மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: மைத்ரேயர் சாபம்
பாண்டவர்கள் வனவாசத்துக்குக் கிளம்பியதுமே அவர்களோடு 'நாங்களும் வருகிறோம்' என்று நகரமக்கள் புறப்பட்டதை இரண்டு இதழ்களில் 'காடாகிப் போகும் நாடு' என்ற தலைப்பில் பார்த்தோம். "நீங்கள் எங்களுடன் வரவேண்டாம்" என்று யுதிஷ்டிரர் தடுத்தார். கூட வருபவர்களுக்கு அன்றாடம் உணவு முதலிய அடிப்படைத் தேவைகளுக்கு ஏற்பாடு செய்யவேண்டிவரும் என்ற முக்கியமானதும் சங்கடமானதுமான கடப்பாட்டுக்கு அஞ்சினார். இருந்தாலும், அவர்கள், "ஓ! அரசரே! எம்மைக் காப்பாற்றும் விஷயமான கவலையானது உமது மனத்தில் உண்டாகவேண்டாம். நாங்களே காட்டிலுள்ளவைகளைச் சம்பாதித்துக்கொண்டு உம்மைத் தொடர்ந்து வருகிறோம். உங்களுக்கு க்ஷேமத்தைத் தியானம் செய்வதாலும் (மங்களார்த்தமான) மந்திர ஜபத்தைச் செய்வதாலும் உங்களுக்கு மங்களத்தைச் செய்வோம். அனுகூலமான கதைகளைச் சொல்லிக்கொண்டு காட்டில் கூடவே சந்தோஷமாக வசிக்கிறோம்" என்றார்கள்." (வனபர்வம், கிர்மீரவத பர்வம், அத். 2, பக்.7). "எங்கள் தேவைகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்" என்று அவர்கள் சொன்னபோதிலும் தருமபுத்திரனுக்கு இதில் சம்மதமில்லை. ஆனால் கிளம்பும்போது இப்படித்தான் கிளம்புகிறார்கள். அதற்குப் பிறகுதான் அவர்களுடனேயே எப்போதும் இருப்பவரான தௌம்யருடைய ஆலோசனைப்படி தருமபுத்திரன் சூரியனை நோக்கிச் சில மந்திரங்களைச் சொல்ல, சூரியன் நேரில் வந்து அள்ள அள்ளக் குறையாத அன்னத்தை வழங்கக்கூடிய அட்சயபாத்திரத்தை அளிக்கிறார்.

பாரதம் சொல்கிறது: "ஸூரியர், 'உனக்கு எது விருப்பமோ அது அனைத்தையும் நீ அடைவாய். பன்னிரண்டு வருஷம் நான் உனக்கு அன்னத்தைத் தருகிறேன். ஓ நராதிபனே! என்னால் கொடுக்கப்பட்ட தாம்ரமயமான பரிமாறுகிற பாத்திரத்தைப் பெற்றுக்கொள். நல்ல விரதமுள்ளவனே! திரெளபதியானவள் இப்பாத்திரத்துடன் எவ்வளவு காலம்வரை அன்னமளிக்க விரும்புவாளோ அதுவரை சித்தம் செய்யப்பட்ட பழம், கிழங்கு, மாமிசம், கீரை, லேஹ்யம், சோஷ்யம், பக்ஷ்யம், பேயம்* ஆகிய நான்குவிதமான உணவுப் பதார்த்தங்களும் சமையலறையில் உனக்குக் குறைவற்றிருக்கும். இதிலிருந்து பதினான்காவது வருஷத்தில் திரும்பவும் ராஜ்யத்தை அடைவாய்' என்றார். பூஜ்யரான ஸூர்யர் இவ்விதம் சொல்லி அங்கேயே மறைந்துவிட்டார்." (வனபர்வம், கிர்மீரவத பர்வம், அத். 3, பக். 19) (லேஹ்யம், சோஷ்யம், பக்ஷ்யம், பேயம்—நக்கித் தின்பன, உண்ணுவன, மெல்லுவன, பருகுவன என்று பொருள்.)

