வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழா
2018, செப்டம்பர் 8 அன்று, தென் கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் ஐந்தாம் ஆண்டு தேர்த்திருவிழா அருட்தந்தை. ஆல்பர்ட் பிரகாசம் நிர்வகிக்கும் டிவைன் சேவியர் பங்கு தேவாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மாலை மூன்று மணிக்கு மரியாச்சி பேண்டுக் குழுவினர் இசைமழை பொழிய, வந்திக்கதக்க ஆயர். ஜோசஃப் V. பிரென்னன் அவர்களுக்கு அமெரிக்க இந்திய நடனத்துடன் (Aztec dance), மலர் தூவி, சந்தனம் குங்குமம் மங்கலத் திலகமிட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழா திரு. மைக்கேல் ஜேசுதாஸ் வரவேற்புரையுடன் துவங்கியது. அன்னையின் திருவுருவக் கொடியானது ஆயர் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டு ஏற்றப்பட்டது. மாதாவின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவம் தாங்கிய தேர்பவனி திருச்செபமாலை, புகழ்ப்பாடல்கள் ஒலிக்க, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தேவாலயத்தை அடைந்தது.

மாலை 5 மணிக்கு, ஆயர் அவர்களுக்கும், அருட்தந்தையர்களுக்கும், பக்தர்களுக்கும் பரதநாட்டியம், பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மாதாவின் மகிமைக்காகவும், நன்றியறிதலாகவும், பக்தர் நலனுக்காகவும் ஆடம்பர திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

வந்திக்கதக்க ஆயர் தமது உரையில், அன்னை மரியாள் பிறக்கும்போதே ஆண்டவரின் தெய்வீக அருள் அவரோடு இருந்தது. இறைவன் அவரைக் கருவிலேயே தேர்ந்தெடுத்து, தமது ஒரே பேரான மகனைப் பெற்றெடுக்கும் பாக்கியத்தை அளித்தார். அவரை உலகிற்கு கொண்டுவந்த, ஆரோக்கிய அன்னையாக அருள் பாலிக்கும் மரியாவைப் போற்றுவோம். நம்மை அவள் பாதுகாப்பாள் என்று நம்பிக்கை ஊட்டினார்.

தொடர்ந்து, இறைமக்கள் காணிக்கை பவனி நடைபெற்றது. ஏழை எளியோருக்கு உதவும் பொருட்கள் அதில் இடம்பெற்றன. பாடல் குழுவினரின் பாடல்கள் திருப்பலியையும், திருவிருந்தையும் அலங்கரித்தன.

திருத்தைலம் பூசுதல் நிகழ்வின்போது பற்பல புதுமைகள் நடந்தன. குறிப்பாக, ஃபிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த, கேன்சர் நோயாளி ஒருவர், வார்த்தைகளால் விவரிக்க முடியாத மன அமைதியைப் பெற்றதாக தெரிவித்தார். திவ்ய நற்கருணை ஆசீருடன் சுமார் 7 மணிக்குத் திருப்பலி நிறைவடைந்தது.

இறுதியாக திருப்பலியைச் சிறப்பித்த வந்திக்கத்தக்க ஆயர், அருட்தந்தையர் ஆல்பர்ட் பிரகாசம், சாமி துரை, ஸ்டீஃபன் விபிளான்க், ஜோசப் தாஸ், சுந்தரம், அந்தோணி காசிபர், பெர்னார்ட், ஜான் பீட்டர், ஜோசஃப் ராஜ், சகாய ராஜ், சேவியர் டிசூசா, லூர்துசாமி, ஜெயராஜ் ஜோசப் வில்லியம் ஆகிய ஊழியர் சபை குருக்கள், மற்றும் தன்னார்வத் தொண்டர்களுக்கும், திருவிழாவில் பங்குபெற்ற அனைவருக்கும் திரு. ஜோசப் சவுரிமுத்து நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து, மாதாவின் மகிமையை எடுத்துரைக்கும் சிறார்களின் நாட்டியங்கள், புகழ்ப் பாடல்கள், பரத நாட்டியம், பறையடி, பாலிவுட் நடனம் ஆகியவை மேடையேறின.

ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டதன் மூன்றாம் ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில், வந்திக்கத்தக்க ஆயர் அவர்களுக்கு நினைவுப் பரிசை, நிறுவுனர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் திரு. சேவியர் பெரியசாமி வழங்கினார். கலைநிகழ்ச்சிகள் அனைத்தையம் திருமதி. ஆக்னஸ் பர்னபாஸ் மற்றும் பிரிட்டோ ஜீசஸ் தொகுத்து வழங்கினர்.

இறுதியாக, அன்னையின் திருவுருவக் கொடிஇறக்கப்பட்டு, திருவிழா நிறைவு செய்யப்பட்டது. அருட்தந்தை ஆல்பர்ட் பிரகாசம் அனைவருக்கும் நன்றி கூறி ஆசீர் வழங்கினார்.

முன்னதாக, ஆகஸ்ட் 30ம் நாள் முதல், செப்டம்பர் 7ம் நாள்வரை அன்னையின் அருள் வேண்டி சிறப்பு வேண்டுதல் நவநாள், தொலைபேசி வழியாக இரவு 8 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வுகள் அனைத்தையும், திரு ராபர்ட் முடியப்பன் மற்றும் திரு கபிரியேல் பெரியசாமி முகநூலில் நேரலை ஒளிபரப்புச் செய்தனர். இதன் தொலைக்காட்சி வடிவம் மாதா டிவியில் நவம்பர் மாதம் ஒளிபரப்பு செய்யப்படும்.

பின்குறிப்பு: பிரதி மாதம், முதல் சனிக்கிழமை அன்று, அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவை மகிமைப்படுத்த செபமாலையும், திருப்பலியும் தமிழில் நடை பெறுகின்றது.

விபரங்களுக்கு:
Email: velankannisocal@gmail.com
Phone: 562-972-5981
வலைமனை: www.velankannisocal.org

ஜோசப் சவுரிமுத்து,
லாஸ் ஏஞ்சலஸ்

© TamilOnline.com