ரவிபிரகாஷ்
"(ரவிபிரகாஷின்) கதைகள் அனைத்தையும் படித்துப் பார்த்தேன். இவற்றில் எந்தக் கதை ஒசத்தி, எது சுமார் என்று பிரித்துப் பர்க்கமுடியாத அளவுக்கு எல்லாமே உயர்ந்த கதைகளாகவே அமைந்துள்ளன; வெல்லப் பிள்ளையாரில் எந்தப் பக்கம் ருசி அதிகம், எந்தப் பக்கம் ருசி குறைவு என்று சொல்ல முடியாதல்லவா, அதைப் போலத்தான்" இப்படிப் புகழ்ந்துரைத்திருப்பவர் பத்திரிகையுலகப் பிதாமகர் சாவி. இப்படிப் புகழப்பட்ட கதைகளை எழுதியவர் ரவிபிரகாஷ். எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், வானொலி நாடக நடிகர் எனப் பல திறக்குகளிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கும் ரவிபிரகாஷ், 9 ஜூன் 1957ல், நரசிம்மன் - சீதாலக்ஷ்மி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் ரவிச்சந்திரன். பள்ளியில் பல ரவிச்சந்திரன்கள் இருந்ததால் ரவிபிரகாஷ் ஆனார். விழுப்புரத்தின் காணை கிராமத்துப் பள்ளியில் துவக்கக்கல்வி பயின்றார். தாத்தாவிடம் சிறு வயதில் கேட்ட கதைகள் வாசிப்பார்வத்தைத் தூண்டின. தந்தை பள்ளி ஆசிரியர். பரந்துபட்ட வாசகரும் கூட. அவர்மூலம் சிறுவயதிலேயே வார இதழ்கள் பல அறிமுகமாயின. தந்தை அறிமுகப்படுத்திய நூல்கள் புதிய வாசல்களைத் திறந்துவிட்டன. டாக்டர் பூவண்ணனின் 'ஆலம் விழுது' இவருள் பல கற்பனைகளைத் தூண்டிவிட்டது. இதழ்களில் வரும் தொடர்கதைகளைப் படித்து, விளக்கும்படிப் பணித்த தந்தை, வாசிப்பார்வம் வளரக் காரணமானார். அந்தப் பயிற்சியே பின்னாளில் ரவிபிரகாஷை எழுத்தாளர் ஆக்கியது எனலாம். எழுத்து மட்டுமல்லாமல் பேச்சு, நாடகம், ஓவியம் என்று பல விதங்களிலும் ஊக்குவிப்பவராக இருந்தார் தந்தை. பள்ளிப் பருவத்திலேயே இலக்கிய மேடைகள், பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றுக் காமராஜர் உள்ளிட்ட பலரிடமிருந்து பரிசு பெற்றார் ரவிபிரகாஷ். பள்ளி நாடகங்களிலும் நிறைய நடித்திருக்கிறார். பாண்டிச்சேரி வானொலி நிலையத்தில், 'தீபாவளிப் பரிசு' என்ற நாடகத்தில் நடித்த அனுபவமும் இவருக்கு உண்டு.

விழுப்புரம் மகாத்மா காந்தி மேல்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி. தொடர்ந்து விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பு (பி.யூ.சி.) மேலே படிக்கக் குடும்பச் சூழ்நிலை இடந் தராததால், தமிழ், ஆங்கிலம் தட்டச்சு பயின்றார். தட்டச்சுப் பயிற்றுநராகவும் தேர்ச்சி பெற்று, 'பிரகாஷ் டெக்னிகல் இன்ஸ்டிட்யூட்' என்ற தட்டச்சுப் பயிலகம் ஒன்றை நடத்தினார். ஆனால், அது வெகுகாலம் நீடிக்கவில்லை. ஓய்வுநேரத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் கோயில் விழாக்களில் புராணச் சொற்பொழிவுகள் ஆற்றிவந்தார். இலக்கிய, அரசியல் கூட்டங்களில் உரையாற்றியதும் உண்டு. பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்களிலும் பேசியிருக்கிறார். தொடர்ந்த வாசிப்பு எழுத்தார்வத்தைத் தூண்டிற்று. தன் வீட்டில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றைக் கதையாக்கிக் கல்கிக்கு அனுப்பினார். 'கரிநாக்கு' என்ற அந்தக் கதை வெளியானபோது ரவிபிரகாஷுக்கு வயது 21. தொடர்ந்து சிறுகதைகள் எழுதினார். தினமணி கதிர், குங்குமம், சாவி போன்ற இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகின. ஆனந்த விகடனில் எழுதிய 'விளக்கில் விழுந்த விட்டில்' என்னும் கதை இவருக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தது. பத்திரிகைகளில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வமும் முகிழ்த்தது, ஆனால் நிறைவேறவில்லை.

