அரசியல் என்பது தீண்டத்தகாதது அல்ல
அரசியல் என்பது தீண்டத்தகாதது அல்ல; வேண்டத்தகாதது அல்ல. அரசியலில் இருக்கும் எல்லோரும் அயோக்கியர்கள் அல்ல. வெளியில் இருப்போர் எல்லோருமே யோக்கியர்கள் என்று கூற முடியாது. கறுப்பு ஆடுகள் அரசியலிலும் இருக்கலாம் - வெளியிலும் இருக்கலாம்.

அரசியல் என்ற சொல் தவறு என எண்ணியிருந்தால் திருவள்ளுவர் அதற்கென தனி அதிகாரம் எழுதி இருக்க மாட்டார். பொருட்பாவில் அவர் அரசியல் பற்றி மட்டும் 249 குறட்பாக்களை எழுதியிருந்தார். எனவே அரசியல் என்பதே தவறானது அல்ல. சிலர் தவறு செய்கிறார்கள் என்பதற்காக அரசியல் வாதிகள் எல்லோருமே தவறானவர்கள் அல்ல.

திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான பா. விஜய் எழுதிய கவிதைகள் அடங்கிய 12 புத்தகங்களை வெளியிட்டு தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி பேசியதிலிருந்து...

*****


இன்று பெண்ணியம், பெண் விடுதலை குறித்து அதிகமாகப் பேசப்படுகிறது. தாலி என்பது பெண்ணடிமை என்று கருதி சிலர் அதை எடுத்துவிடுகிறார்கள். அவ்வாறு செய்யும் பெண்கள் 'தாலி அணியப் போவதில்லை' என்று திருமணத்தின்போதே நிபந்தனை விதிக்க வேண்டும். அல்லது ஆணும் தாலியையோ ஏதாவது ஓர் அடையாளத்தையோ அணியும்படி வலியுறுத்த வேண்டும்.பெண்ணியம் என்பது கெட்டுப் போவதற்கு வழி சொல்வதல்ல.

திரைப்படத் தயாரிப்பின்போது எடிட்டிங் சமயத்தில் ஒலியையும் ஒளியையும் இணைத்துப் பதிவு செய்யப்பட்டாலும், பிரிண்ட் செய்யும்போது அதே வரிசையில் இருப்ப தில்லை. காரணம், ஒளிதான் வேகமானது. ஒலி பிறகுதான் வரும்.

எனவே முதலில் ஒலியை 19 அடி பிரேம் முன்னால் பதிவு செய்து பிரிண்ட் எடுக்கப்படும். அதன் பிறகே ஒளி பதிவு செய்யப்படும். அப்போதுதான் திரைப்படபிலிமில் இரண்டும் ஒன்றாகப் பதிவாகும்.

அதுபோல்தான் ஆண் சிறிது முன்னால் செல்ல வேண்டும். பெண் அவரைத் தொடர்ந்து வரவேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் இருவரும் இணைந்து செயல்பட முடியும்.

பல் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜே.ஜி. கண்ணப்பன் நிறுவிய அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சரும் எம்.ஜி.ஆர். கழகத் தலைவருமான ஆர்.எம். வீரப்பன் பேசியதிலிருந்து...

*****


கண்களைத் தானம் செய்ய பலருக்கு மனமிருக்கு; ஆனால் வழிதான் தெரிவதில்லை. கண்தானம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேலோட்டமாக இல்லாமல் முனைப்புடன் இருக்க வேண்டும். கண்களைத் தானம் செய்யப்
பதிவு செய்தால் மட்டும் போதாது. மரணம் ஏற்பட்டால் கண் வங்கியை எந்தத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டும். 6 மணி நேரத்துக்குள் கண்களை எடுக்க வேண்டும் என்ற விவரங்களையும் அவர்கள் மனதில்
பதியும்படி எடுத்து சொல்ல வேண்டும். இலங்கை எவ்வளவு சிறிய நாடு. ஆனால் அங்கு அதிக எண்ணிக்கையில் கண்கள் தானம் செய்யப்படுகின்றன. அதற்குக் காரணம் புத்தமதம். கண்களைத் தானம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்கிறது அந்த மதம். கண்களைத் தானம் செய்வதால் எந்த தீங்கும் வருவதில்லை என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்.

சங்கர நேத்ராலயா மருத்துவமனை சார்பில் கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் துவதற்காக தொடங்கப்பட்ட 'தர்ஷன்' என்ற பத்திரிகை வெளியிட்டு விழாவில் பிரபல எழுத்தாளர் சிவசங்கரி கலந்து கொண்டு பேசியதிலிருந்து...

*****


யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். யார் புதிய கட்சி தொடங்கினாலும் வரவேற்கிறோம். ஆனால் கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. அதுபோல் எம்.ஜி.ஆர். படம், காமராஜர் படம் போடுவதால் அவர்களின் அரசியல் வாரிசாகிவிட முடியாது. மக்கள் ஏற்று கொள்கிறார்களா என்றுதான் பார்க்க வேண்டும்.

பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர் பத்திரிகை பேட்டி ஒன்றில் பேசியதிலிருந்து....

*****

ஒரு அரசு சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் சிறந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவன தலைவர்கள் ஆகியோர் இணைந்து சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அந்த வகையில் அரசியல் மற்றும் பொது நிர்வாக அமைப்புகள் பற்றிய முழுமையான கல்வி ஆசிய அளவில் எங்கும் பயிற்று விக்கப்படவில்லை.

அரசியல்வாதிகளுக்கு வெறும் அரசியல் மட்டும் தெரிந்தால் போதாது. அரசியல் சார்ந்த தேர்தல் உள்ளிட்ட அனைத்து அடுக்குகள் பற்றிய அறிவும் இருக்க வேண்டும். அப்போதுதான் சிறப்பாகச் செயல்பட முடியும்.

பார்லிமெண்டில் நிதியமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் சமர்ப்பிக்கிறார். இதை எப்படிப் படிக்க வேண்டும் என்றுகூட தெரியாமல் பல பேர் திண்டாடுகின்றனர்.

பத்திரிகையாளர்களிடையே முன்னாள் தேர்தல் அதிகாரி டி.என். சேஷன் பேசியதிலிருந்து...

*****


சினிமாவை மக்கள் ரசிக்கலாம், பாராட்ட லாம், ஊக்குவிக்கலாம். பாரதிராஜாவையோ, சினிமாத் துறையில் உள்ள மற்றவர்களையோ அவர்கள் என்ன சாதனை புரிகிறார்கள் என்பதை மட்டும் கவனியுங்கள். அவர்களை 'ரோல்மாடல்' ஆகக் கருதிப் பின்பற்றாதீர்கள். சினிமாத்துறையில் உள்ள தனி மனிதனை முழுமையாக நம்பி எதிலும் இறங்கிவிடாதீர்கள். அதிகப் பொறுப்புகளையோ, பதவியையோ அளிக்காதீர்கள்.

பிறப்பும் இறப்பும் எப்போது வேண்டுமானாலும் நமக்கு வரலாம். ஆனால், இடைப்பட்ட காலத்தில் நாம் பூமியில் விட்டு செல்லும் சுவடுகள் முக்கியம். இந்த பூமிக்கு நமக்கு அனைத்தும் அளித்துள்ளது. நாம் அதற்கு என்ன கைமாறு செய்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

கரூரில் ரோட்டரி டெக்ஸ் சிட்டி புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டு பேசியதிலிருந்து...

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com