கலிபோர்னியா: பெரியார் 140வது பிறந்தநாள் விழா
செப்டம்பர் 22, 2018 அன்று சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி முற்போக்கு அமைப்புக்கள் பெரியார் ஈ.வே. ராமசாமி அவர்களின் 140வது பிறந்தநாள் விழாவைக் கூப்பர்ட்டினோ நகரில் கொண்டாடின. சமூக சீர்திருத்தக்கார்களில் ஒருவரான பெரியார் அவர்களின் பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணுரிமை, சாதி அழிப்பு போன்றவை குறித்து கருத்தரங்கமும், கேள்வி-பதில் அமர்வும் நடைபெற்றன.

சிறப்புப் பேச்சாளர் டாக்டர் வ. கீதா இந்தியாவிலிருந்து பல்லூடக அமைப்பின் வழி 'பெரியார் - பொதுவாழ்க்கையின் ஒரு முன்மாதிரி' என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது எழுத்துக்கள் தமிழ், ஆங்கிலம் தாண்டி மற்ற இந்திய மொழிகளிலும், குறிப்பாக இந்தியிலும் மொழி பெயர்க்கபட்டு வருவது வரவேற்கத்தக்க வளர்ச்சி என்று அவர் குறிப்பிட்டார்.

சங்ககாலத்திலேயே தமிழ் மொழியும், மக்களும் முற்போக்குக் கொள்கைகளையும் அறவழியையும் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட தமிழ்நாடு பெரியார் போன்ற சமூக சீர்திருத்தத் தலைவர்களை உருவாக்கியதில் அதிசயம் இல்லை என்று மொழி ஆய்வாளரும் வரலாற்று ஆசிரியருமான முனைவர். மா.சோ. விக்டர் குறிப்பிட்டார். தொடர்ந்து, உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்ற (INFITT) நிறுவன உறுப்பினரும், வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற முன்னாள் தலைவரும், மொழியியல் செயல்பாட்டாளருமான திரு. மணி மணிவண்ணன் சிறப்புரை ஆற்றினார். பெரியாரின் தீவிர சமூகநீதிக் கொள்கைகள் தமிழத்தில் மிகப்பெரிய மாற்றங்களை மக்களின் மனதில் ஏற்படுத்தின என்று அவர் கூறினார்.

கேள்வி-பதில் நேரத்தில், பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை, பெண் விடுதலை, பெரியாரின் கொள்கைகளை உண்மையாகப் பின்பற்றுபவர்கள் யார் என்பது போன்ற கேள்விகளை எழுப்பினார்கள்.

நிகழ்ச்சியை திரு. செல்வராஜ் தொகுத்து வழங்க, திரு. சைதன்யா திவாத்கர் வரவேற்றுப் பேசினார். பேச்சாளர்களை திரு. கேசவா, திருமதி. இராஜலக்ஷ்மி, திரு. அசுதோஸ் ஆகியோர் அறிமுகப்படுத்தினர். திருமதி. சாந்தி கதிரேசன் நன்றியுரை வழங்கினார். அம்பேத்கர் கிங் படிப்பு வட்டம் அசோஸியேஷன் ஃபார் இந்தியா டெவெலப்மென்ட் - பே ஏரியா உட்பட்ட அமைப்புகள் கூட்டாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சி அனைவரையும் கவர்ந்தது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com