Click Here Enlargeபாண்டிச்சேரி, விழுப்புரம் போன்ற இடங்களில் தற்காலிகமாகப் பணியாற்றியவர் சென்னைக்கு வந்தார். வாசக நண்பர் மார்க்கபந்து மூலம் ஆம்ப்ரோ பிஸ்கட் கம்பெனியில் பணி கிடைத்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் எழுத்தாளர் புஷ்பா தங்கதுரையின் பரிந்துரையின் பேரில் 'சாவி' இதழில் சேர்ந்தார். அதுவே வாழ்வின் திருப்புமுனை ஆனது. ஜர்னலிசம் பயிலாதவர் 'சாவியிசம்' பயின்று தன்னைப் பத்திரிகையாளராக வளர்த்துக்கொண்டார். சாவியில் உதவியாசிரியராக இருந்து அட்டைப்படம் முதல் அச்சிடுவதுவரை அனைத்து நுட்பங்களையும் கற்றார். ரவிபிரகாஷ் என்ற தனது இயற்பெயரில் மட்டுமல்லாமல் சூர்யகலா, சந்திரகலா, நரசு, ஷைலு, ராஜ்திலக், ராஜாமகள், உஷாபாலு, என்னார், சீதாநரசிம்மன் எனப் பல புனைபெயர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை சாவியில் எழுதி இருக்கிறார். சாவி குழுவின் 'மோனா' இதழுக்கும் சிறந்த பங்களிப்புக்களைத் தந்துள்ளார். கே. வைத்தியநாதனுடன் (தற்போதைய தினமணி ஆசிரியர்) இணைந்து 'ரேவதி ராஜேந்தர்' என்ற பெயரில் மோனாவில் சில நாவல்கள் எழுதியிருக்கிறார். சென்னை வானொலி நாடகங்களில் நடித்த அனுபவமும் உண்டு. 'சி' கிரேடு கலைஞராகத் தொடங்கி, 'ஏ' கிரேடுக்கு உயர்ந்தார். 'இளவட்டம் பதில்கள்' என்ற பெயரில் சாவியிலும், 'அசரீரி பதில்கள்' என்ற தலைப்பில் குங்குமத்திலும் எழுதியிருக்கிறார். சாவியில் பணியாற்றியபோது அட்டைப்படக் கார்ட்டூன் ஒன்றிற்காக கைது செய்யப்பட்டதும் உண்டு. எட்டாண்டுகள் சாவியில் பணியாற்றிய பின், விலகி அமுதசுரபியில் சில மாதங்கள் பணியாற்றினார். பின் ஆனந்த விகடனில் சேர்ந்தார். அது இவரது வாழ்வின் மற்றொரு திருப்புமுனை ஆனது.

விகடன் இவரது புது முயற்சிகளை வரவேற்றது. மின்மினிக் கதைகள், விஷுவல் டேஸ்ட் கதைகள், ஹைகூ கதைகள், ஒரு நிமிடக் கதைகள் என விகடனில் பல்வேறு வித்தியாசமான சிறுகதை முயற்சிகளை இவர் மேற்கொண்டார். இவர் எழுதிய 'ஏடாகூடக் கதைகள்' மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றன. அவ்வகைச் சிறுகதைகளில் பல்வேறு பரிசோதனை முயற்சிகளை இவர் செய்து பார்த்தார். உயிரெழுத்துக்களே இல்லாத கதை, நம் விருப்பத்துக்கேற்ப வடிவமைத்துக் கொள்ள முடிகிற கதை, முற்றுப்புள்ளியே இல்லாமல் முழுக்க ஒரே வாக்கியத்தில் முழுநீளக் கதை, வாசகர்களையே துப்புக் கண்டுபிடிக்க வைக்கும் புதுமையான க்ரைம் கதை, பக்கங்கள் மாறிப் போனதால் வந்த விபரீதக் கதை, வினைச்சொற்களே இடம் பெறாத கதை, ஒரு கதையை வழக்கம்போல் படித்தால் ஒரு முடிவும், அதே கதையை கடைசி வரியிலிருந்து ஒவ்வொரு வரியாக ஆரம்ப வரி வரை பின்னோக்கிப் படித்தால் வேறொரு முடிவும் வரும் கதை, கதையின் தலைப்பு, அதில் வருகிற கதாபாத்திரங்களின் பெயர்கள், அதில் இடம்பெறுகிற கற்பனை சினிமா பெயர்கள் எல்லாம் ஒன்பது எழுத்தில் அமையும்படி ஒரு கதை, சினிமா தலைப்புகளை வைத்து ஒரு கதை, கதையை அப்படியே வாசித்தால் ஒருவிதமாகவும், ஒரு வரி விட்டு ஒரு வரி வாசித்தால் வேறு விதமாகவும் தோன்றும் கதை என்று பல புதுமைகளைச் செய்தார். விகடன் இதழின் பொக்கிஷங்களைத் தொகுத்து 'காலப்பெட்டகம்', 'பொக்கிஷம்' போன்ற நூல்களாக வடிவமைத்ததில் இவருக்குப் பெரும்பங்கு உண்டு. விகடனின் 85 ஆண்டுக் கால இதழ்கள் முழுவதையும் வாசித்திருக்கும் ஒரே வாசகர் இவர் மட்டும்தான் எனலாம்.

