ஆப்பிள் படுத்தும் பாடு (அத்தியாயம்-2)
'கீதா அத்தை, ரமேஷ் மாமா' என்று அரவிந்தும் அனுவும் உள்ளே ஓடி வந்தார்கள். இவ்வளவு தூரம் வந்த பயணக்களைப்பு கொஞ்சம்கூட அவர்களிடம் இல்லை. கீதா தன் அண்ணி பாலாவிற்கு வருகை சொல்ல, அவர் அருணைக் கட்டிக் கொண்டார். "ஓ, அருண்! சின்னப் பையனாக இருந்தே, எவ்வளவு வளர்ந்து விட்டாய்!" என்று அருணைப் பார்த்து வியந்தார் பாலா.

"ஆமாம் அண்ணி, அரவிந்தும் அனுவும் கூடத்தான்" என்றார் கீதா.

பாலா குழந்தைகள் பிறந்தபிறகு வரும் முதல் பயணம் இது. அவர் மிகவும் இளைத்திருந்தார்.

"நீங்க ரொம்ப இளைச்சிட்டீங்க அண்ணி" என்றார் கீதா. அதே சமயம் அருண் அரவிந்த், அனுவுடன் மாடியில் தன் அறைக்கு ஓடினான். பக்கரூவும் உடன் ஓடியது.

"அரவிந்த், அனு, முதல்ல உங்க பெட்டிகளை உள்ளே வையுங்க" என்றார் மாமா அஷோக். "அத்தைகிட்ட வம்பு பண்ணாதீங்க. உங்க அம்மாவைவிட ஸ்ட்ரிக்ட் அவங்க."

"நீ கொஞ்சம்கூட மாறவேயில்லை அண்ணா. சின்ன வயசுல இருந்தது போலவே இப்பவும் இருக்க" கீதா கிண்டல் அடித்தார். "அண்ணி, இவனுக்கு நாங்கள் டென்ஷன் அஷோக் என்று பட்டப் பெயர் வச்சிருந்தோம். எப்பப் பார்த்தாலும் பரபரவென்று ஏதாவது செய்வான். இவனைப் பத்தி நினைச்சே எங்க அப்பாவும் அம்மாவுக்கும் எப்போதும் டென்ஷன்."

"சகோதிரியே, உனக்கும் ஒரு பட்டப் பெயர் உண்டு. சொல்லட்டுமா?" என்று அஷோக் பதில் கொடுத்தார். அண்ணி பாலா அமைதியாக இருந்தார்.

"அப்படியா? எனக்கு ஞாபகமில்லையே" என்றார் கீதா.

"உனக்குன்னு ஒரு கருத்து இருந்தா வேற யாரையும் பேசவே விடமாட்ட. பக்கத்துல வரதுக்கே பயப்படுவோம்" என்றார் கிண்டலாக அஷோக்.

அதுவரை அமைதியாக இருந்த ரமேஷ் இடையே புகுந்தார். "அப்பவே அப்படித்தானா?" என்று ரமேஷ் கேட்டார்.

ரமேஷிற்கு அண்ணன் தங்கை சண்டையில் உள்ளே புகுந்து சீண்ட மிகவும் பிடிக்கும்.

"எங்கே நம்ம குழந்தைங்க? அருண் பேஸ்பால் கத்துக் கொடுப்பேன்னு பிடிவாதமா இருக்கான்" என்றார் கீதா. அப்போது மாடிப்படியில் சத்தம் கேட்டது. அருண், அரவிந்த், அனு, மற்றும் பக்கரூ, ஆளுக்கு ஒரு விளையாட்டுச் சாமானோடு வந்தார்கள். அனு இரண்டு கைகளிலும் கை உறைகளை அணிந்திருந்தாள். அதைப் பார்த்து அஷோக், "அனுக்குட்டி, இங்கையுமா கிரிக்கெட்? கொஞ்சம் பேஸ்பால் கத்துக்கோயேன்" என்றார்.

"முடியாது, நான் கிரிக்கெட்தான் விளையாடுவேன்" என்றாள் அனு. அருண் அப்பாவைப் பார்த்து, "அப்பா, அரவிந்த் கிரிக்கெட்தான் முதல்ல வந்திச்சுன்னு சொல்றான். பேஸ்பால் அதைப் பார்த்துதான் காப்பி அடிச்சாங்களாம். உண்மையா அப்பா?"

ரமேஷ் அஷோக்கைப் பார்க்க, அவர் புன்னகைத்தார். "இல்லை அருண், பேஸ்பால்தான் முதல்ல வந்தது. இவங்க கிரிக்கெட்தான் காப்பி" என்று சீண்டினார் ரமேஷ்.

