ஜலதோஷ மூலிகை
அத்தியாயம் 11
அருண் தனக்கு வந்திருந்த கடிதத்தில் எழுதியிருந்தபடியே மற்றொரு கடிதத்தைப் பிரிக்காமல் தனது அப்பா மூலமாக ஜட்ஜ் குரோவிடம் கொடுத்தான். எப்பொழுது ஜட்ஜ் ஃபோன் செய்வார் எனக் காத்திருந்தான்.

அருண் எதிர்பார்ததபடியே சில நாட்கள் கழித்து, ஒரு வெள்ளிக்கிழமை இரவு ஜட்ஜ் குரோவிடமிருந்து ஃபோன் வந்தது. அவர், அம்மா கீதாவிடம் பேசி, ஒரு வேலைக்கு அருண் உதவவேண்டும் என்றும், அதற்கு அவன் மறுநாள் தன்னுடன் வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மறுநாள் சனிக்கிழமை ஆதலால், கீதா மறுக்கவில்லை. அருண், மறுநாள் காலை எப்போது விடியும் என்று அரை மணிக்கு ஒருதரம் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே தூங்கிப் போனான்.

அருண் தூங்கிக்கொண்டிருந்த போது, கீதா அவன் அறைக்குள் வந்து அவனது போர்வையைச் சரி செய்தார். அவன் நெற்றியில் செல்லமாக முத்தமிட்டு, "I am so proud of you. ஜட்ஜ் குரோவ் உன்னை உதவிக்கு கூப்பிடறாரு. I am blessed" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

மறுநாள், சனிக்கிழமை காலை, அருண் சீக்கிரமே எழுந்து ரெடி ஆகிவிட்டான். கீதாவுக்கு அவனது ஆர்வம் புரிந்தது. ஜட்ஜ் வீட்டுக்கு அருணை வண்டியில் அழைத்துக்கொண்டு போனார்.

ஜட்ஜ் வீட்டு வாசலில் காத்திருந்தார். கீதாவும் அருணும் வருவதைப் பார்த்தவுடன் கை அசைத்தார். வண்டி நின்றதுதான் தாமதம், அருண் கதவைத் திறந்து துள்ளிக்கொண்டு வெளியே ஓடினான். "குட் மார்னிங் ஜட்ஜ் குரோவ். ரொம்ப தேங்க்ஸ்," என்றான் உற்சாகமாக.

"குட் மார்னிங் மை பாய். குட் மார்னிங் கீதா. அருணை என்கூட அனுப்ப சம்மதித்ததற்கு ரொம்ப நன்றி, அருண் சொல்லிருப்பான்னு நினைக்கிறேன்."

"ஆமாம், ஜட்ஜ் குரோவ். நாங்கதான் உங்களுக்கு நன்றி சொல்லணும் அருணுக்கு இந்த வாய்ப்பு கொடுக்கிறதுக்கு."

ஜட்ஜ் அவர்கள், பேஸ்பால் தொப்பி, டிஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்துகொண்டு ஒரு பத்து வயது இளமையாகத் தெரிந்தார். "கீதா, நாங்க வருவதற்கு மதியம் ஆகிவிடும். பரவாயில்லையா?" என்று கேட்டார்.

"ஜட்ஜ் குரோவ், ஒண்ணும் பிரச்சனையில்லை. நான் அருணிடம் மதிய சாப்பாட்டுச் செலவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறேன்" என்றார் கீதா.

"இதென்ன கூத்து! சாப்பாடு எல்லாம் நான் கவனிச்சுக்க மாட்டேனா அம்மா? அதைப்பத்திக் கவலைப்பட வேண்டாம். நானும் அருணும் இன்னைக்கு we are going to have a lot of fun."

கீதா, அருணுக்கு விடை கொடுத்துவிட்டுச் சென்றார். ஜட்ஜ் குரோவ் தனது வண்டியைத் திறக்க, அருண் பின்புற இருக்கையில் அமர்ந்து கொண்டான். வண்டியைக் கிளப்பும்போது அருணுக்குப் பிடித்த வானொலி நிலையத்தை அவர் வைத்தார். அருண் தன் அம்மாவுடன் போகும்போது எல்லாம் N.P.R. வானொலி கேட்டுக் கேட்டு சலித்துப் போயிருந்தான்.

பாட்டு கேட்டுக்கொண்டே போகும்போது ஜட்ஜ் குரோவ் அருணிடம் பேசிக்கொண்டு வந்தார். அருண் கேள்விகள் கேட்க, அவரும் பதில் கொடுத்து உரையாடலைத் தொடர்ந்தார்.

சற்று நேரத்திற்குப் பின் ஜட்ஜ் குரோவ் நகர்ப்புறச் சாலை (highway) ஒன்றின் ஓரமாக இருந்த ஒரு கடையில் வண்டியை நிறுத்தினார். அந்த இடத்தில், 'Farm Stand' என்று எழுதி இருந்தது. 'Welcome to Hortianna free produce' என்று அதன் கீழே நக்கலாக எழுதப்பட்டிருந்தது. அருணுக்கு அங்கு எதற்காக வந்திருக்கிறோம் என்று புரியவில்லை. அந்த இடத்தில் பலவிதமான காய்கறிகள் வைக்கப்பட்டிருந்தன. பார்க்கவே ஜோராக இருந்தது.

