அரங்கேற்றம்: சாதனா மாதேஸ்வரன்
ஜூன் 30, 2018 அன்று செல்வி சாதனா மாதேஸ்வரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் மிசௌரி, செயின்ட் லூயியில் உள்ள கிளேய்டன் உயர்நிலைப்பள்ளி அரங்கில் நடைபெற்றது. சூர்யா நிகழ்த்து கலைகள் அமைப்பின் கலை இயக்குனரான குரு பிரசன்னா கஸ்தூரி அவர்களிடம் 9 ஆண்டுகளாக சாதனா நாட்டியம் பயின்று வருகிறார். மார்க்கத்தில் அமைந்திருந்ததோடு இந்த அரங்கேற்றம் மகளிருக்கு அதிகாரம் என்ற கருத்தில் அமைந்த நாட்டிய நாடகம் ஒன்றையும் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் மகளிருக்குக் கல்வி தருவதால் சமுதாயம் உயர்வதோடு, அமைதியும் சமத்துவமும் உண்டாகின்றன என்ற கருத்தை வலியுறுத்த இந்த நாட்டிய நாடகத்தைச் சாதனா திறம்பட உருவாக்கியிருந்தார். சமுதாயமே எதிர்த்தபோதும் ஒரு தாயார் பல தியாகங்களுக்கு இடையே தனது பெண் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புவதை மையக்கருவாகக் கொண்டிருந்தது இந்த நாடகம். அவள் தன் மகளை அனுப்பியதோடு அல்லாமல், மற்றப் பெண்களையும் பார்த்து, "தோழியரே, விழித்தெழுங்கள், உங்கள் உரிமைகளுக்காகப் போரிடுங்கள்" எனக் கூறுகிறாள்.

சாதனா தனது கருத்துக்குச் செயல்வடிவம் தரும் பொருட்டாக, நோபெல் பரிசு வென்றவரும் கல்வி மேம்பாட்டுக்குப் பாடுபடுவருமான மலாலா யூசஃப்சாய் தொடங்கி நடத்திவரும் 'மலாலா நிதி' என்ற அமைப்புக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட 1800 டாலரை வழங்கினார்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com