TNFன் முன்னோடித் திட்டம்: டிஜிட்டல் வகுப்பறைகள்
தேவையறிந்து திட்டங்களை வகுப்பதில் முன்னோடியாகத் திகழும் தமிழ்நாடு அறக்கட்டளை, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு எண்ணிய (டிஜிட்டல்) வகுப்பறைகளை அமைத்துக் கொடுத்துள்ளது. இப்பள்ளியில் 1837 மாணவர்கள் பயில்கிறார்கள். பெரும்பாலான அமெரிக்க மாணவத் தன்னார்வலர்கள் இப்பள்ளியில் உள்ளுறை பயிற்சி பெற்றதோடு அதன்மூலம் அமெரிக்கக் கல்விமுறையை இங்கே பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முப்பது லட்ச ரூபாய் செலவில் 30 கணினிகள் கொண்ட இந்த டிஜிட்டல் வகுப்பறையை அமைக்க அறக்கட்டளையுடன் இணைந்து பலர் செயல்பட்டுள்ளனர். அறக்கட்டளையின் ஆயுட்கால உறுப்பினர் திரு. சாம் செங்குட்டுவன் கணினிகளையும், டிரைவன்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தினர் ஒலிவழங்கி, திரை மற்றும் மின்காப்பு மண்டலத்தையும் வழங்கினர். 6 முதல் 8ம் வகுப்புக்கான கணினி வழியே கற்கத்தக்க பாடத்திட்டங்களை வெற்றிவேல் அறக்கட்டளை வழங்கியது. உள்கட்டமைப்பு, அன்றாடச் செலவுகள், திட்டத்தை வழிநடத்துதல் போன்ற பொறுப்புகளை ராம்கோ நிறுவனத்தினர் ஏற்றுக்கொண்டனர்.

"கடினமானதாகக் கருதப்படும் கணிதத்தைக் கணினியில் காணொளிகளின் வழியே சுயமாகக் கற்பதன் மூலம் நல்ல புரிதலும், ஆர்வமும் வருகிறது. இதனால் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண்பதோடு, தொழில்நுட்ப அறிவையும் வளர்க்க முடியும்" என்கிறார் கணித ஆசிரியர் தீபா. பின்தங்கிய பொருளாதாரச் சூழலிலிருந்து வரும், பெரும்பாலும் ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்படும் பிள்ளைகளுக்கு இத்தகைய வசதிகள் வீட்டில் இருக்க வாய்ப்பில்லை என்றும், பள்ளியில் இது கிடைப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்று மாணவர்கள் கூறுகிறார்கள். "காணொளிகளைத் திரும்பத் திரும்பப் பார்த்து, பிறகு ஒவ்வொரு நிலையாகப் பயிற்சி செய்து தேர்ச்சி பெறுவது, கற்பதை எளிதாக்குவதோடு, சாதாரண வகுப்பறையில் கற்பதைவிட ஆனந்தமான அனுபவமாக உள்ளது" என்கிறார் 7ம் வகுப்பு மாணவி ரிஸ்வானா பேகம். அறக்கட்டளையின் உதவியால் கிடைத்த டிஜிட்டல் வகுப்பறை, "எங்கள் பள்ளியைக் கற்பித்தலின் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 250 மாணவர்கள் இதனால் பயனடைவார்கள்" என்று பெருமிதத்தோடு சொல்கிறார் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. சேகர்.

செப்டம்பர் 11, 2018 அன்று TNF சென்னை கிளையின் தலைவர் திரு. ராஜரத்தினம் தலைமையில் நடந்த எண்ணியல் வகுப்பறை திறப்பு விழாவில் பேசிய தமிழகப் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் திரு. பிரதீப், "மாநிலம் முழுவதும் 7000 பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் அமைக்கப்படும்" என்று கூறினார். பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், முன்னாள் மாணவர்களும் அரசின் இந்த முயற்சிக்கு உதவி செய்யவேண்டும் என்று ராஜரத்தினம் கேட்டுக்கொண்டார். வெற்றிவேல் அறக்கட்டளை, ராம்கோ நிறுவனம் மற்றும் டிரைவன்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.

அடுத்து, திருநெல்வேலி மற்றும் வேதாரண்யத்தில் TNF எண்ணியல் வகுப்பறைகள் அமையவுள்ளன என TNF தலைவர் திரு. சோமலெ சோமசுந்தரம் அறிவித்துள்ளார்.

மேலும் விபரங்களுக்கு: www.tnfusa.org, president@tnfusa.org

ஜெயா மாறன்

© TamilOnline.com