கீதா பென்னட்
தென்றலின் தொடக்க காலத்திலிருந்து பல ஆண்டுகள் கதை, கட்டுரைகள் எழுதி வந்தவரும், சிறந்த வீணை, வாய்ப்பாட்டுக் கலைஞருமான கீதா பென்னட் (69) காலமானார். சங்கீத கலாநிதி டாக்டர் எஸ். ராமநாதனின் மகளான கீதா, சென்னை ராணி மேரி கல்லூரியில் இளங்கலை பயின்றார். தந்தையாரிடமிருந்து இசை பயின்றார். உலகெங்கும் பயணித்துக் கச்சேரிகள் செய்தார், தந்தையின் சீடரும், தாள இசைக்கலைஞருமான பென்னட்டைக் காதலித்து மணந்தார். திருமணத்துக்குப் பின் அமெரிக்காவில் குடியேறினார். அங்கிருந்தபடியே வாய்ப்பாட்டு மற்றும் வீணைக் கச்சேரிகள் செய்துவந்தார். கச்சேரிகளில் இவரது கைவண்ணம் போலவே நட்பான 'பளிச்' சிரிப்பும் ரசிகர்களைக் கவர்ந்துவிடும். டிசம்பர் மாதம் என்றால் சில ஆண்டுகள் முன்வரை அவரைச் சென்னை சங்கீத சபாக்களில் பார்க்க முடிந்தது.

தென்றலில் மாதந்தோறும் எழுதி வந்தார்.

இவருடனான தென்றல் நேர்காணல் வாசிக்க.

குமுதம் குழுமத்திலிருந்து வெளியான 'மலர் மல்லிகை' இதழின் ஆசிரியராக இரண்டாண்டுக் காலம் பணியாற்றியவர். இசைப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகளும் அங்கீகாரமும் பெற்றவர். முந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அவற்றில் ஒரு கதை 'இலக்கியச் சிந்தனை' பரிசு பெற்றது. இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு நூல்களாகவும் வெளியாகியுள்ளன.

25 ஆண்டுகளுக்கும் மேலாகப் புற்றுநோயுடன் போராடிய போதும் தளராமல் நூற்றுக்கணக்கான கர்நாடக இசைப் பாடல்களை யூ ட்யூபில் வலையேற்றி வந்தார் கீதா. இளைய தலைமுறை இசைக் கலைஞர்கள் இசை நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தன் தந்தையிடமிருந்து கற்றதையும் பெற்றதையும் ஒரு தவம்போல அதில் பகிர்ந்து வந்தார்.

பல அறுவை சிகிச்சைகளை எதிர்கொண்டும் மனம் தளராமல் இயங்கி வந்த இவரது மனவலிமை போற்றத்தக்கது. கீதா பென்னட்டுக்குத் தென்றலின் அஞ்சலி!

© TamilOnline.com