"அதெல்லாம் இல்லை, எங்க கிரிக்கெட்தான் ஃபர்ஸ்ட்" என்று அரவிந்தும் அனுவும் ஒன்று சேர்ந்து கத்தினார்கள். "நாங்க இப்ப அருணுக்கு சொல்லித் தரப் போறோம்."

"இப்ப வேண்டாமே, குட்டி" என்று அம்மா பாலா சொல்லிப் பார்த்தார். அனு கேட்பதாக இல்லை. அஷோக் கீதாவைப் பார்க்க, அவர் பதிலுக்கு ரமேஷைப் பார்த்தார். பெரியவர்கள் அனைவருக்கும் விளையாட்டு வேண்டாமே என்று தோணியது.

கீதா "அனு குட்டி, அரவிந்த், அருண். நீங்க எல்லோரும் முதல்ல குளிச்சிட்டு சாப்பிடலாமே. நான் பலவித சுவையான சாப்பாடு பண்ணியிருக்கேன். சூப்பரா இருக்கும்" என்றார்.

"எங்க அம்மாவோட சாப்பாட்டைவிடவா?' என்று கேட்டாள் அனு. கீதா, பாலாவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, "ஆமாம், நான்தான் டாப் குக்" என்றார். பாலா புன்னகைத்தபடி உள்ளே சென்றார். "அரவிந்த், அனு, அஷோக். சீக்கிரமா ரெடி ஆகுங்க. அத்தை சாப்பாட்டை ஒரு கை பார்க்கலாம்" என்றார்.

அனுவும் அரவிந்தும் அம்மா சொன்னவுடன் ஒரு ரோபோ போலச் செயல்பட்டார்கள். கீதாவுக்கும் ரமேஷுக்கும் தாங்கள் ஒரு மகனை வைத்துக்கொண்டு இத்தனை அவஸ்தைப்படும் போது, இவ்வாறு அந்த இரண்டு குழந்தைகளும் வம்பு பண்ணாமல் நடந்து கொள்ளவது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

"வாவ்! அண்ணி, எப்படி வளர்த்திருக்கீங்க குழந்தைகளை! சொன்ன உடனேயே கேட்டுட்டாங்களே!" என்று வியந்தார் கீதா.

"எல்லாம் வெளியிடத்துல தான் இந்த மாதிரி. எங்க வீட்டுக்கு வந்து பாருங்க. ஒண்ணுமே கேட்காதுங்க" என்று சொல்லிச் சிரித்தார் பாலா.

பாலாவும் அஷோக்கும் குளித்து ரெடியாவதற்கு உள்ளே சென்றார்கள். ரமேஷும் கீதாவும் சாப்பாட்டு மேஜையைத் தயார் செய்தார்கள். அருண் தன்பாட்டிற்கு ஒரு புஸ்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க உட்கார்ந்தான். அம்மா கீதா அவ்வப்போது அருணை வேலை வாங்கிக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் அண்ணன் அஷோக் குடும்பத்தினர் அனைவரும் புத்துணர்ச்சியோடு வந்தார்கள்.

பாலா ஒரு சின்ன பிரார்த்தனை சொன்னவுடன் அனைவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்திற்ப்கு பாத்திரங்களின் ஓசை தவிர ஒரு சத்தமும் கேட்கவில்லை. அனைவரும் சாப்பாட்டு ருசியில் மயங்கிவிட்டார்கள். எல்லோரும் நன்றாகச் சாப்பிட்டார்கள். அஷோக்கும் ரமேஷும் பாத்திரங்களைக் கழுவி வைக்க உதவினார்கள். குழந்தைகளின் அமர்க்களச் சத்தம் ஆரம்பித்தது. பெரியவர்களும் பேசத் தொடங்கினார்கள்.

"என்ன, ஆப்பிள் பை சாப்பிட இடம் இருக்கா?" என்று சொல்லிக்கொண்டே கீதா அதை இருந்து எடுத்து வந்தார். "ரொம்ப நல்லா இருக்கு கீதா" என்று பாலா சொன்னார்.

"கீதா, ஆப்பிள் ஏதாவது மிச்சம் இருக்கா?" என்று பாலா கேட்க, கீதா பழக்கூடையிலிருந்து பளபளவென்று சிகப்பான ஆப்பிள் ஒன்றை எடுத்து பாலாவிடம் கொடுத்தார்.

"அம்மா, இது கிரிக்கட் பந்துபோல இருக்கே" என்று அரவிந்த் ஜோக் அடித்தான்.

(தொடரும்)

கதை: ராஜேஷ்
படம்: ஷான்

© TamilOnline.com