ஒருபக்கத்தில் இவர்கள் இவ்வாறு புறப்பட்டுச் சென்றதும் மறுபக்கத்தில் எப்போதும்போல திருதராஷ்டிரன் விதுரரிடத்திலே "அடுத்ததாக என்ன செய்வது" என்று ஆலோசனை கேட்டான். அவரோ, "பாண்டவர்களைத் திரும்ப அழைத்துவந்து அவர்களுக்கு அவர்களுடைய அரசைத் தரவேண்டும்; துச்சாதனன் பாண்டவர்களிடத்திலும் திரெளபதியிடத்திலும மன்னிப்புக் கேட்டுக்கொள்ளவேண்டும்; துரியோதனன், துச்சாதனன், சகுனி, கர்ணன் ஆகிய நால்வரும் பாண்டவர்களிடத்தில் அன்பு பூண்டவர்களாக இருக்கவேண்டும். இப்படிச் செய்யாவிட்டால், கௌரவ வம்சம் அழியப் போவது நிச்சயம்" என்று சொல்லிவிட்டார். திருதராஷ்டிரனுக்குக் கோபம் தலைக்கேறியது. "விதுரனே! நீ என்னைக் குறித்து எல்லாவற்றையும் கபடமாகச் சொல்லுகிறாய். உன் விஷயத்தில் நான் அதிகக் கோபத்தை அடைகிறேன். நீ இஷ்டம்போலப் போகலாம்; அல்லது இருக்கலாம். கெட்ட நடையுள்ள ஸ்திரீயானவன் மிக்க நல்ல வார்த்தை சொல்லப்பட்டாலும் (நாயகனை) விட்டுவிடுகிறாள்" என்றான். (மேற்படி, அத். 4, பக். 25)

திருதராஷ்டரன் விதுரரைக் கடிந்து பேசுவது அரிது. அதுவும் அவருடைய பிறப்பைச் சுட்டிக் காட்டுவதுபோலப் பேசுவது அதிலும் அரிது. சூதாட்டச் சபையிலே துரியோதனன் அவரைப் பார்த்துச் சொன்னதான 'தாசிமகனே' என்ற வார்த்தையை இப்போது திருதராஷ்டிரனும் சொல்லிவிட்டான் என்பதனாலும், "நீ உன் விருப்பப்படி எங்கே வேண்டுமானாலும் போய்க்கொள்ளலாம்" என்று சொல்லப்பட்டதாலும் அங்கிருந்து கிளம்பிய விதுரர், பாண்டவர்கள் இருந்த காம்யவனத்துக்குச் சென்று அவர்களோடேயே இருந்துவிடலாம் என்று தீர்மானித்தார். இந்தத் தீர்மானம் மட்டும் மாறாமல் இருந்திருக்குமேயானால், மகாபாரதத்தின் போக்கே வேறுவிதமாக மாறியிருக்கும். ஆனால், சுடுசொற்களைச் சொன்னபிறகு, விதுரர் பாண்டவர்களோடு தங்கியிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் அவரைத் 'திரும்ப அழைத்துவா' என்று திருதராஷ்டிரன் சஞ்சயனை அனுப்பி அவரைத் திரும்ப அழைத்துக்கொண்டான். பாரதத்தின் போக்கு தன் பழைய நிலையை அடைந்தது.

விதுரர் பாண்டவர்களோடு தங்கியிருந்த காலத்தில் பகாசுரனுடைய சகோதரனும் ஹிடிம்பனுடைய நண்பனுமான கிர்மீரன் என்ற அரக்கன் பீமனைத் தேடிவந்து, "நீ என்னுடைய சகோதரனையும் நண்பனையும் கொன்றவன் என்பதால் உன்னைப் பழிதீர்த்துக் கொள்ளவேண்டும். உன்னைக் கொல்லப் போகிறேன். என்னோடு போருக்கு வா" என்று அழைத்ததும், பீமன் கோபம் கொண்டு கிர்மீரனை வதைத்ததும் நடந்தன. விதுரர் நாடு திரும்புகிறார் என்று கேள்விப்பட்டதும் துரியோதனன் பெரிதும் வருத்தம் கொண்டு, கர்ணன் முதலானவர்களை அழைத்துக்கொண்டு, 'பாண்டவர்களைக் காட்டிலேயே கொன்றுவிடுகிறேன்' என்று கிளம்பினான்.

