ஷ்ரேயா ராமச்சந்திரன்
2018ம் ஆண்டின் இளம் ஹீரோக்களுக்கான குளோரியா பாரன் பரிசுக்கு (The Gloria Barron Prize for Young Heroes) கலிஃபோர்னியாவின் 14 வயதான செல்வி ஷ்ரேயா ராமச்சந்திரன் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் The Grey Water Project என்கிற லாபநோக்கற்ற அமைப்பை நிறுவியுள்ளார். அதன்மூலம் சற்றே மாசடைந்த சாம்பல்வண்ண நீரை மீண்டும் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதன் மூலம் நீர் வீணாதலைத் தடுத்து நீர்ப்பஞ்சத்திலிருந்து தப்பிக்க முடியும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். துணி துவைக்க ஆர்கானிக் டிடெர்ஜென்ட் பயன்படுத்துவதாலும், குளிக்கச் சீயக்காய் பயன்படுத்துவதாலும், பாத்திரம் கழுவ அங்ககக் கழுவிகள் பயன்படுத்துவதாலும் வெளிவரும் கழிவுநீர் இயற்கைக்குத் தீங்கு ஏற்படுத்தும் அளவு மாசுறாமல் இருக்கும். அந்த நீரை நேரடியாக வீட்டைச் சுற்றியுள்ள தோட்டம், புல்வெளி ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம். வீடுகளில் அதிகச் செலவின்றி இவற்றைச் செய்வதற்கான வழிமுறைகளைக் கற்பிக்கும் கருத்தரங்குகளை நடத்துகிறார்.

இதனை ஷ்ரேயா தொடங்குவதற்கு முன்னர் மூன்றாண்டுக் காலம் சீயக்காய், குறைமாசுக் கழிவுநீர் (Grey water) ஆகியவற்றை ஆராய்ந்து, இந்தச் சாம்பல்நிற நீரானது நிலம், தாவரங்கள், நீர்வாழ் உயிரினங்கள் போன்றவற்றுக்குத் தீங்கு தருவதில்லை என்பதைக் கண்டறிந்தார். கலிஃபோர்னியாவின் நீர்சார் அமைப்புகள் பலவற்றுடனும் இணைந்து தற்போது ஷ்ரேயா குறைமாசுக் கழிவுநீரின் மறுபயன்பாட்டை அதிகரிக்க உழைத்து வருகிறார்.

இவரது பணியைப் பாராட்டிப் பல விருதுகள் வந்துள்ளன. அமெரிக்க அதிபரின் சுற்றுச்சூழல் இளையோர் விருது அவற்றில் ஒன்று. ஐக்கிய நாடுகள் அவையின் உலகக் கழிவுநீர் முன்னெடுப்பில் (Global Wastewater Initiative) இணைந்து செயல்பட இவருக்கு அழைப்பு வந்துள்ளது. நீர் சேமிப்பு மற்று சிறிய செயல்கள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்ற கருத்துக்களத்திலான ஒரு பாடத்திட்டத்தைத் தொடக்கநிலைப் பள்ளி மாணவர்களுக்காக ஷ்ரேயா எழுதுவதில் ஈடுபட்டிருக்கிறார்.

"நான் வயதில் சிறியவளாக இருந்தாலும் என்னால் சமுதாயத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்திருக்கிறேன்" என்கிறார் ஷ்ரேயா. "எதையேனும் மாற்ற வேண்டுமானால், எவரோ செய்வார்கள் என்று காத்திருக்காமல், நானே அந்த மாற்றத்தைக் கொண்டுவர அடியெடுத்து வைக்கவேண்டும்" என்கிற அவரது கூற்றில் வயதுக்கு மீறிய சிந்தனை மற்றும் செயலூக்கத்தைப் பார்க்கிறோம்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com