டிஸ்லெக்சியா குறைபாடு பற்றிய இவரது 'தரையில் நட்சத்திரங்கள்' பல பதிப்புகளைக் கண்டது. இவரது 'புதுமொழி 500' குறிப்பிடத்தகுந்தது. ராஷ்மி பன்சாலின் 'I Have A Dream' (எனக்குள் ஒரு கனவு), Stay Hungry Stay Foolish (முயற்சி திருவினையாக்கும்), Connect The Dots (புள்ளிகள் கோடுகள் பாதைகள்) போன்ற நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 'இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை' என்பது இவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு. தேர்ந்தெடுத்த 50 சிறுகதைகள் இடம்பெற்றிருக்கும் இந்நூலின் கதைகளுக்கு, கீதா பென்னட், சிவசங்கரி, மாலன், வாஸந்தி, இந்துமதி, அனுராதா ரமணன், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, இந்திரா சௌந்தர்ராஜன் எனப் பலர் தங்கள் மதிப்பீடுகளைத் தந்துள்ளனர்.

'இதெல்லாம் நடந்துவிடப் போகிறதே' என்னும் எச்சரிக்கையுணர்வுடன் முன்னறிவிப்புச் செய்பவர் குடும்பத்தாரால் 'கரிநாக்கு' பிடித்தவன் என்று தூற்றப்படுவதைச் சொல்கிறது 'கரிநாக்கு' சிறுகதை; ஆதரவற்றுப் பெரியப்பாவின் இல்லத்தில் அடிமையாக வாழும் நடேசனின் அவல வாழ்வைப் பேசுகிறது 'அடிமைகள்'; மதுப்பழக்கம் கொண்ட தந்தையைத் தன் அன்பால், பண்பால் மாற்றும் ஒரு சிறுவனின் கதை, 'ஏக்கத்தின் எல்லையில்'; அன்பின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் 'அம்மா என்றால் அன்பு'; ஊகிக்கவே முடியாத திருப்பத்தைக் கொண்ட 'கன்னத்தில் முத்தமிட்டால்'; அதிர்ச்சியளிக்கும் முடிவைக் கொண்ட, 'கொலை செய்யாள் பத்தினி'; திரைப்படத்துறை சார்ந்தவர்களின் சோக வாழ்வைக் கூறும் வித்தியாசமான முடிவைக் கொண்ட 'மங்கை எங்கே போனாள்?'; மனிதனின் நாக்கு எப்படியெல்லாம் வினையாற்றும் என்பதை உரையாடல் மூலமாகவே நகர்த்திச் சென்று அதிர்ச்சியான முடிவுடன் நிறைவடையும் 'நாக்குகள்'; ராஜேஷ்குமார், அனுராதாரமணன், மேலாண்மை பொன்னுச்சாமி, சுஜாதா என நால்வரும் இணைந்து ஒரு சிறுகதை எழுதினால் எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் 'அவர்களும் அவனும்' என நவரசத்தையும் வாசகர்களுக்குக் கடத்துவதாய் இச்சிறுகதைத் தொகுப்பு அமைந்துள்ளது. இவரது வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும் பல கதைகள் முகிழ்த்துள்ளமையைச் சில கதைகளில் அறிந்துகொள்ள முடிகிறது.

ரவிபிரகாஷ் ஒரு நேர்காணலில், "என்னுடய கதைகளில் பெரிய உபதேசமோ, சமூகப் பிரக்ஞையோ, சமுதாயத்தைப் புரட்டிப் போடும் மெசேஜோ இருக்காது. என் கதைகள் எல்லாம் ஜாலியாகப் படித்துவிட்டுத் தூக்கிப்போடும் கதைகள்தான்" என்று தன்னடக்கத்துடன் கூறியிருந்தாலும் போகிறபோக்கில் நறுக்குத் தெறித்தாற்போல உண்மையை பாசாங்கோ, வார்த்தை ஜாலங்களோ இல்லாமல் சொல்பவையாகவே இவரது கதைகள் அமைந்திருக்கின்றன. "ரவிபிரகாஷின் எழுத்து நடை பட்டை தீட்டப்பட்ட வைரக்கல்லுக்குச் சமம். சாவியின் பாசறையிலிருந்து வெளிவந்த எழுத்தாளர்களில் ரவிபிரகாஷ் அதிமுக்கியமானவர். அவர் எழுதிய ஒவ்வொரு சிறுகதையுமே சோடைபோகாத குண்டுமல்லிகைகள் தான்" என்று ராஜேஷ்குமார் புகழ்ந்துரைத்திருப்பது மிகையில்லை. உண்மை. எப்படி எப்படி விதவிதமாகச் சிறுகதைகளை எழுதலாம் என்பதற்கான பயிற்சி நூலாக இச்சிறுகதைத் தொகுப்பைக் கருத இடமுண்டு.

இவரது பணிகளைப் பாராட்டி 'சேக்கிழார் மையம்' இவருக்குச் சிறந்த பத்திரிகையாளருக்கான விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. ஆலந்தூர் ஃபைன் ஆர்ட்ஸ் 'கண்ணதாசன் விருது' வழங்கியுள்ளது. சக்திவிகடன் இதழின் ஆசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் இருக்கும் ரவிபிரகாஷ் தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்துவருகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com