அப்போது வியாசர் வந்து குறுக்கிட்டுத் தடுக்கிறார். திருதராஷ்டிரனிடத்திலே சென்று, "பாண்டவர்கள் வனத்துக்குச் சென்றதில் எனக்குச் சம்மதமில்லை. பதின்மூன்று வருடங்கள் கழிந்ததும் அவர்கள் திரும்ப வரத்தான் போகிறார்கள். உன்னுடைய புத்திரர்களைக் கொன்று அவர்களுடைய அரசைப் பெறத்தான் போகிறார்கள். நானும் பீஷ்மரும் துரோணரும் சொல்வதைக் கேட்காமல் துரியோதனன் காட்டுக்குச் சென்று அவர்களைக் கொல்ல நினைப்பானானால், அழிவு நிச்சயம்," என்றெல்லாம் எடுத்துச் சொல்லி "பாண்டவர்களோடு சமாதானம் செய்துகொள்ளுங்கள்" என்று வற்புறுத்தினார். "இதை நீங்களே அவனிடத்தில் சொல்லிவிடுங்கள்" என்று திருதராஷ்டிரன் வியாசரைக் கேட்டுக்கொண்டான். வியாசர், "மைத்ரேயர் வந்து அவனுக்கு உபதேசிப்பார்" என்று சொல்லிச் சென்றார். மைத்ரேயர் வந்து திருதராஷ்டிரனிடத்திலும் துரியோதனனிடத்திலும் பேசி, பாண்டவர்களுடைய பெருமைகளை எடுத்துச் சொல்லி, "அவர்களைப் பகைத்துக்கொள்ள வேண்டாம். சமாதானம் செய்துகொள்ளுங்கள்" என்று சொன்னதுமே, துரியோதனன் தொடையைத் தட்டியவாறு பெரிதாகச் சிரித்தான். "என்னை மதியாமல் என் சொற்படி செய்ய விரும்பாமையால் இந்த அதிக கர்வத்தின் பலனை உடனே அடைவாய். பலமுள்ள வீமன் கதையின் அடிகளால் உன் தொடையைப் பிளந்து உன்னைக் கொல்வதற்கேற்ற பெரிய யுத்தம் உண்டாகும்" என்று சபித்தார். (மேற்படி, அத்.10, பக். 39)

'தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்' என்று பீமன் இரண்டுமுறை சபதம் செய்திருந்தான். இப்போது வியாசர் சொன்னதைப் போல துரியோதனனுக்கு உபதேசிக்க வந்த மைத்ரேயர் சபித்திருக்கிறார். இதற்குப் பதின்மூன்று வருஷங்கள் கழித்து உத்யோக பர்வத்தில் கண்வரிடத்திலே துரியோதனன் மீண்டும் தொடையைத் தட்டிக்கொள்ளப் போகிறான். "பிறகு கண்வர் சினமுற்று அறிவிலியான துரியோதனனை நோக்கி, 'நீ தொடையில் அடித்துக் கொண்டபடியால் (உனக்குத்) தொடையில் மரணம் ஏற்படும்' என்று சொன்னார்". (உத்தியோக பர்வம், பகவத்யாந பர்வம், அத். 105, பக். 370) என்று சபித்ததை இதற்கு முன்னாலும் சொன்னோம். பீமன் சபதம் செய்தது இரண்டு முறையென்றால், 'தொடையில்தான் உனக்கு மரணம்' என்று இரண்டு முறை சபிக்கப்பட்டான் துரியோதனன் என்பதும் நினைவுகொள்ளத் தக்கது.

பாண்டவர்கள் வனவாசத்துக்குச் சென்றுவிட்டார்கள் என்பதை அறிந்த கிருஷ்ணன் அவர்கள் இருந்த இடத்துக்குத் தேடிக்கொண்டு போனார். அங்கே "இவ்வளவெல்லாம் நடக்கலாமா? உன்னுடைய தோழியும் உன்னிடத்தில் அன்புள்ளவளும் உனக்கு உறவுமுறை ஆகவேண்டியவளுமான என்னை நீ கைவிட்டுவிட்டாயே" என்று திரெளபதி அவரிடத்திலே முறையிட்டாள். கண்ணன் இதற்குச் சொன்ன விடை என்ன? பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com