'யாதவா மாதவா' நாட்டிய நிகழ்ச்சி
செப்டம்பர் 15, 2018 அன்று இந்தியன் க்ளாசிகல் ஆர்ட்ஸ் அகாடமி மற்றும் தீபா மகாதேவனின் திருச்சிற்றம்பலம் நாட்டியப்பள்ளி இணைந்து நவீன் நாதனின் நிர்வாக இயக்கத்தில் மதுரை ரா. முரளீதரனின் 'யாதவா மாதவா' என்ற ஸ்ரீகிருஷ்ணர் குறித்த நாட்டிய நிகழ்ச்சியை, ஃப்ரீமான்ட் ஒலோனி கல்லூரி ஜாக்சன் தியேட்டரில் அரங்கேற்றினர். நிகழ்ச்சிக்கு விரிகுடாப்பகுதியின் லயத்வனி டான்ஸ் அகாடமி (கலை இயக்குனர் - ஸ்னிக்தா வெங்கடரமணி) மற்றும் எக்ஸ்ப்ரெஷன்ஸ் (கலை இயக்குனர் - ஸ்ரீவித்யா ஈஸ்வர்) நாட்டியப் பள்ளி மாணவர்கள் துணைபுரிந்தனர்.

கம்சனின் ராஜசபையில் அவருடைய தங்கை தேவகியின் அறிமுகத்துடன் தொடங்கி, அசரீரி வாக்கினால் பயந்துபோய் சொந்தத் தங்கையையே கொல்லத் துணிந்த கம்சன், மனமிறங்கி அவளைச் சிறை வைக்கும் காட்சி அழகாக நாட்டியத்தில் வழங்கப்பட்டது. வசுதேவர் இரவோடு இரவாகக் கொட்டும் மழையில், நதி வழிகொடுக்க, தெய்வக்குழந்தையை யாதவர் குடியிருப்பிலுள்ள மற்றொரு குழந்தைக்கு ஈடாக மாற்றிவைத்து, மீண்டும் சிறைக்கு வரும்வரையான காட்சிகள், பின்னணி இசை எல்லாமே அற்புதம். கிருஷ்ணனின் பால லீலைகள், காளிங்க நர்த்தனம், கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடிப்பது ஆகியவை வெகு அழகு. கம்சனை வதைத்த பின், தந்தை உக்கிரசேனரைச் சிறையிலிருந்து மீட்டு அரியணையில் அமர்த்திக் கிருஷ்ணர் அழகு பார்க்க, நாட்டிய நிகழ்ச்சி சுபமாக நிறைவடைந்தது.

மதுரை முரளீதரன் நடனமாடிய நாட்டியமணிகளின் உழைப்பைப் பாராட்டிப் பேசினார். இறுதியாக, தீபா மகாதேவன் நன்றி தெரிவிக்க, நிகழ்ச்சி நிறைவெய்தியது.

வெங்கடேஷ் பாபு

© TamilOnline.com