ஜட்ஜ் குரோவ் செய்தித்தாளை எடுத்துக்கொண்டு ஓர் இருக்கையில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தார். அருணைத் தன்னருகில் இருந்த இருக்கையில் உட்காரச் சொன்னார். அருணுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அங்குமிங்கும் நடந்துகொண்டு இருந்தான். அந்த இடத்திற்கு வண்டிகள் வந்துபோயின. மக்கள் வேண்டிய காய்கறி, பழங்களை வாங்கிக்கொண்டு போனார்கள். அத்தனைப் பேர் வந்தபடியே இருந்தாலும், அருணிடம் பேச அங்கு யாருமே இல்லை, ஜட்ஜ் குரோவ் தவிர.

அரைமணி நேரம் போனது. ஜட்ஜ் குரோவின் மௌனம் இன்னும் அவனது படபடப்பைக் கூட்டியது. சில நிமிடங்களுக்குப் பிறகு அங்கு ஒரு வேன் நுழைந்தது. அந்த வண்டியின் மேலே ஒரு வர்ணக்கொடி கட்டப்பட்டிருந்தது. அந்த வர்ணக்கொடியை பார்த்தவுடன் அருணுக்கு வந்த adrenaline rush-ல் ஒரு ஒலிம்பிக் பந்தய ஓட்ட வீரன்போல வேகமாக அந்த வண்டியை நோக்கி ஓடினான். அந்த வண்டியின் கதவு திறந்ததுதான் தாமதம், "ஹில்லரி எப்படி இருக்கிறாய்?" என்று கத்தினான்.

அதிலிருந்து ஆச்சரியத்துடன் ஹில்லரி இறங்கினாள். அவளால் அருணைப் பார்த்த வியப்பை அடக்கவே முடியவில்லை.

"நண்பா, அருண் நண்பா! எப்படி இருக்கிறாய்?" என்று அவள் அவனை அணைத்துக்கொண்டாள். "நண்பா, மன்னித்துவிடு, நான் அன்று உன்னிடம் சொன்னபடி சந்தைக்கு வரமுடியாமல் போய்விட்டது. எங்களை வரக்கூடாதென்று தடுத்து விட்டார்கள் சில முரடர்கள்."

அருணின் கண்களில் கண்ணீர் வந்தது. தன்னால் அவளுக்கும், அவளது கிராம மக்களுக்கும் கஷ்டம் வந்துவிட்டதே என்று.

"நண்பா, நாங்கள் இனிமேல் வொர்த்தாம்டன் நகர்வரைக்கும் அவ்வளவு தூரம் போகவேண்டியது இல்லை. இங்கேயே கடை வைப்பதற்கு அனுமதி கிடைத்துவிட்டது. என்னை எப்பொழுது வேண்டுமென்றாலும் இங்கே நீ வந்து வாரக் கடைசியில் சந்திக்கலாம்" என்றாள். அவளோடு வந்தவர்கள் காய்கறிகள், மூலிகைகள், மற்றும் பழங்களைக் கீழே இறக்கிக் கொண்டிருந்தார்கள்.

ஜட்ஜ் குரோவ் புன்சிரிப்போடு, "அருண், இப்போ புரிந்ததா நாம எதுக்காக இங்கே காத்துகிட்டு இருந்தோம்னு? இனிமே இவங்களுக்கு அந்த ஹோர்ஷியானா பயலுக எந்தத் தொந்தரவும் கொடுக்க முடியாது" என்றார்.

அதற்குள் ஹில்லரி வண்டியிலிருந்து ஜலதோஷ மூலிகையைக் கொண்டுவந்து அருணுக்கு கொடுத்தாள். அருண் அதைச் சந்தோஷமாக வாங்கிக் கொண்டான்.

"To our friendship" என்றான்.

"To our cold free friendship" என்று ஹில்லரி சொல்லிச் சிரித்தாள்.

*****


திரும்பிப் போகும்போது, அருண் ஜட்ஜ் குரோவிடம் இது எப்படி நடந்தது என்று கேட்டான். அதற்கு அவர், இது அவருக்கு எழுதப்பட்ட கடிதத்தின் ரகசியம் என்றும், அதை அவரால் அவனிடம் பகிர்ந்துகொள்ள முடியாது என்றும், சிரித்துக்கொண்டே சொன்னார்.

"அருண், அந்த Pueblo Del Indegna கிராமத் தலைவர் அவர்களுக்கும் ஒரு கடிதம் போயிருந்திருக்கு. யாரப்பா அந்தக் கடிதம் எழுதியது? மிகவும் சக்தி வாய்ந்தவர் போலிருக்கே! உன்னைப் பற்றி ரொம்ப பெருமையா எழுதியிருந்தார்" என்று ஜட்ஜ் சொன்னார்.

"ஜயா, எனக்கு ஒரு யோசனை வருகிறதுது. நான் சொல்லலாமா?" என்று கேட்டான்.

"தாராளமா!"

அவரிடம் மெதுவாகச் சொன்னான்.

"சூப்பர்! கட்டாயமா! என்னால் ஆன எல்லா உதவியையும் பண்ணறேன். ஒரு கலக்கு கலக்கிடலாம். கவலைப்படாதே. நாளைக்கு நம்ம நகர விழாவில் சந்திக்கலாம்" என்றார்.

அவர் ஓட்டிய வண்டி எர்த்தாம்டன் நகரை நோக்கிச் சீறிப் பாய்ந்தது.

(அடுத்த இதழில் நிறைவடையும்)

கதை: ராஜேஷ்
படம்: Anh Tran

© TamilOnline.com