அரங்கேற்றம்: கிஷோர் ஐயர்
ஆகஸ்டு 18, 2018 அன்று லெமான்ட், இல்லினாயில் உள்ள ஹிந்துக் கோயில் அரங்கத்தில் செல்வன் கிஷோர் ஐயரின் மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றது. திரு நெய்வேலி நாராயணன் அவர்களின் சிஷ்யனும், மணியன்-லட்சுமி தம்பதியினரின் மகனும் ஆவார் கிஷோர். நிகழ்ச்சிக்குத் திருமதி ஹேமா ராஜகோபாலன் தலைமை வகித்தார். திரு டெல்லி சுந்தர்ராஜன் அவர்கள் இசைக் கச்சேரியில் இந்த அரங்கேற்றம் நடைபெற்றது. திரு முராரியின் வயலினும், திரு ஆதம்பாக்கம் சங்கரின் கடமும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டின.

கிஷோரின் சகோதரி செல்வி லாவண்யா ஐயர் கடவுள் வணக்கம் பாடினார். சஹானா ராகம், ஆதி தாளத்தில் வர்ணத்துடன் நிழ்ச்சி ஆரம்பித்தது. அடுத்து கௌரி மனோஹரியில் "குருலோக" கீர்த்தனையும், ஹரிகாம்போஜியில் "நேனேந்து" கீர்த்தனையும் வித்வான் பாட, கிஷோர் இசைவாக மிருதங்கம் வாசித்தான். பூர்விகல்யாணி ராக ஆலாபனைக்கு வயலின் அழகாக ஒத்திசைத்தது. கிஷோர் "மரிலேரகதி" மிஸ்ரசாபு தாளம், "சரஸ ஸாமதான" ஆதிதாளப் பாடல்களுக்கு வித்வான்களுடன் சேர்ந்து ஆனந்தமாக வாசித்தான். தோடி ராகத்தில், ஆதி தாளத்தில் "கார்த்திகேய காங்கேய" கீர்த்தனைக்குக் கிஷோர் தனி ஆவர்த்தனம், கடம் சங்கர் அவர்களுடன் வாசித்தது துல்லியமாக இருந்தது. அடுத்து வந்த துக்கடா பாட்டுக்கள் விறுவிறுப்பாக இருந்தன. நிகழ்ச்சி "ஏறுமயில்" திருப்புகழுடனும், மங்களத்துடனும் நிறைவடைந்தது.

கிஷோரின் அரங்கேற்றம் மிகவும் நிறைவாக இருந்தது. நன்றி உரையுடன் விழா நிறைவுற்றது. குரு திரு. நாரயணன் கிஷோருக்கு மிருதங்கம் பரிசளித்தார்.

ருக்மிணி பாண்டுரங்கன்,
சிகாகோ, இல்லினாய்

© TamilOnline.com