அரங்கேற்றம்: சஞ்சனா சங்கர்
செப்டம்பர் 8, 2018 அன்று செல்வி சஞ்சனா சங்கரின் வீணை அரங்கேற்றம் மாசசூஸட்ஸ் மாநிலம் ஆன்டோவரில் உள்ள ஸ்ரீ சின்மயா மாருதி ஆலயத்தில் நடந்தேறியது. பதினாறு வயதான சஞ்சனா, லெக்ஸ்சிங்டன் உயர்நிலைப்பள்ளியின் இறுதி ஆண்டு மாணவி.

சஞ்சனா பைரவியில் "விரிபோணி" வர்ணத்தில் ஆரம்பித்துப் பல ராகங்களில் பலமொழிப் பாடல்களை லாகவமாகக் கையாண்டார். அன்னமாச்சார்யாரின் "பாவயாமி கோபால" மற்றும் ஆதி சங்கரரின் மகிஷாசுரமர்த்தினி மிகவும் நிறைவாக இருந்தது. பாரதிதாசனின் "துன்பம் நேர்கையில் யாழெடுத்து" என்ற பாடல் செவிகளில் அமுதைப் பொழிந்ததது. ஆனந்தபைரவியில், சியாமா சாஸ்திரியின் "மரி வேரி" வாசித்த அதே கவனத்துடன் துள்ளுநடைப் பாடல்களை காபி ராகத்திலும், யமுனா கல்யாணியிலும் வழங்கினார். முத்தையா பாகவதரின் "ஜலந்தரா" பாடலுக்குக் கல்பனா ஸ்வரங்களும் நிரவலும் அழகாகச் செய்தார். விரிவான ஆலாபனையில் தியாகராஜரின் "கலியுக கன்டே" வாசித்தார்.

சஞ்சனா உபாசனா பாடசாலை இசைப்பள்ளி மாணவி. குரு ரேவதி ராமசுவாமி உருவாக்கி இசையமைத்த சவாலான ராகம், தானம், பல்லவியை லாகவமாக வாசித்துக் கைதட்டல் பெற்றார். கம்பீரமான தோடி ராகத்தோடு மென்மையான பிருந்தாவனியைத் தவழவிட்டார். "கோவிந்தம் முகுந்தம் பஜே" என்ற பல்லவியை மூன்று காலத்திலும் வாசித்தபின், பின் ராகமாலிகையாக சஹானா, சாருகேசி, ஹம்ஸாநந்தி, ஆரபி, கானடாவில் வழங்கினார். லால்குடியின் மதுவந்தி ராகத் தில்லானாவுக்குப் பின் புன்னாகவராளியில் மகிஷாசுரமர்த்தினி வாசித்து, மத்யமாவதியில் "லக்ஷ்மி பாரம்மா" பாடலுடன் நிறைவு செய்தார்.

பக்கம் வாசித்த மாலி (மிருதங்கம்), ரவி அய்யர் (வயலின்) ஆகியோர் அன்றைய நிகழ்ச்சிக்கு மெருகுகூட்டினர்.

சஞ்சனா சிசுபாரதியில் தமிழ் பயின்றுள்ளார். நாடகங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். வீணை வித்வான் ராம் நாயுடு சஞ்சனாவின் திறனைத் துல்லியமாக விமர்சித்ததோடு, குரு ரேவதி ராமசாமியைப் பாராட்டினார். பின்னர் பேசிய திரிவேணி நாட்டிய குரு நீனா குலாதி "சஞ்சனா ஒரு திறமையான மாணவி. சஞ்சனாவின் நடன அரங்கேற்றத்தை ஆகஸ்ட் 2019ல் ஆவலுடன் எதிர்பார்க்கிரேன்", என்றார்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் மஹதி ஆத்ரேயா. தோழியர் நித்யா ஆர்ய ஷோம்யஜூலா, ஸ்வேதா மெருவா ஆகியோரும் சஞ்சனாவைப் பாராடிப் பேசினர். குரு ரேவதி பேசுகையில் சஞ்சனா தன் வயதுக்கு மேற்பட்ட திறனும் ஞானமும் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். கண்ணன் புகைப்படங்களை எடுத்தார். சஞ்சனாவின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

உமா நெல்லையப்பன்,
லெக்ஸிங்டன், மாசசூஸட்ஸ்

© TamilOnline.com