லெமான்ட்: சங்கர நேத்ராலயாவுக்கு நிதி திரட்ட இசை
ஆகஸ்ட் 12, 2018 ஞாயிறன்று சிகாகோ பெருநகர் லெமான்ட் ஹிந்து ஆலயத்தில் சென்னை சங்கர நேத்ராலயாவுக்கு நிதி திரட்டும் பொருட்டாக இசைநிகழ்ச்சி ஒன்று நடந்தேறியது. உலக அளவில் கண்மருத்துவத்தில் தன்னிகரில்லாச் சேவை செய்துவரும் சங்கர நேத்ராலயா, ஏழை எளியோருக்கு இலவசமாகக் கண் மருத்துவ சேவையை வழங்குகிறது. இதுபற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தவும், அந்தச் சேவைக்கு நிதி திரட்டும் நோக்கத்துடனும் திருமதி வனிதா ஆச்சார் அவர்களின் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் பத்மபூஷன் டாக்டர் எஸ்.எஸ் பத்ரிநாத் அவர்களின் உறவினரான இவர், நேத்ராலயாவின் சேவைகளுக்கு நீண்ட காலமாக ஆதரவளித்து வருகிறார்.

நிகழ்ச்சி விநாயகர் துதியோடும், வரவேற்புரையோடும், நிகழ்ச்சியின் நோக்கம் குறித்த சிற்றுரையோடும் ஆரம்பமானது. நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த திரு விக்னேஷ் ராமகிருஷ்ணன் கலைஞர்களை அறிமுகப்படுத்தினார். அக்ஷயா மியூசிக் அகாடெமியின் தலைமை வித்வான் திருமதி மினு பசுபதி, உடன் பாடிய செல்வி அக்ஷயா கண்ணன், வயலின் கலைஞர் திரு ரிஷப் ரெங்கநாதன், மிருதங்கக் கலைஞர் திரு சிவகங்கை விஷ்வக் குமாரன் நால்வரும் இந்த உன்னதமான சேவைக்குச் சன்மானம் பெற்றுக்கொள்ளவில்லை.

நிகழ்ச்சியின் தனிச்சிறப்பு, கண் பற்றிய கிருதிகளைத் தேர்ந்தெடுத்து வழங்கியதும், பாரதத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருத கீர்த்தனைகளை வழங்கியதும் ஆகும். "சதாசிவ குமாரா", "பன்னீர் கொண்டொரு", மற்றும் "கடைக்கண் வைத்தென்னை" ஆகிய தமிழ்ப் பாடல்களில் கச்சேரி களைகட்டியது. "சம்போ சிவசங்கர" என்ற சம்ஸ்கிருத பாடல் அற்புதம். இடையில் சங்கர நேத்ராலயா அடித்தட்டு மக்களுக்கெனச் செய்துவரும் "நடமாடும் கண் அறுவை சிகிச்சைப்பிரிவு", "இலவச கண்சிகிச்சை முகாம்கள்" மற்றும் "தொலைத்தொடர்பு கண் மருத்துவம்" பிரிவுகளின் சேவைகள் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து நேத்ராலயாவின் நண்பரும் ஆதரவாளருமான டாக்டர் ராஜ் ராஜாராம் அவர்கள் 'பார்வையைப் பரிசாக' வழங்குவது குறித்து விளக்கியதும், 'கண் தான உறுதிமொழி' நிகழ்வும் சிறப்பாக அமைந்தன.

கச்சேரியின் இரண்டாம் பகுதியில் "ராரா ராஜீவலோசனா" (தெலுங்கு), "அன்னபூர்ணே விசாலாக்ஷி" (சம்ஸ்கிருதம்), "கண்டு கண்டு நீ" (கன்னடம்) மற்றும் நிறைவாக "மான் கி ஆன்க்கேம்" (ஹிந்தி) பாடல்களில் அரங்கமே ஆனந்த சாகரத்தில் திளைத்திருந்தது. பாடகர்களுக்கும் கலைஞர்களுக்கும் மலர்மாலை அணிவித்து, பஷ்மினா சால்வை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. நேத்ராலயாவின் சார்பில் மினு பசுபதி அவர்களுக்குச் சிறப்பு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

சங்கர நேத்ராலயாவின் ஓம் டிரஸ்ட்டிற்கு வழங்கப்படும் நன்கொடைக்கு வருமான வரிச்சட்டத்தின் 501(C)(3) கீழ் 100 சதவிகித வரிவிதிவிலக்கு உண்டு.

மேலும் விவரங்களுக்கு:
S.V. ஆச்சார்யா, பொருளாளர், சங்கர நேத்ராலயா ஓம் மிஷன் டிரஸ்ட் Inc, USA.
தொலைபேசி: (855)4NETHRAA (இலவசம்)
மின்னஞ்சல்: acharya@snomtrust.org
காசோலைகளை Sankara Nethralaya OM Trust Inc என்ற பெயரில் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
வலைத்தளம் மூலமாக நன்கொடை வழங்க: www.sankaranethralayausa.org

இருங்கோவேள்,
லெமான்ட், சிகாகோ

© TamilOnline.com