அருள்மிகு கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயம், திருச்சிராப்பள்ளி
தமிழ் நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் இருக்கும் கல்லுக்குழி பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆஞ்சநேயர் திருக்கோயில். இது மிகவும் சக்தி வாய்ந்த கோயில். சுந்தர ஆஞ்சநேயர் என்பது இவரது திருநாமம். இக்கோயில் கட்டப்பட்டு ஏறக்குறைய 85 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. 1928ம் வருடம் திருச்சிராப்பள்ளி - ஈரோடு இருப்புப் பாதையை மீட்டர் கேஜில் இருந்து அகலப்பாதையாக மாற்றினார்கள். அப்போது ஒரு சிறு ஆஞ்சநேயர் கோயில் ரயில்வே லைனுக்கு மத்தியில் இருந்தது. அதை வேறிடத்தில் மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் பக்கத்திலேயே வேறிடம் ஒதுக்கப்பட்டது.

அப்போது ரயில்வே மேலதிகாரியாக இருந்தவர் ஆம்ஸ்பி (Ormsby) என்ற ஆங்கிலேயர். அவருக்கு இந்த ஆஞ்சநேயர் கோயிலைக் கட்டுவதற்கு முன் சுவாமியால் ஏற்பட்ட அனுபவங்களினால், பக்தர்களின் வேண்டுகோளின்படி இக்கோயிலை திருச்சிராப்பள்ளி ரயில்வே நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் கட்டினார். மேலும் இக்கோவிலிலின் வளர்ச்சிக்கு முன்னாள் நிர்வாகி என். ஸ்ரீராமுலு நாயுடு அவர்களின் உழைப்பும் ஒரு காரணம். 1935ம் வருடம் இந்தக் கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோவிலில் நுழைந்ததும் நுழைவாயிலில் ராஜகோபுரம். அதன்முன்பு கிழக்குப் பக்கம் ராமர் பட்டாபிஷேகக் காட்சி, ஆஞ்சநேயர் சீதைக்கு சூடாமணி வழங்கும் காட்சி, சீதை ஆஞ்சநேயருக்குக் கணையாழி கொடுக்கும் காட்சி யாவும் மிகச் சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. கோயிலின் மேற்குப் பக்கம் ஸ்ரீரங்கநாதரின் பள்ளிகொண்ட திருக்கோலம், உற்சவ மூர்த்தியுடன் கூடிய காட்சி, திருவெள்ளரை செந்தாமரைக்கண்ணன்-பங்கஜவல்லி நாச்சியாருடன் கஜேந்திர மோட்சம், நம்மாழ்வார், உடையவர் ஆகிய காட்சிகளைக் காணலாம். அடுத்துப் பாண்டுரங்கன் சன்னிதி, நவக்கிரக சன்னிதி, பிள்ளையார் முருகன் சன்னிதி ஆகியவை அமைந்துள்ளன. ராஜகோபுரத்தின் நான்கு பக்கமும் மூலகருடன். ஆஞ்சநேய சுவாமியின் மூலஸ்தானம் விலையுயர்ந்த பளிங்குக் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு பாஞ்சராத்ர ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. காலசந்தி காலை 6.30 மணிக்கும், சாயரட்சை மாலை 5.30 மணிக்கும் ஆக இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

பக்தர்கள் முதலில் ராஜகோபுரத்தில் அமைந்துள்ள சக்கரத்தாழ்வாரைத் தரிசித்து, பின்னர் பாண்டுரங்கன், விநாயகர், முருகனைத் தரிசித்து, நவகிரகங்களைப் பிரதட்சிணம் செய்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். நாளடைவில் ஆலயத்தின் முன்பாகச் சுற்றிலும் மதில் சுவர் கட்டப்பட்டது. மூலவருக்குப் பின்புறமுள்ள இடத்தில் தியான மண்டபம், அன்னதான மண்டபம் போன்றவை கட்டப்பட்டன.

கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் சிறந்த வரப்பிரசாதி. மகாசக்தி உடையவர். பக்தர்களின் வேண்டுகோளை உடனடியாக நிறைவேற்றித் தருபவர் என்பது அனுபவபூர்வமான உண்மை. உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஆஞ்சநேயரைத் தரிசிக்க வருகின்றனர். அவர்கள் நிறைய நன்கொடைகள், வெள்ளிக்கவசம் தங்கக்கவசம் போன்றவற்றை அளித்துள்ளனர். ஹனுமான் சாலீஸா தோத்திரத்தை எல்லாரும் படிக்கும் வகையில் பெரிய பலகையில் எழுதி வைத்துள்ளனர். இக்கோயில் 1988ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் வந்தது.

கோயிலில் ஸ்ரீராமநவமி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பத்து நாட்களிலும் ஆஞ்சநேயர் சர்வ அலங்காரத்துடன் முன்மண்டபத்தில் எழுந்தருளித் தரிசனம் அளிக்கிறார். நவராத்திரி ஒன்பது நாளும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் ஹனுமத் ஜயந்தி இங்கு மிகவும் விசேஷம். வடைமாலை சாற்றி, அர்ச்சனை, ஆராதனைகள் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர். வாரந்தோறும் சனிக்கிழமை மாலை இங்கு பஜனை நடைபெறுகின்றது.

எங்கள் குடும்பம் இந்தக் கோயிலுக்கு அருகிலேயே வசித்து தினம் அவரை தரிசித்து, அவர் அருளால் குழந்தைகள் சிறப்பாகப் படித்து அமெரிக்கா சென்று மேல்படிப்பு படித்து, வாழ்க்கை நன்கு அமைந்துள்ளது ஆஞ்சநேய சுவாமியின் திருவருளால்தான் என்றால் மிகையில்லை. எனது கணவரும் கோவில்களைப் பற்றி எழுத என்னை ஊக்குவித்தார். அந்த வாய்ப்பை அருளிய அருள்மிகு ஆஞ்சநேயரை மனதார வணங்குகிறேன்.

எங்கெல்லாம் ரகுநாத கீர்த்தனமோ
அங்கெல்லாம் சிரமேல் கரம் குவித்து
கண்ணில் நீர் பெருக்கி ஆனந்தத்தில் நிற்கும்
அரக்கர அழித்த ஆஞ்சநேயனைப் பணிகிறோம்


சீதா துரைராஜ்,
சான்ஹொஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com