தமிட்டார். அம்மனிதரை ஏசு கிறிஸ்துவையே காண்பதுபோல மிகக்கனிவோடு கண்டார். அவர் இதயத்தில் சொல்லொணா மகிழ்ச்சி நிறைந்து வழிந்தது. இதுவே தம் வாழ்வின் நோக்கமென அறிந்து தெளிந்தார்.

அது மட்டுமல்ல, கர்த்தர் படைத்த அனைத்து உயிர்களையும் - ஆண், பெண், விலங்குகள், பறவைகள் - எல்லாவற்றையும் தமது உடன்பிறப்புகளாகவே அவர் எண்ணலானார்.

அந்த இருபதாம் அகவையில், அவர் ஏசு கிறிஸ்துவை இரட்சராக ஏற்று, சமாதன சுவிஷேத்தை அறிவிப்பவராக, தொழுநோயாளிகளுக்குச் சேவகம் செய்பவராகச் சுற்றித் திரிந்தார்.

அவருடைய 12 சீடர்களில் நானும் ஒருவன். ஒருமுறை சான் டாமியானோ தேவாலயத்தைக் கட்ட தேவ ஆவியால் உந்தப்பட்டார். கையில் பணம் கிடையாது. என்ன செய்தார் தெரியுமா? அவரது தந்தையார் சந்தையில் விற்க வைத்திருந்த துணியை விற்றுவிட்டார்! கோபம் கொண்ட தந்தையார் பிஷப்பிடம் முறையிட்டார். புனித ஃப்ரான்ஸிஸ் துணி விற்ற காசைத் திருப்பிக் கொடுத்ததோடு, தந்தையிடமிருந்து வரவிருந்த சொத்தையும் மறுதலித்துவிட்டார். தான் உடுத்திருந்த ஆடையைக் கந்தலாக்கிக்கொண்டு, ஊர்மக்கள் முன் "கர்த்தரே என் தந்தை" எனப் பிரகடனப்படுத்தி, வறுமை நோன்பை விரும்பி ஏற்றுக் கொண்டார்.

இதோ! இன்னும் அவர் பாடிக்கொண்டுதான் இருக்கிறார்.

ஓ பிரபு!
உமது சமாதானத்தின் கருவியாய் என்னை மாற்றும்;
வெறுப்பிருக்கும் இடத்தில் நான் விதைக்கட்டும் அன்பை...


அவரது பாடல் உலகின் எல்லா மூலைகளிலும் எதிரொலிக்கின்றது.

அவர் பாடலைப் பட்சிகளும், பிராணிகளும் வந்து அமர்ந்து ரசிக்கின்றன. பட்சிகளுக்குத் தேவசெய்தி சொன்னவர் என்ற பட்டப் பெயர் அவருக்குச் சும்மாவா வந்தது!

இ. இளவரசி,
சிகாகோ

© TamilOnline.com